Header image alt text

News

Posted by plotenewseditor on 27 August 2013
Posted in செய்திகள் 

யாழ். காணி சுவீகரிப்பு வழக்கு, பிரதிவாதிகளுக்கு அவகாசம்-

யாழ்ப்பாணத்தில் உள்ள தமது பூர்வீக காணிகளை அரசாங்கம் கையகப்படுத்துவதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிவாதிகள் தமது ஆட்சேபனையை முன்வைப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் நவம்பர் 07ஆம் திகதிவரை கால அவகாசம் வழங்கியுள்ளது. யாழ்.ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் அவர்கள், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லஷ்மன் கதிர்காமரின் மகன், எஸ்.ஜே.சி கதிர்காமர் உள்ளிட்டவர்கள் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். பொதுத் தேவைகளுக்கு எனத் தெரிவித்து, 6,831 ஏக்கர் காணியை அரசாங்கம் கையகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதால், அதனை தடுப்பதற்கு பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் பிறப்பிக்குமாறு இந்த மனுவின் ஊடாக நீதிமன்றத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மனுவின் பிரதிவாதிகளாக, காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன், யாழ்.மாவட்ட காணி சுவீகரிப்பு உத்தியோகத்தர் ஏ.சிவசாமி மற்றும் யாழ் காணி அகழ்வு உத்தியோகத்தர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர். மனுவின் பிரதிவாதிகளால் இன்று ஆட்சேபனை தாக்கல் செய்யப்படவிருந்ததுடன், பிரதிவாதிகள் சார்பில் ஆஜராகியிருந்த பிரதி சொலிசிஸ்டர் நாயகம் சவீந்ர பெர்னான்டோ மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் கால அவகாசத்தினை வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். இதற்கமைய, எதிர்வரும் நவம்பர் 07 ஆம் திகதிவரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

யாழில் அரச அதிபர்கள் நவநீதம்பிள்ளை சந்திப்பு-

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இன்று யாழ்ப்பாணத்தில் பல்வேறு தரப்பினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இன்றுகாலை வட மாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறியை அவர் சந்தித்துள்ளார். இதன்போது யாழ். ஆளுனர் அலுவலகத்திற்கு முன்பாக காணாமற் போனவர்களின் உறவினர்கள் அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தியிருந்தனர். பின்னர் யாழ். பொது நூலகத்தில் வட மாகாண மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களையும் நவநீதம்பிள்ளை சந்தித்து பிரதேச அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து விரிவாக கேட்டறிந்துள்ளார். இந்த சந்திப்பு இடம்பெற்ற சந்தர்ப்பத்திலும் பொது நூலகத்திற்கு வெளியில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்றிருந்தது. காணாமற்போன தமது உறவினர்களை மீட்டுத் தருமாறு கோரி காணாமற் போனவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானவர்கள் இந்தப் போராட்டத்தினை நடத்தியிருந்தனர். காணாமற் போனோரை தேடிக் கண்டறியும் குழுவின் ஏற்பாட்டில் இப்போராட்டம் நடத்தப்பட்டிருந்தது.

இந்திய மீனவப் படகுகளை அரசுடமையாக்க நடவடிக்கை-

சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசிக்கும், இந்திய மீனவர்களின் படகுகளை அரசுடமையாக்குவது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, சட்டமா அதிபர் உள்ளிட்ட பிரிவுகளை கோரியுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிமல் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசிப்பதனை தடுப்பதே இதன் முக்கிய நோக்கமென அவர் கூறியுள்ளார். இதற்கமைய, தற்போது கைப்பற்றப்பட்டுள்ள இந்திய மீனவர்களுக்கு சொந்தமான 12 படகுகளை அரசுடமையாக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

முன்னாள் புலி உறுப்பினர்களை வவுனியா சிறைக்கு மாற்ற நடவடிக்கை-

போதைப்பொருள் பாவனையால் குற்றவாளியாகும் நபர்களை புனர்வாழ்வளிப்பதற்கு சேனபுரவில் அமைக்கப்பட்டுள்ள புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பிவைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தற்போது சேனபுர புனர்வாழ்வு மையத்தில், முன்னாள் புலி உறுப்பினர்கள் சிலருக்கு புனர்வாழ்வளிக்கப்படுகின்றது. முன்னாள் புலி உறுப்பினர்களை வவுனியா சிறைச்சாலைக்கு மாற்றிய பின்னர், போதைப்பொருள் பாவனையால் குற்றவாளியாகும் நபர்களை சேனபுரவிற்கு அனுப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் பீ.எஸ் விதானகே தெரிவித்துள்ளார். இங்கு ஒரே சந்தர்ப்பத்தில் சுமார் ஆயிரம் பேரை புனர்வாழ்வளிப்பதற்கான வசதிகள் காணப்படுகின்றன. தற்போது போதைப்பொருள் பாவனையாளர்கள் 250 பேர் கந்தக்காடு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் காலங்களில் போதைப்பொருள் பாவனையாளர்களை சிறையில் அடைக்காது, புனர்வாழ்வளிக்க திட்டமிட்டுள்ளோம் என பீ.எஸ் பிதானகே மேலும் தெரிவித்துள்ளார்.

 

தேர்தல் சட்டங்களை மீறிய 192 சம்பவங்கள் பதிவு-

அரசியல் நடவடிக்கைகளுக்காக அரச அதிகாரிகளைப் பயன்படுத்திக் கொள்ளுதல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக பெப்ரல் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.  தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரை 192 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இவற்றில் அதிகமானவை அரச அதிகாரிகளுக்கு எதிராகவே கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

ஒலுவில் துறைமுகம், பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு-

அம்பாறை ஒலுவில் துறைமுகம் நிர்மாணிப்பிற்காக சுவீகரிக்கப்பட்டு நீண்டகாலமாக நஷ்டஈட்டுக் கொடுப்பனவு வழங்கப்படாதிருந்த காணி உரிமையாளர்களுக்கு எதிர்வரும் முதலாம் திகதி முற்கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துறைமுக நிர்மாணிப்பிற்காக கடந்த 11 வருடங்களுக்கு முன்னர் கையேற்கப்பட்டுள்ள 49 காணிச் சொந்தக்காரர்களுக்கு நஷ்டஈடு வழங்குவது தொடர்பாக இழுபறி நிலை ஏற்பட்டு வந்தது. இதனைக் கருத்திற்கொண்ட கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமா லெப்பை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்குவது தொடர்பான கோரிக்கையை அமைச்சர் அதாவுல்லாவிடம் முன்வைத்திருந்தார். இக்கோரிக்கைக்கு அமைய துறைமுகங்கள் அபிவிருத்தி நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தலைமையில் நேற்று ஒலுவில் துறைமுக மகாபொல பயிற்சி நிலையத்தில் காணிச் சொந்தக்காரர்களுக்கும் அமைச்சர்களுக்குமிடையில் பேச்சுவார்த்தையொன்று நடைபெற்றது. இதற்கமைவாக நஷ்டஈட்டுக் கொடுப்பனவை சுமுகமாக வழங்குவதற்கு முன்னர் நிலஅளவைத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள மதிப்பீட்டுத் தொகைக்கேற்ப ஒரு பேர்ச்சிற்கு 30 ஆயிரம் ரூபா வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மிகுதிக் கொடுப்பனவு பின்னர் வழங்குவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

இலங்கை – பெலாரஸ் உடன்படிக்கைகள் கைசாத்து-

இலங்கைக்கும் பெலாரசுக்குமிடையில் ஏழு உடன்படிக்கைகள் மற்றும் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் நேற்று கைசாத்திடப்பட்டுள்ளன. தற்பொழுது பெலாரஸ் நாட்டில் மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அந்நாட்டு ஜனாதிபதி அலெக்சாந்தர் லூக்கஸன் கோவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு, இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ விமான பயணச் சீட்டுடையவர்களை விசாக்களிலிருந்து விடுவித்தல், குற்றவியல் தொடர்பான விடயங்களின்போது பரஸ்பர சட்ட ஒத்துழைப்பு தொடர்பான சாசனம், சட்டம் தொடர்பான புரிந்துணர்வு, இரு நாடுகளுக்குமிடையிலான இரட்டை வரிவிதிப்பை தடுத்தல், சுற்றுலாத் துறையின் ஒத்துழைப்பு மற்றும் இராணுவ துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு என முதலான உடன்படிக்கைகள் கைசாத்திடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

 

மூதூர் கொலைகள் குறித்து சட்டமா அதிபரிடம் நவீப்பிள்ளை கேள்வி-

திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் மற்றும் மூதூரில் இடம்பெற்ற 17 தொண்டு பணியாளர்களின் படுகொலைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை சட்டமா அதிபரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார். சட்டமா அதிபர் பாலித பெர்னாண்டோவை நேற்று சந்தித்தபோதே மேற்கண்ட விவகாரம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார். அத்துடன், நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் ஆகியோரையும் நேற்று சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். அதுமட்டுமன்றி தேசிய மொழிகள் மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவையும் நவீபிள்ளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். சட்டமா அதிபருடனான சந்திப்பின் போது இந்த இரண்டு கொலைச்சம்பவங்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி அவர் விசாரித்துள்ளார். 2006 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் திகதி கொல்லப்பட்ட தொண்டு நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் 5 மாணவர்களின் கொலையுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை தொடர்பில் அவர் கேட்டபோது, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டதாக சட்டமா அதிபர் எடுத்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2006ஆம் ஆண்டு திருமலையில் 5 மாணவர்களை சுட்டுக்கொன்றதாக சந்தேகிக்கப்படும் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் 12பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் அந்த 12 பேரையும்  குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். பட்டினிக்கு எதிரான நடவடிக்கை எனும் பிரெஞ்சு நிறுவனத்தை சேர்ந்த 17 தொண்டு சேவையாளர்கள் கொலை தொடர்பான விசாரணைகள் இன்னும் நடைபெறுகிறது என சட்டமா அதிபர் எடுத்துரைத்துள்ளார். இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறு சர்வதேச மன்னிப்பு சபையும், மனித உரிமைகள் கண்காணிப்பகமும் அரசாங்கத்தை வற்புறுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.

 

வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பம்-

வடக்கு, மத்திய மற்றும் வட மத்திய மாகாண சபைத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளார் அட்டைகள் தபால் திணைக்களத்திடம் இன்று ஒப்படைக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. வாக்காளார் அட்டைகள் நாளைமுதல் குறித்த மாகாண வாக்காளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம் மொஹமட் குறிப்பிட்டுள்ளார். தபால் திணைக்களத்தினால் வாக்காளர் அட்டைகள் பகிர்ந்தளித்தல் நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன. அதேவேளை செப்டெம்பர் 13ஆம் திகதிக்கு முன்னர் வாக்காளார் அட்டை பகிர்ந்தளிப்பு நடவடிக்கைகளை நிறைவுசெய்ய தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. செப்டெம்பர் 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை விசேட வாக்காளர் அட்டை பகிர்ந்தளிப்பு நாளாக குறிப்பிடப்பட்டுள்ளதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் கூறியுள்ளார். எவ்வாறாயினும் குறித்த காலப்பகுதிக்குள் வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள் தமது பிரதேச தபால் திணைக்களத்தில் வாக்காளர் அட்டைகளை பெறமுடியும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

தென் கொரிய பிரதமர் இலங்கைக்கு விஜயம்-

தென்கொரிய பிரதமர் சன்ங் ஹொன்ங் வொன், இருநாள் உத்தியோகபூர்வ சுற்றுப்பயணம் மேற்கொண்டு நாளை தினம் இலங்கை வருகிறார். 1977ம் ஆண்டுக்கு பின்னர் தென்கொரிய பிரதமர் ஒருவர் இலங்கைக்கு வருவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விஜயத்தின்போது தென்கொரிய பிரதமர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட அரசியல் உயர் அதிகாரிகள் பலரையும் கண்டு கலந்துரையாடலில் ஈடுபட உள்ளமை குறிப்பிடத்தக்கது. அதன்போது இரு நாடுகளுக்கிடையிலான உறவினை மேம்படுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இச்சுற்று பயணத்தின்போது தென்கொரிய பிரதமர் இலங்கை – கொரிய சுற்றுச்சூழல் அழகுபடுத்தல் தொடர்பான நிகழ்வின் ஓர் பகுதியில் கலந்துகொள்ள உள்ளதுடன் கொழும்பு துறைமுகத்தையும் பார்வையிடவுள்ளார்.

வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் பொதுக்கூட்டம்-

Vavuniya TNA meeting August 26 -2013 (1) Vavuniya TNA meeting August 26 -2013 (3) Vavuniya TNA meeting August 26 -2013 (5) Vavuniya TNA meeting August 26 -2013 (6) Vavuniya TNA meeting August 26 -2013 (7) Vavuniya TNA meeting August 26 -2013 (9)

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் பொதுக்கூட்டம் வவுனியா குருமண்காடு கலைமகள் திறந்தவெளி விளையாட்டரங்கில் இன்றுமாலை 5மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. கூட்டமைப்பின் ஐந்து கட்சித் தலைவர்களான இரா.சம்பந்தன், வீ.ஆனந்தசங்கரி, தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும், வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வி விக்னேஸ்வரன் மற்றும் வவுனியா மாவட்ட தமிழ்; தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களும் மாலை அணிவிக்கப்பட்டு குருமண்காடு சந்தியிலிருந்து கலைமகள் திறந்தவெளி விளையாட்டரங்கிற்கு ஊர்வலமாக அழைத்துவரப்பட்டனர். இதனைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் கூட்டம் ஆரம்பமானது, இக்கூட்டத்தின் ஆரம்ப நிகழ்வாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட ஒன்பது வேட்பாளர்களும் மக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்கள். இதனையடுத்து கட்சித் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், வீ.ஆனந்தசங்கரி, தர்மலிங்கம் சித்தார்;த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், யோகேஸ்வரன், அரியநேந்திரன், வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் உரையாற்றினார்கள். இதனைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எழுச்சிப்பாடல் இறுவெட்டு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் அவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்த எழுச்சிப் பாடலானது வவுனியாவிலுள்ள உள்ளுர் இளைஞர்களாலேயே இயற்றப்பட்டு, இசையமைக்கப்பட்டு பாடப்பட்ட பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்படி நிகழ்வுகளில் உள்ளுராட்சி சபை தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் பெருந்திரளான பொதுமக்களும் பங்கேற்றிருந்தனர்.

News

Posted by plotenewseditor on 26 August 2013
Posted in செய்திகள் 

இந்திய புலனாய்வுத்துறை இரண்டாவது முறை எச்சரிக்கை-

தமிழக கடலோரப் பகுதிகளில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்களை நடத்தக்கூடும் என இந்திய புலனாய்வுத் துறையினர் இரண்டாவது முறையாக எச்சரித்துள்ளனர். ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக புலனாய்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையிலிருந்து 35 தீவிரவாதிகள், தமிழகத்திற்குள் ஊடுருவியிருப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து புலனாய்வுத்துறை இரண்டாவது முறையாக எச்சரிககை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து தமிழக கடலோர மாவட்டங்களில் பொலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, இலங்கையிலிருந்து, தொலைபேசிமூலம் அச்சுறுத்தல்  விடுக்கப்பட்டுள்ளதாகவும், மிரட்டியவர் யார் என்பது தொடர்பில் இலங்கை தரப்பிடம் தமிழக பொலீசார் விசாரணை நடத்தவுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுன்னாகம் மின் உப நிலையத்தை இயக்க நடவடிக்கை-

இரண்டு தசாப்தங்களின் பின்னர் மின்சக்தி கட்டமைப்பில் வடக்கையும் தெற்கையும் இணைக்கும் சுன்னாகம் மின் உப நிலையம் விரைவில் இயங்கவுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் தொடக்கம் சுன்னாகம் மின் உப நிலையத்தின் ஊடாக யாழ் குடாநாட்டிற்கு மின்சாரத்தை விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சுன்னாகம் மின் உப நிலையத்திலிருந்து 63 மெகாவொட் மின்சாரம் யாழ் குடாநாட்டிற்கு விநியோகிக்கப்பட உள்ளதாகவும் இதன்மூலம் ஒரு இலட்சத்துக்கு 20ஆயிரம் வீடுகளில் வாழும் மக்கள் நன்மையடைவார்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சுன்னாகம் கிரீட் மின் உப நிலையம் இயங்கும் பட்சத்தில் யாழ் குடாநாட்டின் மின்சக்தி தேவையை முழுமையாக நிறைவேற்ற முடியும் என மின் சக்தி எரிசக்தி அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

 

பொதுநலவாய மாநாட்டுக்கான ஊடகவியலாளர்களை பதிவு செய்ய நடவடிக்கை-

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி தொடக்கம் 17ஆம் திகதிவரை கொழும்பில் நடைபெறவுள்ளது. பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாடு தொடர்பில் செய்தி சேகரிப்பதற்காக சுமார் ஆயிரம் உள்நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் வருகைதருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுவதாக வெகுசன ஊடகம் மற்றும் தகவல் அமைச்சு தெரிவித்துள்ளது இதற்கமைய மாநாட்டிற்கு வரும் ஊடகவியலாளர்களை பதிவுசெய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் சரித்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார். றறற.உhழபஅ2013.டம என்ற இணையளத்திலுள்ள நடைமுறைகளுக்கமைய சர்வதேச மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் தற்போது ஊடகவியலாளர்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் வெகுசன ஊடகம் மற்றும் தகவல் அமைச்சின் செயலர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

வலது குறைந்தோர் உறவினரின் உதவியுடன் வாக்களிக்க அனுமதி-

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலின்போது வலது குறைந்த வாக்காளர்கள் தமது வாக்கினை பதிவு செய்வதற்காக உறவினர் ஒருவரது உதவியை பெறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் வாக்காளரின் உடல் நிலையை விளக்கும் மருத்துவ சான்றிதழ் ஒன்றை வாக்களிப்பு நிலைய அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது

 

உலகின் மிகப்பெரிய மிதக்கும் புத்தக கண்காட்சி கொழும்பில்-

லோகோஸ் ஹோப் (லோகோஸ் நம்பிக்கை) என்ற பெயரிலான உலகிலுள்ள கப்பல் ஒன்றில் நடைபெறும் மிகப்பெரிய புத்தகக்கண்காட்சி கொழும்பு துறைமுகத்தில் இம்மாதம் 30ம் திகதிமுதல் செப்டெம்பர் மாதம் 22ம் திகதிவரை பொதுமக்கள் சென்று பார்வையிடுவதற்காக நங்கூரமிடப்படவுள்ளது. இந்தக் கப்பலில் உள்ள புத்தகங்களை வாசிப்பதற்கும், பார்வையாளர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுவதுடன் அக்கப்பலில் பணிபுரியும் 50 நாடுகளைச் சேர்ந்த சுமார் 400 பேருடன் நேரில் சந்தித்து பேசுவதற்கும் வாய்ப்பு கிடைக்கும். விஞ்ஞானம், விளையாட்டு, பொழுதுபோக்கு, குடும்ப வாழ்க்கை, சிறுவர் புத்தகங்கள், கல்விமான்களுக்குரிய நூல்கள், அகராதிகள், உலகப் படங்கள் போன்றவை உட்பட பலதரப்பட்ட நூல்கள் இந்தக் கப்பலில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கண்காட்சிக்கு செல்லும் பார்வையாளர்களுக்கு கப்பலில் உள்ள வசதிகள், நூல்கள் பற்றிய குறுந்திரைப்படம் முதலில் காண்பிக்கப்படும். இந்தக் கப்பலில் பார்வையாளர்களுக்கு சர்வதேச தரத்திலான சிற்றுண்டிச் சாலையும் இருக்கும். கப்பலுக்குள் செல்வதற்கு பிரவேச கட்டணமாக 100 ரூபா. வயது வந்தவர்களுக்கும் 12 வயதிற்குட்பட்டவர் களுக்கும் இலவசமான அனுமதியும் கொடுக்கப்படவுள்ளது.

 

நீதித்துறை முக்கியஸ்தர்கள் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சந்திப்பு

இலங்கை வந்துள்ள ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை இன்று பிரதம நீதியரசர், சட்டமாஅதிபர் மற்றும் நீதி அமைச்சர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகருக்கும் பிரதம நீதியரசருக்கும் இடையிலான சந்திப்பு உயர்நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் உள்ள பிரதம நீதியரசரின் உத்தியோகபூர்வ அறையில் நடைபெற்றுள்ளது. பின்னர் சட்டமாஅதிபர் திணைக்களத்திற்கு சென்ற நவனீதம்பிள்ளை, சட்டமா அதிபர் பாலித்த பெர்னாண்டோவுடன் கலந்துரையாடியுள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகருக்கும் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் இடையிலான சந்திப்பு இன்றுமுற்பகல் நீதி அமைச்சில் நடைபெற்றுள்ளது.

 

நவநீதம்பிள்ளையின் வருகைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்-

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ராவணா சக்தி அமைப்பு இன்றுகாலை கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது. இதேவேளை இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று அரசாங்கப் பிரதிநிதிகளை சந்திககவுள்ளார். நாளை வடக்கிற்கான விஜயத்தை அவர் மேற்கொள்ளவுள்ளதுடன் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அவர் சந்திக்கவுள்ளார்.

 

தமிழ் பெண்கள் இராணுவத்தில் இணைவு-

இலங்கை இராணுவத்தில் மேலும் 45 தமிழ் பெண்கள் இணைந்துகொண்டுள்ளனர். வவுனியாவில் அமைந்துள்ள வன்னி இராணுவ கட்டளைத் தலைமையகத்தில் இன்று இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இராணுவத்தில் புதிதாக உருவாக்கப்படவுள்ள படைப்பிரிவில் இணைப்பதற்காகவே இவர்கள் தெரிவாகியுள்ளனர். அண்மையில் நாடு பூராகவும் இடம்பெற்ற நேர்முகத் தேர்வுகளில் தோற்றிய தமிழ் பெண்களில் 45பேர் தெரிவுசெய்யப்பட்ட நிலையிலேயே இவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். வடக்கு மற்றும் மலையகத்தை சேர்ந்த தமிழ் யுவதிகளுடன் 10 சிங்கள யுவதிகளும் இன்று இராணுவத்தில் இணைந்துள்ளனர். இவர்களை இராணுவத்தில் இணைப்பதற்காக வன்னி தலைமையகத்தில் சிறப்பு நிகழ்வொன்று இன்று இடம்பெற்றுள்ளது.  இந்நிகழ்வில் தமது பிள்ளைகளை இராணுவத்தில் இணைத்த பெற்றோர், கௌரவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.

திருமலை சூடைக்குடாவில் மீள்குடியேற்றம்-

திருகோணமலை, மூதூர் கிழக்கு சூடைக்குடா கிராமத்தில் இருந்து இடம்பெயர்ந்த 56 குடும்பங்கள் இன்று மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். குறித்த பிரதேச மக்கள் தமது சொந்த காணிகளை துப்பரவு செய்வதற்கான  அங்கீகாரத்தை மாவட்ட செயலாளர் மேஜனர் ஜெனரல் ரஞ்சித் சில்வா அனுமதி வழங்கியுள்ளார். கூனித்தீவு நாவலர் வித்தியாலயத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்வின்போது மூதூர் பிரதேச செயலர் பிரதீபன் முன்னிலையில் சூடைக்குடா பதில் கிராமசேவை உத்தியோகத்தர் க.செல்வnரெத்தினத்திடம் மாவட்ட செயலாளரின் கடிதம் வழங்கப்பட்டது. இதில் திருமலை மாவட்ட கட்டளைத் தளபதி பிரிகேடியர் விக்கிரமரத்தன, சம்பூர் கடற்படை முகாம் கட்டளை அதிகாரி கே.ஜி.போல் ஆகியோரும் சமூகமளித்திருந்தனர். தமது சொந்த கிராமத்திற்குச் செல்வதற்காக கிளிவெட்டி நலன்புரி  நிலையத்தில் தங்கியிருந்தவர்கள் இராணுவத்தினரால் பஸ்கள் மூலம் அழைத்துவரப்பட்டிருந்தனர். கூனித்தீவில்  இருந்து 500 மீற்றர் தொலைவில் உள்ள டைக்குடா கிராமத்திற்கு கால்நடையாக சென்ற இவர்கள் அங்குள்ள விநாயகர் ஆலயத்தில் வழிபட்டபின் தமது காணிகளை துப்பரவு செய்ய ஆரம்பித்துள்ளனர்.

முல்லைத்தீவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை நிகழ்வு-

4வட மாகாணசபைத் தேர்தலுக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை நிகழ்வு இன்றுமுற்பகல் முல்லைத்தீவு மாவட்டம், விசுவமடு பிரதேசத்தில் உள்ள வள்ளுவர் நகர், ரெட்பானா பகுதியில் இடம்பெற்றது. இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முலலைத்தீவு மாவட்ட புளொட் வேட்பாளர் திரு.கந்தையா சிவநேசன் (பவன்) அவர்கள் பிரதேச மக்களுடன் வட மாகாணசபைத் தேர்தல் தொடர்பான கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார். Read more

25.08.2013.
யாழில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் பொதுக்கூட்டம்-

2013-08-25 17.16.21 2013-08-25 17.22.40

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபைத் தேர்தல் தொடர்பான மாபெரும் பொதுக்கூட்டம் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தின் ஆரம்ப நிகழ்வாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பத்தொன்பது வேட்பாளர்களும் மக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்கள். இதனையடுத்து கட்சித் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், வீ.ஆனந்தசங்கரி, அப்பாப்பிள்ளை விநாயகமூர்த்தி, தர்மலிங்கம் சித்தார்;த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன், மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி என்.சிறீகாந்தா, வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் உரையாற்றினார்கள். இந்நிகழ்வில் மண்டபம் நிறைந்த மக்களும், மண்டபத்திற்கு வெளியே பெருந்திரளான மக்களும் கலந்துகொண்டு கட்சித் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் உரையினைக் கேட்டுக்கொண்டிருநதார்கள்

கூட்டமைப்பு வேட்பாளர் ஜி.ரி.லிங்கநாதன் (விசு) நெடுங்கேணியில் மக்கள் சந்திப்பு-

GTதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளரும், வவுனியா நகரசபையின் முன்னைநாள் தலைவருமான ஜி.ரி.லிங்கநாதன் (விசு) அவர்கள் நெடுங்கேணி ஐயனார்கோயில் வருடாந்த ஆவணி உற்சவத்தில் பங்கேற்றிருந்தார். இதனைத் தொடர்ந்து பிரதேச மக்களுடன் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்றினையும் மேற்கொண்டிருந்தார். கூட்டமைப்பு வேட்பாளர் ஜி.ரி.லிங்கநாதன் அவர்களுடன் நண்பர்;களும், ஆதரவாளர்களும் உடன் சென்றிருந்ததுடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு இத்தேர்தலில் பெரும்பான்மை வெற்றிபெற வேண்டுமென்பதன் அவசியமும், தமிழ் மக்கள் அனைவரும் தவறாது வாக்களிப்பதற்குச் செல்ல வேண்டியதன் தேவைகுறித்தும் தெளிவுபடுத்தப்பட்டது. இந்த சந்திப்பில் நெடுங்கேணி பிரதேச ஊர்ப்பிரமுகர்களும் பங்கேற்றிருந்தனர்.

News

Posted by plotenewseditor on 25 August 2013
Posted in செய்திகள் 

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு விஜயம்-

1360_content_IMG_0568ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் நவனீதம்பிள்ளை ஏழு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இன்றுமுற்பகல் இலங்கைக்கு வருகைதந்துள்ளார். ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை அவர்களுடன் மேலும் நான்கு பிரதிநிதிகளும் இலங்கைக்கு வருகைதந்துள்ளனர். ஐ.நா மனித உரிமை உயர்ஸ்தானிகர் முதலில் ஐ.நாவின் பிரதிநிதிகளை இன்று சந்திக்கவுள்ளார். இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெஷில் ராஜபக்ஸ ஆகியோரையும் அவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். நீதியமைச்சர் ரவூஃப் ஹக்கிம், பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், சட்டமா அதிபர் பாலித்த பெர்னான்டோ ஆகியோரையும் நவநீதம்பிள்ளை சந்திப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளார். யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலைக்கு விஜயம் செய்யவுள்ள அவர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஆளுநகர்களை சந்தித்துப் பேசவுள்ளதாக ஐ.நாவின் உயர்மட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை பேச்சுவாரத்தைகளை நடாத்தவுள்ளார். இந்த விஜயம் நிறைவுபெற்றதும் ஐ.நா உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை இலங்கை தொடர்பில் அறிக்கையொன்றையும் வெளியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

12ஆயிரம் ஆண்டுள் பழைமையான எலும்புக்கூடு கண்டுபிடிப்பு-

களுத்துறை புலத்சிங்கள பாஹியன்கல குகையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட மனித எழும்புக்கூடு 12ஆயிரம் வருடங்கள் பழமையானதென தெரியவந்துள்ளது. ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகத்தினால் வெளியிடப்பட்டுள்ள காலநிர்ணய அறிக்கையில் இந்த விடயம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. பாஹியன்கல குகையிலிருந்து கண்டுப்பிடிக்கப்பட்ட பழமை வாய்ந்த மனித எழும்புக்கூடு நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ஆய்வு கூடமொன்றில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தொல்பொருள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிமல் பெரேரா தெரிவித்துள்ளார். இந்த எழும்புக்கூட்டினை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை பிரித்தானியாவின் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது கடந்த ஜூன் மாதம் பாஹியன்கல குகையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட இந்த பழமையான எழும்புக்கூடு இலங்கையில் முதற்தடவையாக கண்டுபிடிக்கப்பட்ட ஆதி மனிதனின் முழுமையான எழும்புக்கூடு என்று கருதப்படுகிறது.

கொழும்பு மாநகரசபை ஆவண எரிப்பு குறித்து விசாரணை ஆரம்பம்-

கொழும்பு மாநகர சபையின் பெருமளவு ஆவணக் கோவைகள் ஏரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மேல் மாகாண சபை அறிவித்துள்ளது. மாகாண ஆணையாளரின் தலைமையில் இந்த விசாரணை முன்னெடுக்கப்படுவதாக மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பு மாநகர சபை அலுவலகத்திலிருந்த ஆவணக் கோவைகளே ஏரிக்கப்பட்டுள்ளன. 126 ஆவணக் கோவைகளை அழிப்பதற்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. எனினும் அதற்கு மேற்பட்ட ஆவணக் கோவைகள் ஏரிக்கப்பட்டுள்ளன. ஊழல் தொடர்பான தகவல்கள் வெளியாவதை தடுக்கும் வகையில் இந்த ஆவணக் கோவைகள் ஏரிக்கப்பட்டதா என்பது தொடர்பில் ஆராய்வதே விசாரணைகளின் நோக்கமாகும் என மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

சவூதி – இலங்கை தொழில் உரிமை பேச்சுவார்த்தை-

சவுதி அரேபியாவின் தொழில் உறவு அமைச்சர் அடேல் பாகேனிற்கும், அந்த நாட்டுக்கான இலங்கை தூதுவர் வீ. கிருஷ்ணமூர்த்திக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளதாக அரபு நியுஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது, சவுதி அரேபியாவில் தொழில் செய்கின்ற இலங்கையர்களின் தொழில் உரிமைகள் தொடர்பில் பேச்சிவார்த்தை நடத்தியதாக தூதுவர் வீ.கிருஸ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். அங்குள்ள இலங்கை பணியாளர்கள் சவுதியில் தொடர்ந்து பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உட்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையிலேயே அவர்களுக்கான தொழில் உரிமைகள் குறித்து அவதானம் செலுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை நெருக்கடியை சந்தித்துள்ளது-தேசிய பிக்குகள் முன்னணி-

இலங்கையில் தற்போது பாரிய நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய பிக்ககள் முன்னணி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, அதன் செயலாளர் நீதியாவல பாலித தேரர் இதனைத் தெரிவித்துள்ளார். நாடு தற்போது முகம் கொடுக்க முடியாத அளவில் நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. இந்நிலைமை எதிர்வரும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டின் பின்னர் மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மன்னாரில் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டம்-

tnaவட மாகாணசபைத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டம் எதிர்வரும் 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோதராதலிங்கம் தலைமையில் இடம்பெறவுள்ளது. Read more

சாவகச்சேரியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அலுவலகம் திறந்துவைப்பு-

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அலுவலகமொன்று இன்றுமுற்பகல் 10மணியளவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. சாவகச்சேரி நகரசபைத் தலைவரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான அப்பாப்பிள்ளை விநாயகமூர்த்தி, சரவணபவன், ஜனநாயக மக்கள் முன்னணியின் செயலாளர் நல்லையா குமரகுருபரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சட்டத்தரணி சயந்தன், தம்பிராஜா, அனந்தி ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு-

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபைத் தேர்தல் பரப்புரைக் கூட்டமும், வேட்பாளர் அறிமுக நிகழ்வும் நாளை (25.08.2013) ஞாயிற்றுக்கிழமை மாலை 5மணியளவில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐந்து கட்சித் தலைவர்களான இரா.சம்பந்தன், வீரசிங்கம் ஆனந்தசங்கரி, தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும், வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் சி.வீ விக்னேஸ்வரன் உள்ளிட்ட யாழ் மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களும் உரையாற்றவுள்ளனர். இதன்போது வேட்பாளர் அறிமுக நிகழ்வு இடம்பெறவுள்ளது