வடக்கு நிர்வாகத்துக்கு அரசு ஆதரவு தரவேண்டும் -அமெரிக்கா வலியுறுத்தல்-
வடக்கில் மாகாண சபைமூலம் தெரிவாகியுள்ள புதிய குடியியல் நிர்வாகத்திற்கு இலங்கை அரசு முழுமையான ஆதரவை வழங்க வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. வடக்கு மக்கள் தமது பிரதிநிதிகளை தாமே தெரிவுசெய்துள்ளனர். எனவே, இலங்கையரசு வடக்கு மாகாண சபையின் நிர்வாகத்திற்கு தமது ஆதரவை வழங்க வேண்டும் என அமெரிக்க ராஜாங்க திணைக்கள பேச்சாளர் ஜென் சாக்கி கோரிக்கை விடுத்துள்ளார். புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ள வடக்கு மாகாண சபையின் நிர்வாகத்தின் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமெனவும் பேச்சாளர் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் மூன்று மாகாணசபைத் தேர்தல்களை வெற்றிகரமாக நடத்திமுடித்தமைக்கு இலங்கை மக்களுக்கு அமெரிக்கா நன்றி கூறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரட்டைக் குடியுரிமை கால தாமதம்-
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதில் தொடர்ந்தும் கால தாமதம் நிலவி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இத்தாலி உள்ளிட்ட சில நாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடவடிக்கை சில ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டுள்ளது கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக இரட்டைக் குடியுரிமை வழங்குதல் குறித்த உத்தேச சட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி சில ஆண்டுகள் கடந்துள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார். சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அனுமதிக்காக காத்திருக்கின்றமையே கால தாமதம் ஏற்படுவதற்கான காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் மீண்டும் இரட்டைக் குடியுரிமை வழங்கப்படும் என சூலானந்த பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஐ.நாவில் உரை- ஐக்கிய நாடுகள் சபையின் 62வது பொதுச் சபை மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று உரையாற்றவுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் ஆறாவது தடவையாக இம்முறை ஐ.நா. பொதுச்சபை மாநாட்டில் உரையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது. 2005 ஆம் ஆண்டு அவர் ஜனாதிபதியாகப் பதவியேற்று 2006ஆம் ஆண்டில் ஐ.நா. சபையில் முதலாவதாக உரையாற்றியிருந்தார். அதனைத் தொடர்ந்து இம்முறை ஆறாவது தடவையாக அவர் இன்றைதினம் உரையாற்றவுள்ளார். நாட்டின் பொருளாதார முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி உரையாற்றுவாரென கூறப்படுகின்றது.