‘தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இராஜதந்திர வழிமுறைகளை ஏற்றுக்கொண்டுதான் அதில் நாம் இணைந்தோம் – தர்மலிங்கம் சித்தார்த்தன்.
எதிர்காலம் பற்றிய எண்ணங்கள், தனது தனிப்பட்ட அரசியல் பயணம், தமது அமைப்பு கடந்து வந்த பாதை, விடுதலைப் புலிகளுடனான உறவு, 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் போன்றவை தொடர்பாக உரையாடுகிறார் தர்மலிங்கம் சித்தார்த்தன்.
தினக்குரல் நாளிதழின் வட மாகாணப் பதிப்பில், 18.09.2013 அன்று வெளியாகிய செவ்வி (தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) அமைப்பினதும், அதன் அரசியற் கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியினதும் தலைவரான தர்மலிங்கம் சித்தார்த்தன், நடைபெறவிருக்கின்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளராக, ‘வீடு’ சின்னத்தின் கீழ், ’15’ குறியீட்டு இலக்கத்தில்; போட்டியிடுகின்றார்.)
தமிழ்த் தேசிய அரசியல் ஒரு முக்கிய திருப்புமுனைக்கான பயணத்தில் நிலைகொண்டிருப்பதாகவே பல அரசியல் அவதானிகளும் அபிப்பிராயப்படுகின்றனர். ஒரு புறம் இலங்கை அரசின் மீதான ஜக்கிய நாடுகள் சபையின் அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன. பிறிதொரு புறம் 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்றவாறன பிராந்திய அழுத்தமும் அதிகரித்திருக்கின்றது. ஏதோ ஒரு வகையில், இவற்றைச் செவிமடுக்க வேண்டிய இக்கட்டு நிலையில் ஆளும் மகிந்த அரசாங்கம் சிக்குண்டிருக்கின்றது என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக இருக்கிறது. இத்தகையதொரு முக்கியமான கட்டத்தில்தான் வடக்கு மாகாண சபைத் தேர்தல் இடம்பெறுகின்றது. அதில் நீங்கள் ஒரு வேட்பாளராகப் போட்டியிடுகின்றீர்கள். உங்களுக்கும் ஏனைய வேட்பாளர்களும் இடையில் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. நீங்கள் இலங்கையில் ஒரு மாகாண சபை முறைமை தோன்றுவதற்கான அடிப்படையை வழங்கிய திம்பு பேச்சுவார்த்தையில் பங்குகொண்ட ஒருவர். திம்பு பேச்சுவார்த்தையில் பங்குகொண்டவர்களில் நீங்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் தான், இன்றும் அரசியலில் (யுஉவiஎந pழடவைiஉள) இயங்கிக் கொண்டிருக்கின்றீர்கள். இவ்வாறான அனுபவத்துடன் இன்றைய வடக்குத் தேர்தலின் முக்கியத்துவத்தை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
அரசியல் அவதானிகள் குறிப்பிடுவது போன்று இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் என்பதுதான் என்னுடைய கருத்தும். நீங்கள் குறிப்பிடுவது போன்று, அரசாங்கத்தின் மீதான மேற்குலக அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன. ஆரம்பத்தில் சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஆகியவற்றின் பிரச்சாரங்கள், மேலும் சனல் – 4 காட்சிகள் போன்ற அனைத்தும் சேர்ந்து, மேற்குலக சமூகத்தில் அதிர்வலையொன்றை ஏற்படுத்தியது. இதுவே பின்னர், இலங்கை அரசாங்கம் தொடர்பான கடும் விமர்சனமாக மேற்குலகில் உருவாகியது. ஆனாலும், இவை சுயாதீனமான நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டதால், இவற்றுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய கடப்பாடு தங்களுக்கு இல்லை என்னும் இறுமாப்புடன்தான் அரசாங்கம் நடந்து கொண்டது. இத்தகைய ஒரு சூழலில்தான் ஜக்கிய நாடுகள் சபையில் அரசாங்கத்தின் இறுமாப்பிற்கு ஒரு கடிவாளம் போடும் வகையில், அமெரிக்க அரசாங்கத்தினால் இரண்டு பிரேரணைகள் கொண்டுவரப்பட்டன. உண்மையில் இந்த பிரேரணைகளுடன்தான் மேற்குலக அழுத்தம் என்பது அரசுகள் தொடர்பான அழுத்தமாக மாறியது. அரசுகள் தொடர்பான அழுத்தத்திற்குப் பதில் சொல்லும் கடப்பாட்டை மகிந்த அரசாங்கத்தினால் தட்டிக்கழிக்க முடியாத சூழல் தோன்றியது. இதில் முக்கியமானது பிராந்திய சக்தியான இந்தியா அமெரிக்கப் பிரேரணைகளை ஆதரித்தமையாகும். இந்தியாவின் ஆதரவு இல்லாமல் இருந்திருந்தால், அப்பிரேரணைகள் வெற்றி பெற்றிருக்காது. எனவே இந்த மேற்குல அழுத்தம் என்பது, ஒரே நேரத்தில் மேற்குலகினதும், இந்தியாவினதும் அழுத்தமாகவே இருந்து வருகிறது. மேற்குலகும், இந்தியாவும் சந்திக்கும் அந்த புள்ளி, தமிழர் பிரச்சனையின் அடிப்படையாக இருக்கின்ற அதிகார சமநிலை இன்மையைப் போக்கும் வகையிலான ஒரு உள்ளகப் பொறிமுறையை இலங்கை அரசு நிரூபித்துக் காட்ட வேண்டும் என்பதாகும். அத்தகையதொரு பொறிமுறையை, நிலைத்து நிற்கக்கூடிய ஒன்றாக, அரசாங்கம் நிரூபிக்காத வரை, இலங்கை அரசாங்கத்தின் மீதான அழுத்தங்கள் தொடர்ந்த வண்ணமே இருக்கும். இத்தகைய ஒரு சூழலில்தான், யுத்தம் முடிவுற்று நான்கு வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும், வடக்கு மாகாண சபைத் தேர்தலைப் பிற்போட்டுக் கொண்டிருந்த அரசாங்கம், தேர்தலை அறிவித்தது.
எனவே, நாங்கள் இங்கு ஒரு விடயத்தை விளங்கிக் கொள்ள வேண்டும். இந்தத் தேர்தலில் இன்று நாங்கள் ஏன் போட்டியிடுகின்றோம் என்றால், இந்தத் தேர்தல் அரசாங்கத்தின் மீதான பிராந்திய மற்றும் மேற்குலக அழுத்தங்களின் காரணமாகவே நிகழ்கின்றது என்பதனாலாகும். எனவே இத்தகையதொரு தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெற வேண்டியது, எங்களைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமான ஒன்று. இங்கு முக்கியம் என்பதை விடவும், தமிழினத்தின் அரசியல் எதிர்காலமே நாங்கள் பெறப்போகும் வெற்றியில்தான் தங்கியிருக்கிறது. எங்கள் வெற்றி உறுதியான ஒன்று என்பதில் எனக்கு இம்மியளவும் சந்தேகமில்லை. ஆனால் அது எப்படிப்பட்டதொரு வெற்றியாக இருக்க வேண்டும் என்பது தான் எல்லாவற்றையும் விடவும் முக்கியமானது.
இந்தத் தேர்தலில் நாங்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைகளை பெற்று, வெற்றி பெற வேண்டும் என்பதுதான் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டிய விடயமாகும். அரசாங்கம் தனது மூன்றில் இரண்டு பாராளுமன்றப் பெரும்பான்மையைக் காரணம் காட்டியே, சில விடயங்களை வெற்றிகரமாக சாதித்துவருகிறது. நாங்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையான ஒரு தேசிய இனம். எனவே நாங்கள் எங்களது கோரிக்கையைச் சர்வதேசத்தின் முன் உறுதியாக எடுத்தியம்ப வேண்டுமாயின், எங்களது மக்கள் வாழுகின்ற இடங்களில் மூன்றில் இரண்டிற்கும் மேலான பெரும்பான்மையை நாங்கள் கொண்டிருக்க வேண்டும்.
இன்னொரு விடயத்தையும் நான் இந்த இடத்தில் குறிப்பிட வேண்டியிருக்கிறது. அரசியலமைப்பின் 13வது திருத்தம் என்பது, நீங்கள் குறிப்பிட்டது போன்று, அன்று இந்தியாவின் அனுசரணையுடன் திம்புவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் விளைவாகவே உருப்பெற்றது. இன்று 13வது திருத்தச் சட்டம் என்பது, இலங்கையின் அரசியல் யாப்பு. ஆனால், அரசியல் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களைக் கூட இந்த அரசாங்கம் அமுல்படுத்தத் தயார் இல்லை. ஆனால் இதனை நாங்கள் எவ்வாறு சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வது..? தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மாகாண நிர்வாகத்தைக் கைப்பற்றினால் மட்டுமே, தனது சொந்த அரசியல் யாப்பையே செயற்படுத்தத் தவறுகின்ற அரசாங்கத்தின் மீது நெருக்கடிகளைக் கொண்டுவர முடியும். எனவே இந்தக் கண்ணோட்டத்தில் நோக்கினால், தமிழ் கூட்டமைப்பின் வடக்கு மகாண சபை நிர்வாகம் என்பது, ஒரே நேரத்தில் உள்ளக நிலையில் நேரடியான அழுத்த அரசியலைத் தொடர்வதற்கான கருவியாகவும், அதே வேளை மேற்குலகும் இந்தியாவும் கொழும்பின் மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கான ஒரு கருவியாகவும் இருக்கும்.
இங்கு நாம் இன்னொரு விடயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பண்டா – செல்வா ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்தவர்களால், டட்லி – செல்வா ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்தவர்களால், ஏன் 13ஆவது திருத்தச் சட்டத்தைக் கிழித்தெறிய முடியாமல் இருக்கின்றது..? ஏனெனில், இது இந்தியாவுடன் தொடர்புபட்ட விடயம். இலங்கை அரசாங்கம் நினைத்தபடி நடந்துகொள்ள முடியாது. இங்குதான் நாங்கள் இராஜதந்திர உறவுகளின் பலத்தை விளங்கிக் கொள்ள வேண்டும். அதன் தடத்தில்தான் நாங்களும் பயணிக்க வேண்டும். எனவே வடக்கு மாகாண சபைத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பாண்மையைப் பெற்று, நாங்கள் ஆட்சியமைக்கும் போது, அது வெறும் மாகாண சபை ஆட்சியாக மட்டும் இருக்காது. ஒரு புறம் மேற்குலகின் இராஜதந்திர அழுத்தத்திற்கான கருவியாகவும், பிராந்திய சக்தியான இந்திய அழுத்தத்திற்கான கருவியாகவும் இருக்கும். மேற்குலகு, ஜக்கிய நாடுகள் சபையின் ஊடாக முன்தள்ளும் அழுத்தங்களை ஊன்றுகோலாகக் கொண்டு, இந்தியா தனது தனித்துவமான அழுத்தங்களைப் பிரயோகிக்கும். இவைகள் நிகழ வேண்டுமாயின், வடக்கு மாகாண சபை ஆட்சி எங்கள் வசம் இருக்க வேண்டும். ஏனெனில் அதுதான் இன்றைய இக்கட்டான சூழலில், எங்களது அரசியல் நகர்வுகளின் அத்திபாரமாக இருக்கிறது. ஆனால் இது அத்திபாரம் மட்டும்தான் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். அதனைக் கொண்டு எத்தகையதொரு இல்லத்தை கட்டியெழுப்பப் போகின்றோம் என்பதுதான் இங்கு முக்கியமானது. அதற்கு நாம் சரியானதொரு தந்திரோபாயத்துடன் அதிகம் பயணிக்க வேண்டியிருக்கிறது.
நீங்கள் இவ்வாறு குறிப்பிட்டாலும், ஓன்றுமில்லாத மாகாண சபையில் கூட்டமைப்பு நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருப்பதாகவும் ஒரு விமர்சனம் உண்டு. உங்களால் துணிகரமான போராட்டங்கள் எதனையும் செய்ய முடியாமையால்தான், இவ்வாறு மாகாண சபைக்குள் முடங்கிப் போக முயல்கின்றீர்கள்! இப்படியான விமர்சனங்களும் எழுகின்றனவே!
அப்படியான விமர்சனங்களை நானும் அவதானித்தேன். நான் முன்னரே குறிப்பிட்டேன். இதனை நாங்கள் ஒரு அத்திபாரமாகவே கருதுகின்றோம். நாங்கள் அத்திபாரத்தை அழகான வீடு என்று சொன்னால்தான், நீங்கள் எங்களை விமர்சிக்க வேண்டும். நாங்கள் எங்கும் அப்படிச் சொல்லவில்லையே! எங்களது அமைப்பான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), 13வது திருத்தச் சட்டம் அறிமுகமானபோதே அதன் மீதான எதிர்ப்பைப் பதிவு செய்துவிட்டிருந்தது என்பதை, இந்தச் சந்தர்ப்பத்தில் அழுத்திச் சொல்ல விரும்புகின்றேன். இந்திய – இலங்கை உடன்படிக்கையைக் கூட எதிர்த்துச் செயற்பட்டவர்கள் நாங்கள். அது மட்டுமில்லாது, அன்று இந்திய படைகள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராகப் போரை நடாத்திய போது, அதனைக் கண்டித்து எதிர்த்தவர்கள் நாங்கள். 2009-இற்குப் பின்னர் அரசியலுக்குள் நுழைந்த பலருக்கும் இது தெரியாதிருக்கலாம். நான் ஏன் இவ்வாறான விடயங்களைப் பகிர்ந்து கொள்கின்றேன் என்றால், நாங்கள், 13வது திருத்தச் சட்டம் குறித்து எதுவும் தெரியாமல் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுவதற்காகத்தான்.
துணிகரமான போராட்டம் செய்யவில்லை என்னும் விமர்சனங்களுக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் எனது பதிலைத் தருவது பொருத்தமாகவே இருக்கும். தமிழீழ விடுதலைப் புலிகள் காட்டிவிடாத துணிகரத்தை இனி எவரும் காட்டிவிட முடியாது. ஆனால், அவ்வாறானதொரு துணிகரத்தின் வீழ்சிக்குப் பின்னர்தான், மீண்டும் நிமிர்ந்தெழ வேண்டிய பொறுப்பை நாம் உணர்கிறோம். அதனை வெறும் வார்த்தைகளில் செய்ய முடியாது. ஏதாவது ஒரு ஊன்றுகோலைப் பிடித்துத்தான் தமிழினம் நிமிர முயற்சிக்கலாம். இன்று நாங்கள் ஒர் அரசியல் தளமற்றவர்களாக இருக்கின்றோம் என்பதை நாங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். மீண்டும் எங்களுக்கான ஒரு தளத்தை உருவாக்க வேண்டுமென்றால் இந்த மாகாண சபைக்குள் செல்வதைத் தவிர வேறு வழி இல்லை. தவிர, சர்வதேசம் எங்களிடம் இப்போது துணிகரத்தை எதிர்பார்க்கவில்லைளூ மாறாக, ஜனநாயக நகர்வொன்றிற்கான சாணக்கியத்தையும் உறுதிப்பாட்டையுமே எதிர்பார்க்கின்றது. ஏனெனில், அரசாங்கம் விடுதலைப் புலிகளின் துணிகரத்தை வீழ்த்துவதற்கு, இதே சர்வதேசம் தான் ஒத்தாசை புரிந்தது என்பதையும் நாங்கள் மறந்துவிடக் கூடாது. சர்வதேசத்தை அதன் மொழியில்தான் நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இன்று சர்வதேசம், யுத்த வெற்றிக் களிப்பில் கிடக்கும் மகிந்த அரசுடன் ஒரு மொழியில் பேசிக் கொண்டிருக்கிறது. எனவே, அந்த சர்வதேச அணுகுமுறையைக் குழப்புபவர்களாக நாங்கள் இருந்தவிடக் கூடாது. எங்களது செயற்பாடுகள் அதிக இராஜதந்திர நுணுக்கம் உடையதாக இருக்க வேண்டும். உண்மையில் நான் இந்த தேர்தலில் போட்டியிடுவது அத்தகையதொரு நோக்கத்தில்தான். கூட்டமைப்பின் தலைமையால் முன்னெடுக்கப்பட்டுவரும் இராஜதந்திர நகர்வுகளுக்கு என்னால் முடிந்த உதவிகளையும் வழங்க வேண்டும் என்பதே எனது நோக்கம். ஏனெனில், இராஜதந்திர அரசியலைக் கையாளுவதில் எனக்கும் கணிசமான அனுபவங்கள் உண்டு. எனவே, மாகாண சபை எங்களுக்குப் போதும் என்று நாங்கள் குறிப்பிடவில்லை. போதும் என்று சொல்லக் கூடிய ஒன்றை அடைவதற்கான வழிமுறையாக, மாகாண சபையைக் கையாள வேண்டும் என்றுதான் குறிப்பிடுகின்றோம்.
இப்படியொரு கேள்வியை எழுப்புவதற்காக நீங்கள் சங்கடப்படக் கூடாது. இன்று நீங்கள் பல்வேறு விடயங்களைச் சிறப்பாக எடுத்தியம்பியிருக்கின்றீர்கள். ஆனாலும் யாழ்பாணத்தில் உங்களை அடிப்படையாக் கொண்டு சில விமர்சனங்களும் மேலெழாமல் இல்லை. ஒரு வேளை வடக்கில் உங்களுக்குக் கணிசமான ஆதரவு உருவாகிவருவதைச் சகித்துக்கொள்ள முடியாதவர்கள் கூட இவ்வாறான விமர்சனங்களைத் தூண்டியிருக்கலாம். எனினும் சில விடயங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளும் நோக்கிலேயே இதனைக் கேட்கிறேன். நீங்கள் யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகச் செயற்பட்டதாகவும், குறிப்பாக யுத்தத்தை ஆதரித்ததாகவும் சில விமர்சனங்கள் உலவுகின்றன. இன்று வடக்கின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவர் என்னும் வகையிலும், அத்துடன் விருப்பு வாக்கில் முன்னணி வகிகக் கூடிய ஒருவர் என்றும் கருதப்படுகின்ற நீங்கள், இப்படியான விமர்சனங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பை எவ்வாறு விளங்கிக் கொள்ளுகின்றீர்கள்?
இவற்றுக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பை நான் தட்டிக்கழிக்க விரும்பவில்லை. தவிர, புளொட் இயக்கத்தின் தலைவர் என்னும் வகையிலும், இன்றும் அரசியலில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒருவன் என்னும் வகையிலும் இப்படியான விமர்சனங்களுக்கு பதில் சொல்லும் கடப்பாடு எனக்குண்டு என்றே கருதுகின்றேன். என்னை நோக்கி, எங்களது அமைப்பை நோக்கி, விமர்சனங்களை முன்வைப்பவர்களுக்கு எத்தகைய நோக்கங்களும் இருக்கலாம். அது பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால் நாங்கள் ஒருபோதும் எங்களை விமர்சனத்தற்கு அப்பாற்பட்டவர்களாகக் கருதியதில்லை. மாறாக, ஆக்கபூர்வமான விமர்சனங்களை வரவேற்பதில் முன்னோடிகளாகவே இருந்திருக்கிறோம். மிதவாத அரசியல் நம்பிக்கை வீழ்சியடைந்து, ஆயுதப் போராட்டம் துளிர்விட ஆரம்பித்த போது, அதன் ஆரம்ப கர்த்தாக்களில் நானும் ஒருவனாக இருந்திருக்கிறேன். இந்த விடயம் 2009இற்கு பின்னர் அரசியலுக்கு வந்தவர்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. நாங்கள் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் ஒருபோதுமே யுத்தத்தை ஆதரித்திருக்கவில்லை. அரசாங்கத்தை நோக்கியும், விடுதலைப் புலிகளின் தலைமையை நோக்கியும் ஒரு வேண்டுகோளை விடுத்த வண்ணமே இருந்தோம். இரண்டு தரப்பினரும் சேர்ந்து இந்த கொடிய யுத்ததிற்கு ஒரு தீர்வை காண வேண்டும். அதற்கு எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய நாங்கள் தயராக இருக்கின்றோம். இந்தச் செய்தியை நாங்கள் மீண்டும், மீண்டும் வலியுறுத்தி வந்திருக்கிறோம். ஒருவேளை நாங்கள் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து ஒரு நிரந்தரத் தீர்வுடன் கூடிய அமைதியை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தியதைச் சிலர் புலிகளுக்கு முடிவுகட்டுமாறு நாங்கள் கூறியதாகத் திரிபுபடுத்தியிருக்கலாம்.
நாங்கள் விடுதலைப் புலிகளோடு முரண்பட்டுப் பயணித்திருக்கிறோம் என்பது உண்மை. அதனை மறைத்து வாக்கு கேட்கும் அளவிற்கு நாங்கள் அரசியல் நேர்மையற்றவர்கள் அல்ல. இந்த இடத்தில் சில விடயங்களை நான் சொல்ல வேண்டியிருக்கிறது. நாங்கள் விடுதலைப் புலிகளோடு முரண்பட்டு நின்றோம் என்பதை இன்று தங்களது சொந்தத் தேவை கருதி தூக்கிப் பிடிப்பவர்கள் அதன் மறுபக்கத்தைச் சொல்லுவதில்லை. ஆயுதப் போராட்டத்திற்கென்று நாங்கள் புறப்பட்ட போது, எங்கள் அனைவருக்குள்ளும் ஒரே விடுதலைத் தீ தான் எரிந்துகொண்டிருந்தது. அது ஒரு சுதந்திர அரசு என்பதுதான். ஆனாலும் பின்வந்த நாட்களில் துரதிஸ்டவசமாக, நாங்கள் எங்களுக்குள்ளேயே முரண்பட்டு பல்வேறு இயக்கங்களானோம். நாங்கள் பல்வேறு இயக்கங்களான போது, நாளடைவில் சாதாரண முரண்பாடுகளுக்கும் ஆயுதங்களால் பதில் சொல்லத் தொடங்கினோம். நாங்கள் எங்களுக்குள் நிலவிய பிரச்சனைகளை எப்போது ஆயுதங்களால் தீர்த்துக்கொள்ள ஆரம்பித்தோமோ, அப்போதிலிருந்து நாங்கள் முரண்பட்டவாறுதான் பயணி;த்திருக்கிறோம். அன்றிலிருந்து நாங்கள் எவரும் இதய சுத்தியுடன் ஒன்றுபட்டதேயில்லை.
ஆனால், ஏனைய இயக்கங்களுக்கும் எங்களுக்கும் ஒரு அடிப்படையான வேறுபாடு உண்டு. நாங்களும் விடுதலைப் புலிகள் இயக்கமும் ஒரே போராட்ட விதையிலிருந்து வந்தவர்கள். தம்பியும் (பிரபாகரன்) பின்னர் எங்கள் கழகத்தின் தலைவராக இருந்த உமாமகேஸ்வரனும் இன்னும் சில நண்பர்களுமாக உருவாக்கிய அமைப்புத்தான் – ‘புதிய தமிழ் புலிகள்’ என்னும் இயக்கம். இந்த இயக்கம் தான் பின்னர் உமாமகேஸ்வரனைத் தலைவராகவும், தம்பியை (பிரபாகரன்) இராணுவத் தளபதியாகவும் கொண்டு, ‘தமிழீழ விடுதலைப் புலிகள்’ என்னும் இயக்கமாகப் பரிணமித்தது. இது இன்றும் பலருக்கும் தெரியாது. இந்த வரலாற்றைச் சொல்லக்கூடிய ஒரு சிலர் மட்டும்தான் இப்போதும் இருக்கிறார்கள். இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினராக இருந்தவர்களில் நானும் ஒருவன்.
இன்னொரு விடயத்தையும் இந்த சந்தர்ப்பத்தில் குறிப்பிட விரும்புகின்றேன். நான் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினாராக இருந்த காலத்தில்தான், பாலா அண்ணை (திரு. அன்ரன் பாலசிங்கம்) விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குள் வந்து சேர்ந்தார். அவரை அவ்வாறு கொண்டுவந்து சேர்த்த, மூன்று பழைய உறுப்பினர்களில் நானும் ஒருவன். கந்தரோடையில் இருக்கின்ற எங்கள் வீடு – தம்பியும் (பிரபாகரன்) உமா மகேஸ்வரனும் அடிக்கடி இரகசியமாக வந்து எனது தந்தையார் தர்மலிங்கத்துடன் உரையாடிச் செல்லும் இடமாக 1970களில் இருந்தது. பின்னர், அவர்கள் இருவருக்குமிடையில் தனிப்பட்ட கருத்துவேறுபாடு எழுந்து, அவர்கள் பிரிந்து சென்றபோது, நான் உமாமகேஸ்வரனுடன் சென்றபோதும், தம்பியுடனான (பிரபாகரன்) எனது தந்தையின் தனிப்பட்ட உறவு இருந்துவந்திருக்கிறது.
பிற்காலத்தில், எமது அமைப்பின் செயலதிபரான உமாமகேஸ்வரன், விடுதலைப் புலிகள் அல்லாத வேறு தரப்பு ஒன்றினால் கொல்லப்பட்ட பின்பு, நான் எங்களது அமைப்பின் தலைமைப் பொறுப்பை எடுத்தேன். ஆரம்பத்தில் தீவிரமாகப் போராடியிருந்த போதும், பின்னர் நாங்கள், ஆயுதப் போராட்ட அரசியலில் இருந்து ஒதுங்கி, ஜனநாயக நீரோட்டத்தோடு எங்கள் அரசியலை மட்டுப்படுத்திக் கொண்டோம். இவ்வாறு நாங்கள் ஜனநாயக நீரோட்டத்தோடு இணைந்து கொண்ட காலத்தில், ஆயுதப் போராட்டம் என்பது முற்றிலும் விடுதலைப் புலிகளுக்கு மட்டுமே உரித்ததான ஒன்றானது. இந்தக் காலத்தில் நாங்கள் ஒரு இராஜதந்திர நகர்வை மேற்கொண்டோம். விடுதலைப் புலிகளின் சவால்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் அரசாங்கத்தைப் பயன்படுத்தி எங்களது மக்களுக்குச் செய்யக் கூடியதைச் செய்ய முற்பட்டோம். பின்னர், விடுதலைப் புலிகளின் ஆயுத பலத்தின் மூலம் ஒரு தீர்வு வரும்போது, அது விடுதலைப் புலிகளது நிர்வாகத்திற்கு உதவியாக அமையும் என்று எண்ணினோம். நாங்கள் ஏராளமான தமிழ் குடியேற்றங்களை வவுனியாவின் எல்லைப் பகுதிகளில் மேற்கொண்டோம். இன்றும் வவுனியாவின் எல்லைக் கிராமங்களில் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள் என்றால், இன்றும் வவுனியா ஒரு தமிழ் நகரமாகவே திகழ்கின்றது என்றால், அதற்கு அன்று நாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள்தான் காரணம். நாங்கள் இவ்வாறான ஒரு நோக்கத்தின் அடிப்படையில்தான் அரசாங்கத்துடன் தொடர்புகளைப் பேணினோம்.
ஆனால், எமது கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி எப்போதும் தேர்தல்களில் தனித்தே போட்டியிட்டது. நாம் பாராளுமன்றத்தில் எப்போதும் எதிர்க்கட்சி வரிசையிலேயே அமர்ந்தோம். அவசரகாலச் சட்டத்திற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் ஆதரவளித்திருக்கவில்லை. ஏதோ ஒரு வகையில் எமது தனித்துவத்தை நாம் பேணியே வந்திருக்கின்றோம். ஏனெனில், நாங்கள் சலுகைகளுக்காக அரசாங்கத்துடன் தொடர்புகளைப் பேணியவர்கள் அல்லளூ மாறாக, கொள்கை அடிப்படையில் – யுத்த காலத்தில் அவதியுற்ற மக்களின் நலன் கருதியே – தொடர்புகளைப் பேணி வந்திருக்கிறோம்.
1994ஆம் ஆண்டு, நான் பாராளுமன்றம் சென்ற போது அங்கு ஆற்றிய முதல் உரையிலேயே, ‘தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டுமெனில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரை நிறுத்திவிட்டு, அவர்களுடன் மட்டுமே அரசாங்கம் பேசியாக வேண்டும். வேறு தரப்புக்களுடன் பேசுவதில் எந்தப் பயனும் இல்லை’ என்பதை அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டிருந்தேன். அந்த நேரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவது தொடர்பான ஓர் எண்ணம் கூட எவர் மனதிலும் உருவாகி இருந்திருக்கவில்லை.
அதே கால கட்டத்தில், சந்திரிகா அரசாங்கத்திற்காக, கலாநிதி நீலன் திருச்செல்வத்துடன் இணைந்து, இன்று எம்மை வழிநடத்திக் கொண்டிருக்கின்ற சம்பந்தன் அண்ணன் தமிழ் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வுப் பொதி ஒன்றினைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, சம்பந்தன் அண்ணர், நீலன் அண்ணருடன் நானும் பக்கபலமாக இருந்திருக்கிறேன். இந்தக் காலத்தில் அமைக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக் குழுவில் சம்பந்தன் அண்ணனுடன் நானும் பங்கு கொண்டு, தேரிவுக் குழுவின் ஜம்பதிற்கும் மேற்பட்ட கூட்டங்களில் பங்கேற்று, தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி எமது பங்களிப்பை நான் வழங்கியிருக்கின்றேன். விடுதலைப் புலிகள் களத்தில் கண்டுகொண்டிருந்த வெற்றியைக் காட்டி, அரசாங்கத்தை ஒரு தீர்விற்கு இணங்கச் செய்யும் இராஜதந்திர நகர்வை மேற்கொண்டிருந்தோம்.
இங்கு இன்னொரு விடயத்தை நான் சொல்ல விரும்புகிறேன். நீங்கள் கவனிக்க வேண்டிய விடயம், எமது அமைப்பு விடுதலைப் புலிகளுடன் முரண்பட்டு நின்றது எங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் இருந்த முரண்பாடுளூ ஆனால் அந்த முரண்பாட்டிற்காக நாங்கள் எப்போதாவது, தமிழ் மக்களின் நியாயமான அரசியல் தீர்வை எதிர்த்திருக்கிறோமா..? அப்படி நாங்கள் செய்திருந்தால் எங்களை விமர்சிப்பத்தில் நிச்சயம் ஒரு நியாயம் இருக்கும். புளொட் இயக்கம், அனைத்து சந்தர்ப்பத்திலும் தமிழ் மக்களின் கௌரவமான வாழ்விற்காக, உரத்துக் குரல் கொடுக்கும் ஒரு அமைப்பாகவே வரலாற்றில் தடம் பதித்திருக்கிறது. அந்த தடத்தில்தான் இன்றும் பயணித்துக் கொண்டிருக்கிறது. அந்தப் பயணத்தின் ஓர் அங்கமாகத்தான், குறிப்பாக இன்றைய சூழலில், சர்வதேச சமூகத்தினை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் இராஜதந்திர வழிமுறைகளை ஏற்றுக்கொண்டுதான் எமது அமைப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்திருக்கின்றது.
நீங்கள் இப்போ ‘இராஜதந்திரம்,’ ‘சர்வதேசம்’ இப்படியெல்லாம் பேசினாலும் கூட, போரின் முடிவானது, ‘பாதிக்கப்பட்ட மக்கள்,’ ‘முன்னாள் போராளிகள்’ என்னும் ஒரு புதிய சமூகத்தையும் எங்கள் முன் விட்டுச் சென்றிருக்கிறது. குறிப்பாக, வன்னி மக்கள் பெரியதொரு அவலத்திற்கு முகம் கொடுத்திருக்கின்றனர். ஏனைய மாவட்ட மக்களோடு ஒப்பிட்டால் அவர்கள் அனைத்திலும் பின் தங்கிய சமூகமாகவே இருக்கின்றனர். அவர்களது எதிர்கால சந்ததியின் கல்வி முற்றிலுமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. யுத்தம் பிரசவித்திருக்கும் பிறிதொரு பிரச்சனை ‘முன்னாள் போராளிகள்’ தொடர்பானது. ஆனால் இப்படியான மக்களின் அடிப்படை பிரச்சனைகள் குறித்து தமிழ் கூட்டமைப்பு எந்தவொரு அக்கறையும் காண்பிப்பதில்லை என்னும் ஒரு விமர்சனம் நிலவுகிறது. வடக்கு மாகாண சபையில் போட்டியிடும் ஒரு மூத்த தலைவர் என்னும் வகையில் உங்களின் பதில் என்ன?
இவ்வாறான விமர்சனங்களை நிராகரிக்க முடியாது. எனெனில், மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒர் அரசியல் அமைப்பு, அந்த மக்களது சகல பிரச்சனைகளிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியமான ஒன்று என்பதை நான் ஏற்றுக் கொள்கின்றேன். குறிப்பாக, இறுதிப் போருக்குள் சிக்கித் தப்பி வந்த மக்கள் வாழ்கின்ற பரிதாப வாழ்வை நாம் அறியாமல் இல்லை. குறிப்பாக – கணவன்மாரைப் பறி கொடுத்துவிட்டுக் குடும்பங்களுக்குத் தலைமை தாங்கும் பெண்களின் நிலை கொடுமையானது. எத்தனையோ முன்னாள் போராளிகளும் அவர்களது குடும்பங்களும் பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டிருப்பதைத் தனிப்பட்ட முறையில் நான் அறிவேன். உதவிகள் செய்ய விரும்புகின்ற புலம்பெயர்ந்த தமிழர்களை, அப்படியான தேவைகளுடன் இருப்பவர்களுடன் முடியுமான அளவுக்கு நாம் தொடர்புபடுத்தி வைத்திருக்கின்றோம். ஆனால், அவை எமது தனிப்பட்ட முயற்சிகள். மக்களின் வாழ்வையோ, போராளிகளின் வாழ்வையோ மேம்படுத்துவதற்கான ஒரு வேலைத் திட்டத்தை உருவாக்கி முன்னெடுப்பதற்கான நிதிப் பலம் கூட்டமைப்பிடம் இல்லை. எனவே, எங்களது இயலாமையை இந்தப் பின்புலத்தில் வைத்துத்தான் நீங்கள் பார்க்க வேண்டும். ஆனால் மாகாண சபையை அதற்கான ஒரு சிறந்த தளமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்னும் நம்பிக்கை எமக்குண்டு. மாகாண சபை உருவாக்கப்பட்டவுடன் நாம் ஒர் அறக்கட்டளையை உருவாக்க எண்ணியுள்ளோம். கல்விமான்கள் தொழில்சார் நிபுணர்களைக் கொண்டு உருவாக்கப்படவுள்ள அந்த நிதியத்தின் மூலம் புலம்பெயர் தமிழ் சமூகத்திடமிருந்தும் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்தும் உதவிகளைப் பெற்று அந்த நிதியத்தினூடாக மக்களுக்கான பல பணிகளை முன்னெடுக்கும் எண்ணங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையிடம் உள்ளன.
வன்னி வாழ் மக்களின் கல்வி மற்றும் அறிவு மேம்பாட்டில் நாங்கள் முக்கிய கவனத்தைச் செலுத்த வேண்டும் என்பதில் நான் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறேன். அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும் பட்சத்தில் அதில் – குறிப்பாக இளம் சந்ததி மீது – எனது கவனத்தைச் செலுத்த எண்ணியுள்ளேன். மேலும் முன்னாள் போராளிகள் விடயத்தில் நான் கூடுதலான அக்கறை உள்ளவன். தனிப்பட்ட முறையில் விடுதலைப் புலிகளின் போராளிகள் உட்பட அனைத்து போராளிகள் மீதும் நான் பெரும் மரியாதை வைத்துள்ளேன். அவர்களது அர்ப்பணிப்பும் தியாகமும் மதிக்கப்பட வேண்டும் என்பதில் என்னிடம் இரு வேறு கருத்துக்கள் இல்லை. அவர்கள் மீண்டும் சமூக அங்கீகாரத்துடனும், மதிப்புடனும் வாழுவதற்கான அனைத்தையும் செய்ய வேண்டிய கடப்பாடு எங்கள் அனைவருக்கும் உண்டு. இதில் எனக்கு தனிப்பட்ட அக்கறை உண்டு. தங்களது பழைய வாழ்வைப் போலவே, புதிய வாழ்வையும் சமூகத்திற்குப் பயனுள்ளதாக – அர்த்தமுள்ளதாக – வாழ அவர்களுக்கு வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தடையவன் நான். அந்த வகையில், வடக்கு மாகாண சபையின் மூலமாக இந்த விடயங்கள் அனைத்தையும் கவனத்தில் எடுக்கும் ஒருவனாகவே நான் இருப்பேன். வடக்கு மாகாண சபையை – ஆயுதப் போராட்டத்திற்குப் பின்னான அரசியல் பயணத்திற்கான ஆரம்பமாக மட்டுமல்லாமல், மக்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சனைகளை நிவர்த்தி செய்வதற்கான ஒர் அத்திபாரமாகவும் நாங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியுமென்பதே எனது நம்பிக்கை.