வட மாகாணசபை தேர்தல், கூட்டமைப்பின் இறுதி பிரசாரக் கூட்டங்கள்-
வட மாகாணசபைத் தேர்தலின் இறுதிப் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற தினம் இன்றாகும். இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இறுதிப் பிரசார கூட்டங்கள் யாழ் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று இடம்பெற்றன. குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆறு பிரதான பரப்புரைக் கூட்டங்கள் இன்று நடைபெற்றன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலாவது தேர்தல் பரப்புரைக் கூட்டம் பருத்தித்துறை கடற்கரைப் பகுதியில் இன்றுபிற்பகல் இடம்பெற்றது. ஏனைய கூட்டங்கள்; உடுப்பிட்டி, வதிரி உள்ளியன் எல்லை அம்மன் ஆலய வளாகம், சுன்னாகம் மயிலங்காடு, யாழ். சட்டநாதர் கோவிலடி, யாழ். குருநகர் ஆகிய இடங்களில் இன்றுமாலையில் இடம்பெற்றுள்ளன. இன்றைய இறுதி தேர்தல் பிரசார கூட்டங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், எம்.ஏ. சுமந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.கே.சிவாஜிலிங்கம், வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் சி.வி விக்னேஸ்வரன் ஆகியோரும் யாழ் மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களும் உரையாற்றினார்கள். இங்கு உரையாற்றியவர்கள், இத்தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மிகப் பெரிய வெற்றியைப் பெறுவதை தமிழ் மக்கள் உறுதிசெய்ய வேண்டும். இதன்மூலமே தமிழ் மக்கள் தமது உரிமையைத் தொடர்ந்தும் உறுதியாக வலியுறுத்துகின்றார்கள் என்பதை அரசுக்கும், எம்மீது அக்கறையுள்ள நாடுகளுக்கும் தெளிவுபடுத்த முடியும். எனவே ஒட்டுமொத்த தமிழ் மக்களும் கூட்டமைப்புக்கு வாக்களிப்பது அவர்களின் வரலாற்றுக் கடமையாகும். தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கு வாக்களித்து கூட்டமைப்பை பெரும்பான்மை வெற்றிபெறச் செய்யவேண்டும் என்ற கருத்துப்பட உரையாற்றினார்கள். இக்கூட்டங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளுராட்சி சபை தலைவர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள்; என பெருந்திரளானோர் பங்கேற்றிருந்தார்கள்.