முழுமையாக அமுல்படுத்துமாறு இந்தியா வலியுறுத்தல்-

13வது அரசியல் அமைப்பு சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இந்திய அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடக்கு தேர்தல் சுமூகமாக இடம்பெற்றது மகிழ்ச்சி அளிக்கின்றது. வடக்கு தேர்தல் நடத்தியுள்ளமையானது, இலங்கை சர்வதேசத்திற்கு அளித்த ஒரு வாக்குறுதியை நிறைவேற்றியமையாக அமைந்துள்ளது. அந்துடன், இத்தேர்தலில் மக்கள் அதிகளவில் பங்குகொண்டுள்ளனர். இந்நிலையில், இலங்கை அரசாங்கம் 13ஆவது அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டிய நிலையில் உள்ளது. இதன்மூலம் வடக்கு மக்களின் அபிலாஷைகளை ஓரளவு பூர்த்திசெய்வதாக அமையும் என மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மல்லாகம் பகுதியில் கைக்குண்டு வீச்சு-

யாழ் மல்லாகம் பகுதியில் நேற்றிரவு 10 மணியளவில் இனந்தெரியாதவர்களினால் கைக்குண்டு வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத் தாக்குதலில் பாரிய இழப்புக்கள் எவையும் ஏற்படவில்லை. மல்லாகம் மத்தியில் உள்ள அம்பனாக்கடவை வீதியென அழைக்கப்படும் சேச் வீதியில் உள்ள சுவாமி ஞானப்பிரகாசர் சனசமூக நிலையம் மற்றும் நூலகக் கட்டிடத்திற்கு அருகாமையில் கைக்குண்டு வீழ்ந்து வெடித்துள்ளது. இதன்போது சனசமூக நிலையத்தின் கட்டிடச்சுவர் மற்றும் அருகில் உள்ள வீட்டின் கதவு, சுவர் என்பவற்றில் குண்டுச் சிதறல்கள் பறந்துள்ளதுடன் சேதமும் ஏற்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்தவாகள் கைக்குண்டுத் தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இந்த சனசமூக நிலைய முன்றலில் இரவு வேளையில் இளைஞாகள் அமர்ந்து கதைப்பதாகவும் அவர்களை இலக்கு வைத்து இத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

கிழக்கு மாகாண ஆசிரியர்களின் பதவியுயர்வு விண்ணப்பங்கள் நிராகரிப்பு-

கிழக்கு மாகாணத்தில் பதவி உயர்விற்காக ஆசிரியர்கள் விண்ணப்பித்திருந்த விண்ணப்பங்கள் பல நிராகரிக்கப்பட்டுள்ளன. கிழக்கு பல்கலைகழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் பாடநெறியை பூர்த்திசெய்து ஆசிரியர் நியமனம் பெற்றவர்களின் பதவியுயர்விற்கான விண்ணப்பங்களே நிராகரிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.டி.ஏ நிசாம் கூறியுள்ளார். பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவால் மாகாண கல்வி திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கை ஒன்று காரணமாகவே ஆசிரியர் பதவியுயர்விற்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தால் வழங்கப்பட்ட டிப்ளோமா சான்றிதழ், பட்டப்படிப்புக்கு சமநிலை ஆகாது என்பதை மேற்கோள்காட்டி மாகாண கல்வி அமைச்சுக்கு பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

சல்மன் குர்ஷித் இலங்கைக்கு விஜயம் செய்ய ஏற்பாடு-

இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷித் அடுத்த மாதமளவில் இலங்கை வரவுள்ளதாக நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இலங்கைவரும் முதல் விஜயம் இதுவாகும். அத்துடன், இலங்கையின் சிக்கலுக்குள்ளான நிலையில் இருந்து வடக்கு தேர்தல் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இந்திய ராஜதந்திரி ஒருவர் இலங்கை வருவதும் இதுவே முதல்முறையாகும். சமல்மன் குர்ஷித் எதிர்வரும 7ஆம் 8ஆம் திகதிகளில் இலங்கை வருவாரென கூறப்பட்டுள்ள நிலையில், அவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் ஜீ எல் பீரிஸ் உள்ளிட்ட உயர் அரச தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்த நடத்தவுள்ளதுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் வட மாகாண முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரனையும் சந்திக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு-

இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இவ்வாண்டு 26.1 வீதத்தால் அதிகரித்துள்ளதென இலங்கை உல்லாசப் பிரயாணத்துறை அபிவிருத்தி அலுவலகம் தெரிவித்துள்ளது. 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு வருகைதந்த வெளிநாட்டு உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை 79,256 ஆக இருந்தது. அத்தொகை இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்தில் 100,224 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு இதுவரையில் 711,446 பேர் இலங்கைக்கு வந்துள்ளனர். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 14.3 வீத அதிகரிப்பாகும். இந்தியா, ஜேர்மனி, சீனா ஆகிய நாடுகளிலிருந்து வருகைத் தரும் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை இவ்வாண்டு ஒவ்வொரு மாதமும் அதிகரித்துள்ளது என அபிவிருத்தி அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

நீதிமன்றம் உத்தரவிட்டால் மீண்டும் தேர்தல் நடத்தலாம் – தேர்தல் ஆணையாளர்-

புத்தளம் சென்ற். அன்ருஸ் கல்லூரியில் தேர்தல் கடமையில் ஈடுபட்ட அரச ஊழியர்கள் குறித்து விசாரணை நடத்துமாறு அரச நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கு பணித்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். புத்தளத்தில் வாக்குச் சீட்டுக்கள் நேற்று மீட்கப்பட்டமை தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. இங்கு உரையாற்றும்போதே தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மேற்கண்டவாறு கூறியுள்ளார்.  இதேவேளை, மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து மீண்டும் தேர்தல் நடத்தும்படி நீதிமன்றம் உத்தரவிட்டால் மாத்திரமே புத்தளத்திற்கு தேர்தல் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.