ஆனைக்கோட்டை, பாசையூர் பகுதிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள்-
யாழ். ஆனைக்கோட்டை, உயரப்புலம் பாரதி சனசமூக நிலையத்தில் இன்றுமாலை 5.00மணியளவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டமொன்று இடம்பெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர்களான தர்மலிங்கம் சித்தார்ததன், பா.கஜதீபன் ஆகிய இருவரையும் ஆதரித்து ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இக்கூட்டம் வலி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் கணேசவேல் தலைமையில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், பா.கஜதீபன். ஆகியோரும், வலி தென்மேற்கு பிரதேச சபை உப தவிசாளர் சிவகுமார், வலி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் கௌரிகாந்தன் ஆகியோரும், ஊர்ப் பிரமுகர்களும் உரையாற்றினார்கள். இக்கூட்டத்தில் பெருமளவிலான பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்றுமாலை 6.45மணியளவில் பாசையூர் புனித அந்தோனியார் ஆலய வளாகத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டமொன்று இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், என்.சிறீகாந்தா, எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர்கள், திருகோணமலை மாவட்ட முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினர் துரைரெட்ணசிங்கம் ஆகியோர் உரையாற்றினார்கள் இதன்போது முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி என்.சிறீகாந்தாவினால் தயாரிக்கப்பட்ட உடையும் விலங்குகள் என்கிற பாடல் இறுவெட்டும் வெளியிடப்பட்டது. இக்கூட்டத்தில் பெருந்திரளான பொதுமக்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.