படையினரிடம் வாக்காளர் இடாப்பு, கண்காணிப்பு நிலையம் குற்றச்சாட்டு-

வட மாகாணத்தை பொறுத்தவரையில் படைத்தரப்பினர் வாக்காளர் இடாப்புகளை வைத்திருப்பது மற்றும் வீடுவீடாகச் செல்வது மக்களை அச்சத்திற்;கு உள்ளாக்கியுள்ளது என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது. யாழ். ஊடக மையத்தில் நேற்றுமாலை நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போதே தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்;கான நிலையத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சந்திப்பில் தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தின் அழைப்பாளர்களான பாக்கியசோதி சரவணமுத்து, உதய களுபத்திரன, சுனில் ஜெயசேகரா மற்றும் வடமாகாண இணைப்பாளர் சி.மணிமாறன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். வட மாகாண சபைக்கான தேர்தல் உண்மையாகவும் நேர்மையாகவும் நடைபெறுமா என்பது தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் பாரிய சந்தேகம் எழுந்துள்ளது. மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சம் தொடர்பில்  பொலிசார், வடமாகாண பிரதித் தேர்தல் ஆணையாளர், பொலிஸ் உயர் அதிகாரிகள், கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுடனும் கலந்துரையாடியுள்ளோம் என்று அவர்கள் இதன்போது தெரிவித்துள்ளனர்.