தேர்தல் விஞ்ஞாபனங்களின் பிரதிகளை ஒப்படைக்குமாறு வேண்டுகோள்-

தேர்தல் விஞ்ஞாபனங்களின் பிரதிகளை ஆவண பாதுகாப்பு திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுகின்ற அனைத்து கட்சிகளும், அதன் வேட்பாளர்களும் வெளியிடும் தேர்தல் விஞ்ஞாபனம் மற்றும் விளம்பரங்களின் பிரதியை தேசிய ஆவண பாதுகாப்பு திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நடைபெறும் எந்தவொரு தேர்தலின்போதும் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழு வேட்பாளர்களால் வெளியிடப்படும் தேர்தல் விஞ்ஞாபனம், விளம்பரங்கள், தேர்தலுடன் தொடர்புடைய ஆவணங்கள் வெளியிடப்படும் தினத்திலிருந்து 30 நாட்களுக்குள் தேசிய ஆவண பாதுகாப்பு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென ஆவண பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது. 1930ஆம் ஆண்டிலிருந்து இந்நடைமுறை பேணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சீன தூதுக்குழுவின் இலங்கை விஜயம் இந்தியாவுக்கு அழுத்தம்-

எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய வர்த்தக மாநாட்டுக்கு சீனாவிலிருந்து 120 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு அனுப்பப்படவுள்ளதாக த நிவ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாதென தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. எனினும்; இந்தியா இம்மாநாட்டில் கலந்துகொள்வதா? இல்லையா? என்பது தொடர்பில் தமது தீர்மானத்தை இன்னமும் அறிவிக்கவில்லை. இந்நிலையில் சீனா இவ்வாறு 120 பிரதிநிதிகளை அனுப்புவது, இந்தியாவை அழுத்தத்துக்கு உட்படுத்தும் என அந்த இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஜனாதிபதிக்கு இரா. சம்பந்தன் அவசர கடிதம்-

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நேற்று அவசர கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். அரசாங்கத்திற்கு சார்பான கட்சியின் வேட்பாளர்களுக்காக இராணுவம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், தேர்தலில் மக்கள் வாக்களிப்பதை தடுக்கும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ள இரா.சம்பந்தன், இராணுவத்தை முகாம்களினுள் முடக்கி வைக்குமாறு தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். வட மாகாணத்தில் தேவைக்கு அதிகமாக குவிக்கப்பட்டுள்ள இராணுவம் மக்களின் அன்றாட நடவடிக்கையில் ஈடுபடுவதையிட்டு நாம் உங்களின் கவனத்திற்கு முன்னரே கொண்டுவந்துள்ளோம். தற்போது இராணுவத்தின் நடவடிக்கைகள் தேர்தல் நடவடிக்கைகளிலும் பரவியுள்ளன. இராணுவத்தினர் சில வேட்பாளர்களின் சுவரொட்டிகளை ஒட்டுவதுடன் அவற்றை யாரும் அகற்றாதபடியும் காவல் செய்கின்றனர். இது இராணுவம் சில வேட்பாளர்களை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் நிறுத்தியுள்ளது எனும் எண்ணத்தை பரப்புவதாக உள்ளது. வேட்புமனுக்களை சமர்ப்பித்த அன்றே எமது வேட்பாளர்களில் மூவர் இராணுவத்தால் மிரட்டப்பட்டதை தங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றோம். யாழ். நாவந்துறையில் சில ஆளும் கட்சி வேட்பாளர்களின் படங்களின் முன்னால் இராணுவம் கட்டிட பொருட்கள் வழங்குகின்ற காட்சியின் படம் ஒரு பத்திரிகையில் வெளியாகியுள்ளது. தேர்தல் நெருங்க நெருங்க இராணுவ தலையீடு இன்னும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, இராணுவத்தை முகாமில் முடக்கி செப்டெம்பர் 21ஆம் திகதி ஓரு சுயாதீன தேர்தலுக்கு தடையாக உள்ள காராணியை அகற்றுமாறு தங்களிடம் கேட்டுக்கொள்கிறேன் என்று இரா. சம்பந்தன் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கில் வீடு, காணி கையளிப்பு இடைநிறுத்தம்-

தேர்தல் காலத்தில் வடக்கில் பொதுமக்களுக்கு வீடுகள், காணிகள் கையளிப்பதை தவிர்க்குமாறு அரசாங்கத்துக்கு தேர்தல் ஆணையாளர் பணித்துள்ளார். நேற்று இந்த அறிவிப்பு தொடர்பில் தேர்தல் ஆணையாளரால் தனக்கு அறிவிக்கப்பட்டதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை ஏற்றுக்கொண்ட அரசாங்கம், எதிர்வரும் 21ஆம் திகதிவரை வடக்கில் பொதுமக்களுக்கு வீடுகளையோ காணிகளையோ வழங்குவதை இடைநிறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் பசில் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பில் ஆட்பதிவு திணைக்கள கிழக்கு காரியாலயம் திறந்துவைப்பு-

அரச பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின்கீழ் செயற்படும் ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்கள நடவடிக்கைகளை மாகாணங்கள் ரீதியாக விஸ்தரிக்கும் பொருட்டு கிழக்கு மாகாணத்திற்கான மாகாண அலுவலகமொன்று இன்று மட்டக்களப்பு பிரதேச செயலகத்தில் தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலர் மல்காந்தி விக்கிரமசிங்கவினால் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது. மகிந்த சிந்தனை திட்டத்திற்கு அமைவாக அரச பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் அங்கீகாரத்தில் தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சு மற்றும் ஐ.நா. அபிவிருத்தி உதவித் திட்டத்தில் இம்மாகாண அலுவலகம் மட்டக்களப்பு நகரின் மண்முனை வடக்கு பிரதேச செயலக மேல்மாடியில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.