யாழ். கோண்டாவில் கிழக்கு, பண்டத்தரிப்பு பகுதிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கருத்தரங்குகள்-

2013-09-10 18.20.22 2013-09-10 18.20.22_1 2013-09-10 19.27.58 2013-09-10 19.40.38யாழ்ப்பாணம், கோண்டாவில் கிழக்கு பழனியாண்டவர் கோவிலடியில் இன்றுமாலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கருத்தரங்கொன்று இடம்பெற்றது. கோயில் நிர்வாக சபையைச் சேர்ந்த திரு. இராசதுரை அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன், வலி தெற்கு பிரதேச சபைத் தலைவர் பிரகாஸ், வலி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் கௌரிகாந்தன், வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர் ஹரிகரன் ஆகியோர் உரையாற்றினார்கள். இதனைத் தொடர்ந்து வடலியடைப்பு, பண்டத்தரிப்பு சனசமூக நிலையத்தில் திரு. சுதர்சன் அவர்களின் தலைமையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மற்றுமொரு தேர்தல் கருத்தரங்கு இடம்பெற்றது. இக்கருத்தரங்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்டாளர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன், வலி மேற்கு பிரதேச சபைத் தலைவர் திருமதி நாகரஞ்சனி ஐங்கரன், வலி தெற்கு பிரதேச சபைத் தலைவர் பிரகாஸ் ஆகியோர் உரையாற்றினார்கள். இக்கருத்தரங்கில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், நீண்ட காலமாகவே இழுத்தடிக்கப்பட்டு பல்வேறு அழுத்தங்கள் காரணமாக நடத்தப்படவுள்ள இத் தேர்தலானது மிகவும் முக்கியமான ஒரு தேர்தலாகவே பார்க்கப்படுகின்றது. ஆகவே இத்தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மிகப் பெரிய வெற்றியைப் பெறுவதை தமிழ் மக்கள் உறுதிசெய்ய வேண்டும். இதன்மூலமே தமிழ் மக்கள் தமது உரிமையைத் தொடர்ந்தும் உறுதியாக வலியுறுத்துகின்றார்கள் என்பதை அரசுக்கும், எம்மீது அக்கறையுள்ள நாடுகளுக்கும் நாம் தெளிவுபடுத்த முடியும். எனவே ஒட்டுமொத்த தமிழ் மக்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிப்பது அவர்களின் வரலாற்றுக் கடமையாகும். தமிழ் மக்கள் சிரமம் பாராது தேர்தலன்று தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து கூட்டமைப்பை பெரும்பான்மை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். இக்கருத்தரங்குகளில் பெருமளவிலான பொதுமக்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.