வடக்கில் 36 மாகாண சபை உறுப்பினர்களை தெரிவு செய்யும் தேர்தல்- மூன்று மாகாண சபைகளுக்கான 142 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 3ஆயிரத்து 712 வாக்களிப்பு நிலையங்களில் நாளை தேர்தல் நடைபெறவுள்ளது. இத் தேர்தலில் 43 இலட்சத்து 63 ஆயிரத்து 252 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். வடமாகாண சபைக்கு யாழ் மாவட்டத்திலிருந்து 16 உறுப்பினர்களும், கிளிநொச்சியிலிருந்து 04 உறுப்பினர்களும், வவுனியாவில் இருந்து 06 உறுப்பினர்களும், முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் இருந்து தலா 05 உறுப்பினர்களுமாக 36பேர் தெரிவுசெய்யப்படவுள்ளனர். குருநாகல் மாவட்டத்தில் 34 உறுப்பினர்களும், புத்தளம் மாவட்டத்தில் 16 உறுப்பினர்களுமாக வடமேல் மாகாண சபைக்கு 50 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர். மத்திய மாகாண சபைக்கு 56 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக கண்டி, மாத்தளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் நாளை தேர்தல் நடைபெறவுள்ளது. கண்டி மாவட்டத்தடிலிருந்து மத்திய மாகாண சபைக்கு 29 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் மாத்தளை மாவட்டத்திலிருந்து 11 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் இருந்து மத்திய மாகாண சபைக்கு 16 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர். மூன்று மாகாண சபைகளுக்கும் தலா இரண்டு போனஸ் ஆசனங்கள் வழங்கப்படவுள்ளன.

தேர்தல் பாதுகாப்பு கடமையில் 24,500 பொலீசார்-  மாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ள மூன்று மாகாணங்களிலும் பாதுகாப்பை உறுதிபடுத்த பொலிசாரையும், பொலிஸ் விசேட அதிரடிப் படையினரையும் கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் பாதுகாப்பு கடமையில் சுமார் 24 ஆயிரத்து 500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக்க சிறிவர்தன தெரிவித்துள்ளார். வாக்களிப்பு நிலையங்களை சூழவுள்ள பகுதிகளின் பாதுகாப்பை பலப்படுத்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினரை ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வாக்காளர் அட்டை விநியோகத்தில் முறைகேடு- வவுனியாவில் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகத்தில் ஒரு முறைகேடு இடம்பெற்றமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. மாகாண சபைத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்காமல் தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின்பேரில், தபால் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தபால் மாஅதிபர் ரோஹன அபேரத்ன கூறியுள்ளார். எவ்வாறாயினும் குறித்த வாக்காளர் அட்டைகள் பின்னர் உரிய வீடுகளுக்கு விநியோகிக்கப்பட்டதாக தபால் மாஅதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.