கொல்லங்கலட்டியில் கூட்டத்திற்கு சென்ற மக்கள் இராணுவத்தினரால் விரட்டியடிப்பு-

annar and kajatheepanயாழ். தெல்லிப்பளை, கொல்லங்கலட்டி பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் அமைந்துள்ள கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கருத்தரங்கு ஒன்று இன்றுமாலை 5மணியளவில் நடாத்துவதற்கு ஏற்பாடாகியிருந்தது. இதற்காக பெருமளவிலான மக்கள் அங்கு கூடியிருந்தார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், பா.கஜதீபன், சர்வேஸ்வரன் ஆகியோர் இக்கூட்டத்திற்கு சென்று கொண்டிருந்தபோது அங்கு கூடியிருந்த மக்கள் கூட்டத்தை இராணுவத்தினர் பொல்லு தடிகளுடன் வந்து விரட்டியடித்து கிராம அபிவிருத்திச் சங்கத்தின் கதவினையும் பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இது சம்பந்தமாக உடன் யாழ் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளருக்கு முறைப்பாடு செய்யப்பட்டது. உடனடியாக அவர் சம்பவ இடத்திற்கு அதிகாரிகளை அனுப்பி நிலைமைகளை அவதானித்திருந்தார். இந்நிலையில் இந்த அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் மேற்படி கூட்டத்திற்காக மக்கள் மீளவும் அங்கு கூடியபோது அங்கு வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களான தர்மலிங்கம் சித்தார்த்தனும், பா.கஜதீபனும், சர்வேஸ்வரனும் அங்கிருக்கும் மக்களின் பாதுகாப்பு கருதி கூட்டத்தை பிற்போட்டுச் சென்றனர். இதேவேளை சம்பவத்தையடுத்து பவ்ரல் அமைப்பின் பிரதிநிதிகளும் அவ்விடத்திற்கு வருகைதந்து நிலைமையினை கண்காணித்துச் சென்றனர்.