குமிழமுனை, கொக்குத்தொடுவாய் பகுதிகளில் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரம்-

bawan 2தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கருத்தரங்குகள் மற்றும் கலந்துரையாடல்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் குமிழமுனை மற்றும் கொக்குத்தொடுவாய் பிரதேசங்களில் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட புளொட் வேட்பாளர் திரு.கந்தையா சிவநேசன்(பவன்) அவர்களுடன், ஊர்ப் பிரமுகர்களும், ஆதரவாளர்களும், நண்பர்களும் மேற்படி கருத்தரங்குகள் மற்றும் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர். இதேவேளை கருநாட்டுக்கேணி பகுதிக்குச் சென்றிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் கந்தையா சிவநேசன்(பவன்), கடந்த 2006ஆம் ஆண்டுமுதல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்து உரிய வகையில் மருத்துவ வசதி வழங்கப்படாத நிலையில் கடந்த 02.09.2013 அன்றுகாலை கொழும்பு மகசின் சிறைச்சாலையில் மரணமடைந்த 31வயதான பிரான்ஸிஸ் நெல்சனின் மனைவி, பிள்ளைகளைச் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அக்கறைகொண்டு சில முன்னெடுப்புக்களை மேற்கொண்டுள்ளார்.

பொதுநலவாய மாநாட்டில் இலங்கைக்கு அழுத்தம்-வில்லியம் ஹக்-

இலங்கையில் இடம்பெறும் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொண்டு மனித உரிமை உள்ளிட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னேற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தை கேள்வி எழுப்புவோம் என பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹக் தெரிவித்துள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய தலைவர்களின் உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு ஏனைய நாடுகளின் ஆதரவுடன் மீண்டும் எழுப்பப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான மனித உரிமைகள் விவகாரங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தை கேள்வி எழுப்புவோம். அத்துடன் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் ஊடக சுதந்திரம் உள்ளிட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் பாதுகாப்பு போன்ற விடயங்கள் குறித்தும் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று நடைபெற்ற பொதுச்சபை கூட்டத்தில் இலங்கை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹக் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தூக்குத் தண்டனை அமுல்படுத்துமாறு வலியுறுத்தல்-

இலங்கையில் உடனடியாக தூக்குத் தண்டனையை அமுல்படுத்துமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் தாம் கோரிக்கை விடுத்துள்ளதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தூக்குத் தண்டனை அமுலில் இல்லாத காரணத்தினால்  நாட்டில் பயங்கரமான குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன.  எனவே இலங்கையில் போதைப் பொருள் விற்பனையாளர்கள், கொலையாளிகள் உட்பட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக தூக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஆஸியில் அச்சுறுத்தலாக இருந்த இலங்கைத் தமிழர் விடுதலை-

அவுஸ்திரேலிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்தார் என்ற காரணத்தை காட்டி தடுத்துவைக்கப்பட்ட இலங்கை தமிழர் ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார் இவர் புலிகளுடன் தொடர்புடையவர் என்ற அடிப்படையில் கடந்த 4 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார் ஏற்கனவே இவ்வாறான வழக்கு ஒன்றில் ரஞ்சனி என்ற பெண்ணும் அவரின் மூன்று குழந்தைகளும் விடுதலை செய்யப்பட்டமையை அடுத்து அந்த தீர்ப்பை பயன்படுத்தியே 26வயதான மேற்படி இலங்கையரும் வழக்கை தாக்கல் செய்திருந்தார் இந்நிலையிலேயே அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

வேட்பாளர்கள் சொத்து விபரங்களை சமர்ப்பிக்க வேண்டுமென கோரிக்கை-

மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் உரிய வகையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என யாழ் மாவட்ட உதவித் தேர்தல் அதிகாரி அச்சுதன் கோரிக்கை விடுத்துள்ளார். அவ்வாறு வேட்பாளர்கள் தமது சொத்து விபரங்களை சமர்ப்பிக்காது விடத்து, வேட்பாளர் அடையாள அட்டைகள் வழங்கப்படமாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கட்சி வேட்பாளர்கள் சிலர் இதுவரையிலும் தமது சொத்து விபரங்களை வெளியிடவில்லை. அவ்வாறான வேட்பாளர்களுக்கு வேட்பாளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட மாட்டாது எனவும் யாழ் மாவட்ட உதவித் தேர்தல் அதிகாரி அச்சுதன் கூறியுள்ளார்.

சட்டவிரோத அவுஸ்திரேலிய பயணம், இதுவரை 4100 பேர் கைது-

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்வதற்கு முயற்சித்த, 4100 பேர் இதுவரையில் இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டதன் பின்னர் அவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக கடற்படை பேச்சாளர், கொமான்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். கடல்மார்க்கமாக சட்டவிரோதமான முறையில், வெளிநாடுகளுக்கு செல்வதை தடுக்கும் நோக்கில், நாட்டினை சூழ கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் கூறியுள்ளார்.

வாகரை மதுரங்குளம் கிராமத்தில் சுழல்காற்றினால் 49 வீடுகள் சேதம்-

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட மதுரங்குளம் கிராமத்தில் வீசிய சுழல்காற்றினால் 49 வீடுகள் சேதமடைந்துள்ளன. மதுரங்குளம் கிராமத்தில் நேற்றுஇரவு இடி, மின்னலுடன் மழை பெய்துள்ளது. அத்துடன் பலத்த காற்றும் வீசியுள்ளது. இதன்போது வீட்டுக் கூரைகளுக்கு இடப்பட்டிருந்த தகரங்களும் ஓடுகளும் காற்றினால் தூக்கி வீசப்பட்டதாக மக்கள் கூறியுள்ளனர். பலத்த காற்றினால்; 06 வீடுகள் முழுமையாகவும் 43 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்ததாக மதுரங்குளம் கிராம அலுவலகர் சீ.கஜேந்திரன் கூறியுள்ளார்.