அமெரிக்கத் தூதுவர் முல்லைத்தீவுக்கு விஜயம்-

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிஷெல் ஜெ.சிஸன் முல்லைத்தீவுக்கு விஜயம் செய்துள்ளார். அவருடன் யுஎஸ்எயிட் பணிப்பாளர் ஷெரி கார்லினும் நேற்று சென்றுள்ளார். புதிதாக புனர்நிர்மாணம் செய்யப்பட்ட முல்லைத்தீவு பொதுச்சந்தையை அமெரிக்க தூதுவர் திறந்து வைத்துள்ளார். தொழில் வாய்ப்புக்களை அதிகரிக்கவும் உள்ளுர் சமூகங்களை ஒன்று சேர்ப்பதற்கு வழிகோலும் வகையிலும் முல்லைத்தீவு சந்தை அமெரிக்காவினால் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமிப் பேரழிவினாலும் பாதிக்கப்பட்ட இச்சந்தை 4,16,000 அமெரிக்க டொலர்கள் (ஏறத்தாழ 54 மில்லியன் இலங்கை ரூபா) செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு இலகு வழியை ஏற்படுத்தி தருகிறது. அத்துடன் வருமானத்தை பெருக்கி கொள்ளும் வாய்ப்பை உருவாக்கித் தருகிறது. மற்றும் இப்பிரதேசத்தில் மீளக்குடியேறும பல்லின சமூக மக்களின் சமூக ஒன்றிணைப்பிற்கும் ஊக்குவிப்பாக அமையும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

இந்தியா இலங்கைக்கு போர்க் கப்பல்களை வழங்க நடவடிக்கை-

இந்தியா, இலங்கைக்கு 2 போர்க்கப்பல்களை வழங்க முடிவு செய்துள்ளதாகவும், இந்த கப்பல்கள் கோவாவில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டு, 2017அல்லது 2018ஆம் ஆண்டில் இலங்கைக்கு வழங்கப்படும் என்றும் இந்திய ஊடகங்கள் கூறுகின்றன. கடல் எல்லையை பலப்படுத்த உதவுமாறு இலங்கை கேட்டதையடுத்து இந்த கப்பல்கள் வழங்கப்பட உள்ளன. ஏற்கனவே இந்தியாவில் உள்ள 4 தென்மாநிலங்களை தவிர ஏனைய மாநிலங்களில் இலங்கை இராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.. தமிழக அரசியல் கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில், மத்திய அரசு இலங்கை இராணுவத்திற்கு தற்போது போர்க்கப்பல்களை வழங்கவிருப்பது இராணுவ தொடர்பை பலப்படுத்தி வருவதையே காட்டுகிறது என தமிழக அரசியல் கட்சிகளும் தமிழ் உணர்வாளர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.நா தலைமையகம் முன்பாக இலங்கையர் தற்கொலை-

ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்துக்கு முன்பாக இலங்கையர் ஒருவர் தமக்கு தாமே தீ மூட்டி தற்கொலை செய்துக் கொண்டதாக சுவிட்சர்லாந்தின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்நாட்டு நேரப்படி, நேற்றுமாலை 4.15 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது சில ஈராக்கைச் சேர்ந்த செயற்பாட்டாளர்கள் சம்பவ இடத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட இலங்கையரை காப்பாற்ற முயற்சித்துள்ளனர். அவர்களால் குறித்த இலங்கையர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.  அவரிடமிருந்து புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படங்கள் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை சென்றபோது புலிகள் தொடர்பில் வெளியிட்டிருந்த கருத்துக்களாலேயே அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நா மனித உரிமை மாநாட்டிற்கு பிரதிநிதிகளை அனுப்புவதில்லை-அரசாங்கம்-

எதிவரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள 24வது மனித உரிமைகள் மாநாட்டிற்கு இலங்கை சார்பில் பிரதிநிதிகள் யாரையும் அனுப்பப் போவதில்லை என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் ஊடகப் பேச்சாளர் ரொபின் பெரேரா ஊடகத்திற்கு வழங்கிய தகவலின்படி, ஜெனீவாவில் உள்ள இலங்கையின் மனித உரிமைகளுக்கான பிரதிநிதி இதில் பங்கேற்பார் என் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் இருந்து பிரதிநிதிகளை அனுப்பும் அளவுக்கு இந்த மாநாடு முக்கியத்துவம் வாய்ந்தது இல்லை என்றும் ரொபின் பெரேரா குறிப்பிட்டுள்ளார். 

இலங்கையர்களுக்கு சிறை-

நியுசிலாந்தில் கொலைக்குற்றம் சுமத்தப்பட்ட இரண்டு இலங்கையர்களுக்கு 17 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துவான் ப்ரவாஸ் சவால் என்ற 24வயது இளைஞருக்கும், விராஜ் வசந்த அலககோன் என்பவருக்குமே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அலககோன் என்பவர் தாம் காதலித்த பெண்ணை கத்தரியால் தாக்கி கொலை செய்ததாகவும், இந்த கொலைக்கு மற்றைய இளைஞரும் துணைபுரிந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த கொலை திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதாக நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களுக்கு 17 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதுடன், தண்டனைக் காலத்தின் பின்னர் அவர்கள் இருவரும் இலங்கைக்கு நாடுகடத்தப்படுவர் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேட்பாளர்கள் சொத்துக்களை சமர்ப்பிக்கும் காலம் நிறைவு-

எதிர்வரும் வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் தங்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை சமர்ப்பிப்பதற்கான திகதி நாளையுடன் நிறைவடைகிறது. தேர்தல்கள் திணைக்கள பேச்சாளர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதுவரையில் இந்த தேர்தலின் பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர் பலர் தங்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை சமர்ப்பித்திருப்பதாக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். எனினும் சில சுயாதீன குழுக்கள் இன்னும் இந்த விபரங்களை வழங்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

புலி உறுப்பினர் என ரஞ்சனி ஒப்புதல்-

அகதி அந்தஸ்த்து வழங்கப்பட்ட போதிலும், அவுஸ்திரேலிய புலனாய்வு தரப்பினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதியான மூன்று பிள்ளைகளின் தாயார் ரஞ்சனி, தாம் புலிகள் இயக்கத்தில் போராளியாக பயிற்சி எடுத்துக் கொண்டமையை முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளார். தாம் சிறுவர் போராளியாக புலிகள் அமைப்பில் இணைந்ததாகவும், 1990 ஆண்டு, இலங்கை இராணுவத்துக்கு எதிரான யுத்தத்தில் பங்கேற்றதாகவும் அவர் கூறியுள்ளார். 2010ல் படகுமூலம் அவர் அவுஸ்திரேலியா தப்பி சென்றுள்ளார். அவர்மீது எவ்வித குற்றவியல் வழக்குகளும் பதியப்படடிருக்கவில்லை என தெரியவருகிறது. அவருக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பான வழக்கு அவுஸ்திரேலிய மேல் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்ட வேளையில் அவர் இதனைக் கூறியுள்ளார். இந்நிலையில் அவரை தொடர்ந்து அங்கு தங்க வைப்பதா? அல்லது நாட்டிலிருந்து வெளியேற்றுவதா? என்பது தொடர்பில் அரசே தீர்மானிக்க வேண்டும் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

சுப்பிரமணியசுவாமி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சந்திப்பு-

ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார். அலரிமாளிகையில் நேற்று இந்த சந்திப்ப இடம்பெற்றதாக, ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த சந்திப்பின்போது, இரு நாடுகளிலும் காணப்படுகின்ற அரசியல் சூழ்நிலைகள் தொடர்பில் பேசப்பட்டதுடன்,. இரண்டு நாடுகளின் மீனவர்களும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஆராயப்பட்டதாகவும் தெரியவருகிறது.

100 பேரை பலியெடுத்த கப்பலில் அகதிகளை கடத்திச் சென்ற இலங்கையர் கைது-

அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளை ஏற்றிச் சென்றவேளை இந்தோனேசியாவின் ஜாவா தீவுக்கு அருகே கடலில் மூழ்கிய படகில் அகதிகளை கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையைச் சேர்ந்த அக்ரம் என்ற நபரே தெற்கு ஜயர்த்தா பகுதியில் வைத்து இந்தோனேசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூலை மாதம் அவுஸ்திரேலியா நோக்கி 210 பேரை படகில் கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் படி இந்நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்தோனேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த படகில் பயணித்த குழந்தைகள், கர்ப்பிணிப் பெண் உள்ளிட்ட 100 பேர் வரையில் உயிரிழந்ததோடு பலர் காணாமற்போயிருந்தனர். இலங்கை, ஈரான், ஈராக் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சட்டவிரோத புகலிடக்கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற படகே இந்த வகையிலான பாரிய விபத்துக்கு முகங்கொடுத்திருந்தது.