வடக்கில் களமிறக்கப்பட்டுள்ள சுயேட்சைகளுக்கு தாம் ஏன் போட்டியிடுகின்றோம் என்பதுகூட தெரியாது-தர்மலிங்கம் சித்தார்த்தன்-

வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தவிர ஏனைய கட்சிகள் தென்னிலங்கை தலைமைத்துவத்தின் கீழ் போட்டியிடுவதாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கைத் தலைமைகளின்கீழ் போட்டியிடும் கட்சிகளுக்கு அதன் தலைமைகள் எதனையும் பேசுவதற்கு அனுமதித்துள்ளதெனினும் செயற்படுவதற்கு உரிமையில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் 28ஆவது வருட நிறைவை முன்னிட்டு நேற்று திங்கட்கிழமை முற்பகல் யாழ். தாவடியில் அமைந்துள்ள அன்னாரது நினைவுத் தூபிக்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்பின்னர் இடம்பெற்ற நினைவுக்கூட்டத்தில் உரையாற்றும்போதே தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் பேசுகையில்,

எனது தந்தையார் மறைந்து இன்றுடன் 28வருடங்கள் நிறைவடைந்துள்ளன. அவரது அரசியல் வாழ்க்கையில் மாற்றுக் கட்சிகளுடன் நட்புறவாகப் பழகியதை நான் கண்டுள்ளேன். அந்த வகையில் அவரது செயற்பாட்டினை நானும் கொஞ்சம் பெற்றுள்ளேன்.  தனிப்பட்ட முறையில் நட்புறவுடன் பழகும் செயற்பாட்டை தற்போது காணமுடியவில்லை.

தற்போது வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தவிர ஏனைய கட்சிகள் தென்னிலங்கை தலைமைத்துவத்துடன் செயற்படுபவை. இவர்கள் எதைச் சொன்னாலும், இவர்களால் அவற்றை செயற்படுத்த முடியாது. இதற்குக் காரணம் தென்னிலங்கைத் தலைமைத்துவம் இவர்கள் எதையும் கூறி வாக்குகளைப் பெற அனுமதித்துள்ள போதிலும் இவர்கள் கூறியவற்றை செயற்படுத்தும் உரிமை இவர்களுக்கு இல்லை.

தற்போது வடக்கில் போட்டியிடும் சுயேட்சைக் குழுக்கள் கூட அரச பின்னணியில் உருவாக்கப்பட்டு போட்டியிட வைக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்களின் வாக்குகளைப் பிரிப்பதற்காக இவை களமிறக்கப்பட்டுள்ளன. இச் சுயேட்சைக் குழுக்களில் போட்டியிடுவோரில் பலருக்கு தாம் எதற்காக போட்டியிடுகிறோம் என்ற தெளிவுகூட இல்லை.

இவ்வாறான நிலையில் வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தலைமைத்துவத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுகின்றது.

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் இன்னல்கள், துன்பங்களிலிருந்து மீள்வதற்கு தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு தமிழ் தலைமைத்துவத்திற்கு வாக்களிக்க வேண்டும். அதற்கான பொறுப்பும் கடமையும் ஒவ்வொரு தமிழ் மக்களுக்கும் உண்டு என்று தெரிவித்துள்ளார்.