பூக்குளத்திற்கு 30ஆண்டுகளின் பின்னர் வாக்களிப்பு நிலையம்-

30 வருடங்களின் பின்னர் புத்தளம் மாவட்டத்தின் பூக்குளம் மீனவர் கிராமத்தில் முதன்முறையாக வாக்களிப்பு மத்திய நிலையம் ஒன்று அமைக்கப்படுவதாக புத்தளம் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி கிங்சிலி பெனாண்டோ தெரிவித்துள்ளார். புத்தளம் மாவட்டத்தில் வடக்கு முனையிலுள்ள இறுதி கிராமம் இதுவாகும்.

தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் 382 முறைப்பாடுகள்-

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரையில் 382 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. குருநாகல் மாவட்டத்தில் அதிகளவான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் முறைப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. வன்முறைகள் தொடர்பில் 41 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. அரச வளங்கள் தேர்தல் பிரச்சாரங்களுக்குப் பயன்படுத்தப்பட்டமை தொடர்பிலும் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இதில் அரச ஊழியர்கள் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுகின்றமை குறித்து கூடுதல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன என்று தேர்தல் முறைப்பாட்டுப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

ஜப்பானிய துணை அமைச்சர் இலங்கை விஜயம்-

ஜப்பான் நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரங்கள் தொடர்பான துணை அமைச்சர்  மினோரு கியுச்சீ  இருநாள் விஜயமொன்றை மேற்கொண்டு நாளை இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக அரசாங்க இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிடையேயான இராஜதந்திர உறவினை வலுப்படுத்துவதே இந்த விஜயத்திற்கான நோக்கம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இவ்விஜயத்தின்போது ஜப்பான் துணை அமைச்சர் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் உட்பட பல முக்கிய பிரமுகர்களை சந்திப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டில் ஆஸி பிரதமர் பங்கேற்பு-

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொள்ளப்போவதாக அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் டொனி அபொட் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இதன்போது புதிய பிரதமரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்தியுமுள்ளார். இறுதியாக பொதுநலவாய தலைவர்களின் மாநாடு கடந்த 2011ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் பேர்த்தில் நடைபெற்றது. இது தொடர்பில் இலங்கைக்கு உதவும் பொருட்டு இறுதி மாநாட்டின் ஏற்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் ஜூன்மாதம் இங்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொதுநலவாய மாநாட்டுக்கு வெளிநாட்டு பாதுகாப்பு அணி வராது-அமுனுகம

பொதுநலவாய உச்ச மாநாட்டுக்கு வருகைதரும் நாடுகளின் தலைவர்களுடன் மேலதிக வெளிநாட்டு பாதுகாப்பு அணி எதுவும் இலங்கைக்கு வராதென வெளிவிவகார அமைச்சின் செயலர் கே.அமுனுகம தெரிவித்துள்ளார். பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜகத் ஜயசூரியவின் தலைமையிலான விசேட இலங்கை பாதுகாப்பு குழு, பாதுகாப்பு ஏற்பாடுகளை பொறுப்பேற்றுள்ளதால் வழமையான பிரத்தியேக பாதுகாப்பு ஒழுங்குமுறைக்கு அப்பால் மேலதிக பாதுகாப்பு எதிர்ப்பார்க்கப்படமாட்டாதென அனுமுனுகம குறிப்பிட்டுள்ளார். முப்படைகளின் விசேட செயலணியும் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். பொதுநலவாய நாடுகளின் 54 தலைவர்கள் அல்லது பிரதிநிகள் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்கு நவம்பர் 10ஆம் திகதிக்கும் 17ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இலங்கைக்கு வருகைதரவுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.