ஐ.நா சபைக்குள் புலிகள் இல்லை-நவநீதம்பிள்ளை-

இலங்கை விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை பக்கச் சார்பாக செயற்படவில்லை. அதேபோன்று ஐக்கிய நாடுகள் சபைக்குள் புலிகளும் இல்லை. இலங்கை அரசாங்கத்தின் உறுதிப்பாடுகள் மற்றும் பொறுப்புடமைகளின் பிரகாரமே ஐக்கிய நாடுகள் சபையும் ஐ.நா. மனித உரிமை பேரவையும் செயற்படுகின்றது என மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். ஐ.நா. அலுவலகத்தில் நேற்றுஇடம்பெற்ற செய்தியாளார் மாநாட்டின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். ஐ.நா. இலங்கை விவகாரங்களில் பக்கச்சார்பாக செயற்படுவதாகவோ தனிப்பட்ட ரீதியில் தீர்மானங்களை நிறைவேற்றுவதாகவோ கூறுகின்றமை அடிப்படையற்ற தன்மையாகும். ஏனெனில் 60 நாடுகளுக்கு மனித உரிமைகள் விவகாரங்கள் தொடர்பில் விஜயத்தை மேற்கொண்டு பல்வேறு விசாரணைகளை முன்னெடுத்துள்ளேன். அதேபோன்று மனித உரிமைகள் தொடர்பிலான பூகோள மீளாய்வு கூட்டத்தொடரில் உலகத்தின் அனைத்து நாடுகளினதும் மனித உரிமைகள் நிலவரங்கள் குறித்து ஆரயப்பட்டு அறிக்கை வெளியிடப்படுகிறது. இலங்கை தொடர்பில் மாத்திரம் பக்கச்சார்பாக செயற்படுவதாக குற்றம்சாட்டுவது ஏற்புடையதல்ல. புலிகளின் போர்க்குற்றங்கள் குறித்தும் விசாரணை அவசியம் என்பதை நாம் வலியுறுத்தியுள்ளோம் என அவர் கூறியுள்ளார்.