சிறுபான்மையினர் சமமாக மதிக்கப்படல் வேண்டும்- பா.சிதம்பரம்-

வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றதன் மூலம், அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைய நிரந்தரத் தீர்வினை பெறுவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றமைக்கு பாராட்டுத் தெரிவித்து விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். மாகாணங்களுக்கான அதிகபட்ச சுயாட்சி, மாகாணங்களுக்கான அதிகாரப் பகிர்வு, தமிழர்கள் உள்ளிட்ட ஏனைய சிறுபான்மையினர் சமமாக மதிக்கப்பட்டு அவர்களுக்கான சமஉரிமை இதன்மூலம் கிடைக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். தாயகத்தில் தமிழர்களின் பாராம்பரிய உரிமைகள் ஏற்றுகொள்ளப்படுவதுடன் நாட்டின் ஆட்சியில் போதுமான பங்குபற்றுதலை வழங்குவதற்கான சந்தர்ப்பத்தை இந்த வெற்றியின் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றுள்ளதாகவும் நிதியமைச்சர் ப.சிதம்பரம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

படகு அகதிகள் தொடர்பில் தகவல் வழங்கப்பட மாட்டாது-அவுஸ்திரேலியா-

அவுஸ்திரேலிய கடற்பரப்புக்குள் வரும் சட்டவிரோத அகதிப்படகுகள் தொடர்பிலான தகவல்களை இனிமேல் வழங்கப்போவதில்லை என அவுஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் வரும் சட்டவிரோத அகதிகளை திருப்பியனுப்புவது உட்பட்ட நடவடிக்கைகளை அவுஸ்திரேலியாவின், விசேட படையினர் மேற்கொண்டு வருகின்றனர் இந்நிலையில் அகதிகளை திருப்பியனுப்புவது உட்பட்ட விடயங்களை மனித உரிமை காப்பு அமைப்புக்கள் விமர்சனம் செய்து வருவதால், படகு அகதிகள் தொடர்பான தகவல்களை உடனடியாக வழங்குவதை தவிர்க்கவுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் கூறியுள்ளார். சட்டவிரோத படகுகளை தடுப்பது அவுஸ்திரேலிய மக்களின் நலன்களை கருத்திற்கொண்டது ஆகவே தேவையேற்படும்போது மாத்திரம் சட்டவிரோத படகு அகதிகள் தொடர்பான தகவல்களை வழங்கவிருக்கிறோமென மொரிசன் கூறியுள்ளார் இதேவேளை கடந்த 12 மாதங்களுக்குள் அவுஸ்திரேலியாவுக்கு 400 படகுகளில் 45ஆயிரம் பேர் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.