வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும்-பிரித்தானியா-

இலங்கை அரசாங்கம் புனர்வாழ்வு மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதிகள் பல உள்ளதாக பிரித்தானியா சுட்டிக்காட்டியுள்ளது. ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் கருத்துக்களிலிருந்து இவ்விடயம் புலனாவதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டயர் பர்ட் குறிப்பிட்டுள்ளார். இலங்கை விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியபோது நவனீதம்பிள்ளை சில கருத்துக்களை வெளியிட்டியிருந்தார். இவ்விடயங்கள் குறித்து பிரித்தானியா உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அலிஸ்டயர் பர்ட் கூறியுள்ளார். நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை விவகாரங்கள் குறித்தும், சட்டம் ஒழுங்கு, தனிமனித சுதந்திரம், ஊடக சுதந்திரம், மாற்றுச் சிந்தனையாளர் ஒடுக்குமுறை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் நவநீதம்பிள்ளை சுட்டிக்காட்டியிருந்தார். இந்த அனைத்து விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்படும். நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட இலக்குகள் இதுவரையில் இலங்கையில் எட்டப்பட்டிருக்கவில்லை என்பது ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயத்தின் பின்னர் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.