Posted by plotenewseditor on 2 September 2013
Posted in செய்திகள்
அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் 28வது நினைவுதினம் அனுஷ்டிப்பு-
இலங்கை நாடாளுமன்றத்தில் 1960ம் ஆண்டுமுதல் 1983ம் ஆண்டுவரையில் தொடர்ந்து 23 ஆண்டுகள் உடுவில், மானிப்பாய் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினராக மக்களுக்கு சேவையாற்றி அவர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடத்தைப் பெற்ற விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் 28ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று (02.09.2013) அனுஷ்டிக்கப்பட்டது. 28வது நினைவுதின நிகழ்வுகள் யாழ் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் மானிப்பாய் பிரதேசசபை உறுப்பினர் திரு.கௌரிகாந்தன் அவர்களின் தலைமையில் இன்றுகாலை நடைபெற்றது. இதன்போது மலராஞ்சலியும் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் புதல்வரும், புளொட் தலைவருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், வலி.தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களான சிவகுமார், கணேசவேல், வலி தெற்கு பிரதேச சபை உறுப்பினர் பரமேஸ்வரலிங்கம், முக்கியஸ்தர் இலகுநாதன் (புண்ணியம்), சுன்னாகம் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத் தலைவர் குமாரவேல் ஆகியோரும், ஊர்ப் பிரமுகர்களும் உரையாற்றினர். இந்த நிகழ்வில் அமரர் தர்மலிங்கம் அவர்களின் ஆதரவாளர்களும், நண்பர்களும், பெருமளவிலான பொதுமக்களும், கலந்து கொண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் ஞாபகார்த்தமாக யாழ். கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் நிறுவப்பட்டுள்ள அன்னாரது உருவச்சிலைக்கு வைத்தியர் தியாகராஜா அவர்களின் தலைமையில் மலராஞ்சலி செலுத்தப்பட்டு மௌன அஞ்சலி இடம்பெற்றது. இந்நிகழ்வில் மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் கௌரிகாந்தன், அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து அன்னாரது நினைவாக இன்று நண்பகல் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் அன்னதானமும் வழங்கப்பட்டது.


