மாகாணசபைத் தேர்தல் வாக்களிப்புகள் நிறைவு-

வடக்கு, வடமேல், மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் இன்றுகாலை 7மணிக்கு தொடங்கி மாலை 4மணியுடன் நிறைவடைந்துள்ளன. மூன்று மாகாண சபைகளிலிருந்தும் 142 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 3,785வேட்பாளர்கள் இத்தேர்தலில் போட்டியிட்டிருந்தனர். 43லட்சத்து 58ஆயிரத்து 263பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். வட மாகாணத்தில் யாழ் மாவட்டம் 60வீதம், கிளிநொச்சி மாவட்டம் 68வீதம், வவுனியா மாவட்டம் 65வீதம், முல்லைத்தீவு மாவட்டம் 71வீதம், மன்னார் மாவட்டம் 70வீதம் என வாக்குப் பதிவுகள் இடம்பெற்றுள்ளன. மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டம் 58வீதம், மாத்தளை மாவட்டம் 54வீதம், நுவரெலியா மாவட்டம் 54.5வீதம் என வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் வடமேல் மாகாணத்தில் புத்தளம் மாவட்டம் 55.60வீதம், குருநாகல் மாவட்டம் 55வீதம் என வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளன. வாக்குச் சாவடிகளிலிருந்து வாக்குகளை எண்ணுவதற்காக பெட்டிகள் எடுத்துச் செல்லும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மன்னாரில் இரு கட்சி ஆதரவாளர்கள் மோதல்-

மன்னாரில் இரு கட்சிகளின் ஆதரவாளர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து அங்கு இடம்பெற்ற கல்வீச்சுத் தாக்குதலில் வயோதிப பெண் காயமடைந்துள்ளார். மன்னார், தாழ்வுபாடு புனித வளனார் பாடசாலையில் உள்ள 11ஆவது வாக்குச்சாவடி பகுதியில் இரு கட்சிகளின் ஆதரவாளர்களுக்கிடையில் முறுகல் ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து அப்பகுதியில் சிலர் கூட்டமாக இருந்ததை அவதானித்த மாற்றுக் கட்சியை சார்ந்தவர்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். அதனைத் தொடர்ந்து பொலிசார் அவர்களை துரத்திச் சென்ற சமயம் அவர்கள் வீடுகளுக்குள் புகுந்துள்ளனர். பொலிசாரும் பின்தொடர்ந்து தடியால் தாக்குதல் நடத்தியதாக தெரியவருகிறது. இதனையடுத்தே இரு கட்சி ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டதாகவும், இதன்போதே வீட்டினுள் இருந்த 65வயதான அந்தோனிக்கம் பெரேரா காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து கலகம் அடக்கும் பொலீசார் வந்து நிலைமையை கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்துள்ளனர்.