யாழில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டம்-

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பனர்களிடையேயான விசேட சந்திப்பொன்று இன்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில இடம்பெற்றது. இச்சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களுமான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம், ராகவன், தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பாக சங்கையா ஆகியோரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை வேட்பாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கான இரண்டு போனஸ் ஆசனங்களை யார் யாருக்கு கொடுப்பது என்பது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இதன்போது பல விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டிருந்த காரணத்தினால் இது தொடர்பாக உடனடியாக முடிவெதுவும் எடுக்கப்படவில்லை. தேர்தல் ஆணையாளர் கூட்டமைப்பின் இரண்டு போனஸ் ஆசனங்களுக்கு இருவரைத் தெரிவுசெய்து பரிந்துரைக்குமாறு அறிவிக்கும்போது இதுபற்றி தீர்மானிப்பது என முடிவெடுக்கப்பட்டது. இதுபோல் முதலமைச்சர் தவிர்ந்த ஏனைய நான்கு அமைச்சர்கள் சம்பந்தமாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் இது தொடர்பிலும் இறுதியான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.