இலங்கையின் செயற்பாடுகளில் செயற்திறன் இல்லை – பான் கி மூன்-

பாரியளவிலான மனித உரிமை மீறல்களை தடுத்தல் மற்றும் நிறுத்துவதற்கு உறுப்பு நாடுகளின் இயலாமை மோசமான பிரதிபலன்களை ஏற்படுத்தியுள்ளதாக ஐ.நா செயலாளர் நாயகம் பான் கி மூன் தெரிவித்துள்ளார். ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் இலங்கை தொடர்பில் கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், பாரியளவிலான மனித உரிமை மீறல்களை தடுத்தல் மற்றும் நிறுத்துவதற்கு உறுப்பு நாடுகளின் இயலாமை மோசமான பிரதிபலன்களை ஏற்படுத்தியுள்ளது.  இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போதான விவகாரங்கள் தொடர்பில் ஐ.நா சபை மேற்கொண்ட ஆய்வுகளின்மூலம் ஒரு விடயம் புலனாகியுள்ளது. இலங்கையின் செயற்பாடுகளில் செயற்திறன் இல்லை என்பது புலனாகியுள்ளது. உறுப்பு நாடுகளினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களை நிறைவேற்றுவதற்காக, சில நாடுகள் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்வதில்லை. அதனால் நிறைவேற்றவுள்ள விடயங்களை பூர்த்தி செய்து கொள்வதற்கு முடியாமல் செல்கின்றமை துரதிஷ்டவசமான சம்பவமாகும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தல் அதிகாரப் பகிர்விற்கான மற்றுமொரு பாதை-

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரது இலங்கை  தொடர்பிலான வாய்மூல அறிக்கை நேற்று பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. மனித உரிமைகள் ஆணையாளர், ஐ.நா பொதுச்சபை கூட்டத் தொடரில் பங்கேற்றுள்ளதால், அவருக்குப் பதிலாக பிரதி ஆணையாளர் பிளாவ்யா பென்சியேரி இந்த வாய்மூல அறிக்கையை சமர்ப்பித்தார். அவர் உரையாற்றுகையில், செப்டம்பர் 21ஆம் திகதி வெற்றிகரமாக தேர்தல் நடத்தப்பட்டமையை ஆணையாளர் வரவேற்கின்றார். அதிகாரப்பகிர்விற்கான மற்றுமொரு பாதையாக இது அமையும் என ஆணையாளர் எண்ணுகின்றார். புதிதாகவோ அல்லது முழுமையாகவோ மனித உரிமை மீறல்கள் குறித்து சுயாதீனமான, நம்பகத்தன்மை கொண்ட விசாரணைகளுக்கான பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள விதம் தொடர்பில், துரதிர்ஷ்டவசமாக ஆணையாளரால் அவதானிக்க முடியவில்லை. தேசிய ரீதியான செயற்பாடொன்றை முன்னெடுப்பதற்காக இதிலிருந்து 2014ஆம் ஆண்டு மார்ச்மாதம் வரையான காலப்பகுதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் இலங்கை அரசாங்கத்திற்கு யோசனை முன்வைத்துள்ளார். 2014ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் எழுத்துமூலம் முறையான அறிக்கையொன்று பேரவையில் சமர்ப்பிக்கப்படும். இந்த செயற்பாடுகளின்போது மனித உரிமை மீறல்கள் குறித்து  குற்றஞ்சாட்டப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதில் முன்னேற்றம் காணப்பட வேண்டும். அவ்வாறு இடம்பெறாத பட்சத்தில் சர்வதேச ரீதியான விசாரணையொன்றை மேற்கொள்ள நேரிடும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.  

ஜனாதிபதி – ஐ.நா செயலாளருக்கிடையே சந்திப்பு-

ஐ.நா செயலர் நாயகம் பான் கீ மூனுக்கும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.  ஐ.நா பொதுச் சபையின் 68வது பருவகால கூட்டத்தொடரின் அமர்வின் பின்னர் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. போருக்கு பின்னரான இலங்கையின் நிலவரங்கள், அண்மையில் நடைபெற்ற வடமாகாண சபைத் தேர்தல், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல் தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி பேச்சாளர் மற்றும் சர்வதேச ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதனைத் தவிர, இலங்கையும், ஐ.நா சபையும் இணைந்து பணியாற்றக் கூடிய வழிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும், பான் கீ மூனும் கலந்துரையாடியுள்ளனர். இதேவேளை, ஐ.நா பொதுச் சபையின் 68 ஆவது பருவகால கூட்டத்தொடரிலும் ஜனாதிபதி உரையாற்றியுள்ளார்.

தேர்தலுக்கு பின்னரும் ஆதரவாளர்கள் பாதிப்பு-

வடமாகாண சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட காலப்பகுதி முதல் பெறுபேறுகள் வெளியான பின்னரும் தமது உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் தாக்குதல்களுக்கு உள்ளாவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தேர்தலுக்கு பின்னரான நிலைமைகள் தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றபோதே கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமசந்திரன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இதேவேளை, நேற்று முன் தினமும் கூட்டமைப்பு ஆதரவாளர்களை அச்சுறுத்தும் வகையில் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் குற்றம்சுமத்தியுள்ளார். இந்நிலையில், வடமாகாண சபை பாரிய பின்னடைவை எதிர்நோக்கியுள்ள நிலையில் புதிய நிர்வாக அதனை கையேற்க வேண்டிய ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமசந்திரன் குறிப்பிட்டுள்ளார்.