மல்லாவியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டம்-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று முன்தினம் (10.09.2013) முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி சிவன்கோவில் வளாகத்தில் இடம்பெற்றது. மாந்தை கிழக்கு பிரதேச சபை தவிசாளர் திரு. தனிநாயகம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வினோ நோகராதலிங்கம் ஆகியோரும் முள்ளியவளையின் மூத்த அரசியல் பிரமுகர் முத்து சுப்பிரமணியம் அவர்களும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட வேட்பாளர்களும் உரையாற்றினார்கள். இங்கு உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட புளொட் வேட்பாளர் கந்தையா சிவநேசன் (பவன்) அவர்கள், இந்த மாகாணசபைத் தேர்தலானது நீண்டகால இழுத்தடிப்புகளுக்குப் பின்னர் பல அழுத்தங்களின் காரணமாக நடாத்தப்படும் ஒரு தேர்தலாகும். எனவே இத்தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து கூட்டமைப்பை பெரும்பான்மையுடன் வெற்றிபெறச் செய்ய வேண்டியது தமிழ் மக்கள் அனைவரதும் கடமையாகும். இன்று அரசாங்கத்தினால் முன்வைக்கப்படுகின்ற ஒரேயொரு காரணம் அபிவிருத்தி என்ற விடயம் மாத்திரமே. அந்த அபிவிருத்தியானது அது எங்களுடைய உரிமையாகும். எங்களுக்குரிய அபிவிருத்தியை நாங்களே மேற்கொள்ள வேண்டும். இதற்கு தமிழ் மக்கள் அனைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து கூட்டமைப்பு மூன்றிலிரண்டு பெரும்பான்மை வெற்றி பெறுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் உள்ளுராட்சிசபை தலைவர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பெருமளவிலானோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.