நவநீதம்பிள்ளையின் நடவடிக்கைகளுக்கு ஐ.நா பூரண ஆதரவு-

navneethamஇலங்கைக்கு வருகை தந்திருந்த நவிபிள்ளை முள்ளிவாய்க்காலில் மரணமடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த முயற்சித்தமை தொடர்பாக ஐ.நா அலுவலகம் தமது கருத்தை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஐ நாவின் பேச்சாளர் ரூபேட் கொல்விலி, ஐ.நாவின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தான் இதுவரை சென்ற சகல நாடுகளிலும் மரணமடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். அதேபோல் கடந்த 30 வருடங்களாக யுத்தம் நடைபெற்ற பகுதியில் இறந்தவர்கள் நினைவாக அஞ்கலி செலுத்துவது தவறான செயலல்ல. மேலும் அவர் முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கே தனது இதயப்பூர்வமான அஞ்சலியை செலுத்த முயற்சித்தார். ஆனால் அதை இலங்கையரசு புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த முயற்சித்ததாக முழுமையாக தவறான கருத்தை வெளியிட்டுள்ளது. ஐ.நா சபை இது தொடர்பாக மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் நடவடிக்கைகளுக்கு பூரண ஆதரவளிக்கும். மேலும் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு மதிப்பளிக்க வேண்டியது அவசியமானதாகும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

பான்கீ மூனின் அறிக்கையில் இலங்கையும் உள்ளடக்கம்

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் வருடாந்த அறிக்கையில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதன்படி இலங்கையின் இறுதிப்போரின் போது ஐக்கிய நாடுகள் சபை உடனடியாக உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என சுமத்தப்பட்ட குற்றசாட்டு தொடர்பிலான நிபுணர் அறிக்கையின் பரிந்துரைகள் பின்பற்றப்படும் என பான் கீ மூன் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் இலங்கையில் மனிதநேய நடவடிக்கைகள் பலப்படுத்தப்படும் என்றும் ஐ.நா சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் சுட்டிக்காட்டியுள்ளார். 

இந்தியத் தூதுவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்-

sri &indiaஇலங்கைக்கான புதிய இந்தியத்தூதுவராக கடமையேற்று முதல் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள வை.கே. சிங்ஹா, நேற்று யாழ். அரியாலை மற்றும் எழுதுமட்டுவாள் பகுதிகளில் மீள்குடியேறியுள்ள மக்களைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அரியாலைக்கு விஜயம் செய்திருந்த இந்தியத் தூதுவரை யாழ் மாவட்ட மேலதில அரசஅதிபர் ரூபினி வரதலிங்கம் வரவேற்றுள்ளார். அப்பகுதியில் இந்திய நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தினையும் வை.கே. சிங்ஹா பார்வையிட்டுள்ளார்.  தென்மராட்சி பிரதேசத்தில் இந்திய நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் வீட்டுத்திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளையும் அவர் பார்வையிட்டுள்ளார். அதேவேளை யாழ். இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் நல்லூர் சங்கிலியன் தோப்பில் நேற்றுமாலை நடைபெற்ற தெய்வீக சுக அனுபவம் கலை நிகழ்விலும் அவர் பிரதம அதீதியாக பங்கேற்றிருந்தார்.

தேர்தல் தொடர்பில் 309 முறைப்பாடுகள் பதிவு-

வடக்கு, மத்திய மற்றும் வடமத்திய மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை 309 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது, அதிகளவிலான 78 முறைப்பாடுகள் குருநாகல் மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக செயலகத்தின் முறைப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கண்டி மாவட்டத்தில் 46 முறைப்பாடுகளும், புத்தளம் மாவட்டத்தில் 29 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன. வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 30 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. அரச வாகனங்களை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுதல் தொடர்பில் 47 முறைப்பாடுகளும், அரச உத்தியோகத்தர்களை தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தல் தொடர்பில் 15 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன என தேர்தல்கள் செயலகத்தின் முறைப்பாட்டு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

சீன ஆதிக்க அதிகரிப்பு தொடர்பில் இந்தியா கவலைப்பட வேண்டும்: பாரத் கர்நாட்-

indiaஇந்தியாவின் பின்வாசலாக உள்ள இலங்கையில், அதிகரித்து வரும் சீனாவின் தலையீட்டை, கவலைக்குரிய விடயமாக இந்தியா எடுத்துக் கொள்ள வேண்டும் என கொள்கை ஆய்வு மையத்தின் தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான ஆய்வுப் பேராசிரியர் பாரத் கர்நாட் தெரிவித்துள்ளார். நொய்டாவில் உள்ள அமிதி பல்கலைக்கழக சட்ட பாடசாலை மாணவர்கள் மத்தியில் நேற்று நிகழ்த்திய உரையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். புவிசார் அரசியலும் இந்திய மூலாபாயமும் என்ற தலைப்பில் உரையாற்றிய அவர், பாகிஸ்தானுடன் மாத்திரமின்றி சீனாவுடனும் கூட, இந்தியா பாதுகாப்பு ரீதியாக செற்பாட்டு நிலையில் இருக்க வேண்டும். பாகிஸ்தான், நேபாளம். பூட்டான் உள்ளிட்ட ஏனைய நாடுகளிலும் சீனத் தலையீடு அதிகமாக உள்ள நிலையில், இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் புலி உறுப்பினர்களை சமூகத்துடன் இணைக்க நடவடிக்கை-

முன்னாள் புலி உறுப்பினர்கள் 108 பேர் விரைவில் விடுவிக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து இராணுவத்தினரிடம் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வு முகாம்களில் புனர்வாழ்வு பெற்று வந்தனர். அவர்களில் தற்போது புனர்வாழ்வு பெற்று வருகின்ற முன்னாள் புலி உறுப்பினர்களில் 108 பேரை சமூகத்துடன் இணைக்கவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதற்கான நிகழ்வுகள் எதிர்வரும் 9ஆம் திகதி வவுனியா நகர மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இறுதி யுத்தத்தின் போது 12ஆயிரம் முன்னாள் புலி உறுப்பினர்கள் படைகளிடம் சரணடைந்தனர். அதில் 11,651பேர்  புனர்வாழ்வின் பின் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர். அதன்படி இன்னும் 241 பேர் மட்டுமே புனர்வாழ்வு பெற்று வருகின்றனர் என புனர்வாழ்வு ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.