Header image alt text

வடமராட்சி திக்கம் பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரம்-

DSC00011[1]யாழ்ப்பாணம் வடமராட்சி திக்கம் பகுதியில் இன்றுமாலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்று நடைபெற்றது. திரு. செந்தில்வேல் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களுமான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சரவணபவன், அரியநேந்திரன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் திரு.சி.வி விக்னேஸ்வரன் அவர்களும் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். இக்கூட்டத்தில் உள்ளுராட்சி தலைவர்கள், அங்கத்தவர்கள், கட்சிப் பிரமுகர்கள், ஆதரவாளர்கள் என பெருந்திரளானோர் பங்கேற்றிருந்தனர்.

 DSC00014 DSC00048 DSC00050 DSC00008 DSC00031DSC00018

கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரையின்போது பொலீசார் அடாவடி-

வவுனியா தோணிக்கல் பிரதேசத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைகள் நேற்று இடம்பெற்றிருந்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளர் திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களும், ஆதரவாளர்களும், நண்பர்களும் அப்பகுதிகளில் தேர்தல் பிரசாரப் பணிகளில் நேற்றுமாலை ஈடுபட்டிருந்தனர். நேற்றுமாலை 4மணியளவில் தோணிக்கல் மாடசாமி கோவிலடிப் பகுதியில் தேர்தல் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டிருந்தபோது திடீரென அங்கு வந்த வவுனியா பொலீசார் இப்பகுதிகளில் நீங்கள் பிரசார நடவடிக்கையில் ஈடுபட இயலாது என தெரிவித்து வேட்பாளர் க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களின் ஆதரவாளர்களையும், நண்பர்களையும் மிரட்டி, அவர்களிடமிருந்த பிரசுரங்களை பறித்துவிட்டு தொடர்ந்தும் இங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டால் உங்கள் வாக்குரிமையையும் இழக்கவேண்டி வருமென எச்சரித்துச்; சென்றுள்ளனர்.

தேர்தல் வன்முறைகளுடன் தொடர்புடைய 97 பேர் கைது-

வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தல் வன்முறைகளுடன் தொடர்புடைய 97 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் வன்முறைகள் தொடர்பில் இதுவரை 100 முறைபாடுகள் பதிவாகியுள்ளாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வடமாகாணத்தில் 37 முறைபாடுகளும், வடமேல் மாகாணத்தில் 24 முறைபாடுகளும், மத்திய மாகாணத்தில் 39 முறைபாடுகளும் பதிவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் தேர்தல் சட்டமீறல்கள் குறித்து 330 முறைபாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது. இந்நிலையில் தேர்தலுடன் தொடர்புடைய 405 முறைபாடுகள் தமது அமைப்பிற்கு பதிவாகியுள்ளதாக கெஃபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் கூறியுள்ளார். அத்துடன் தேர்தலுடன் தொடர்புடைய 184 முறைபாடுகள் தமக்குப் பதிவாகியுள்ளதாக தேசிய தேர்தல் கண்காணிப்பு நிலைய தேசிய இணைப்பதிகாரி சட்டத்தரணி ரசாங்க ஹரிஸ்சந்திர தெரிவித்துள்ளார்.

தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள அரச ஊழியர்களுக்கு பயிற்சி-

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலின்போது கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ள அரச ஊழியர்களுக்கான விசேட பயிற்சிக் கருத்தரங்குகள் தேர்தல்கள் செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தந்த தேர்தல் அலுவலகங்களில் இந்த பயிற்சிக் கருத்தரங்குகள் வழங்கப்படுவதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்துள்ளார். இதேவேளை, தேர்தலின்போது வாக்குச் சாவடிகளில் தலா இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் வீதம் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் கூறியுள்ளார்.

அஞ்சல் வாக்குப் பதிவுகள் 09ஆம் 10ஆம் திகதிகளில் இடம்பெறுமென அறிவிப்பு-

வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபை தேர்தல்களுக்கான் அஞ்சல் வாக்கு பதிவுகள் இமு;மாதம் 9ம் மற்றும் 10 திகதிகளில் நடைபெறவுள்ளன. இந்த வாக்கு பதிவுகள் இடம்பெறுகின்ற அரச நிறுவனங்கள் உள்ள பகுதிகளில், தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.முஹமட் கூறுகையில், வாக்களிப்பின் போது வாக்காளர்களின் இரகசிய தன்மை பாதுகாக்கப்படும். இதனால் வாக்காளர்கள் அச்சமின்றி தங்களின் வாக்குகளை பதிவுசெய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். 

ஆட்கடத்தல் தொடர்பில் கடற்படை அதிகாரி கைது-

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் இலங்கையர்களை அனுப்பிவந்த குற்றச்சாட்டின்கீழ், நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் கடற்படையைச் சேர்ந்த லப்டினன்ற் கொமாண்டர் தர அதிகாரி ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. மாத்தறை குற்றப் புலனாய்வு தரப்பினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்றநிலையில் கைதானவர்களிடம் நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலீஸார் தெரிவித்துள்ளனர். கைதான கடற்படை அதிகாரி திருமலை கடற்படை முகாமைச் சேர்ந்தவர். இவர்களை இன்று மாத்தறை நீதிமன்றத்தில் ஆஜர்செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.