அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு இலங்கை ஜனாதிபதி அளித்துள்ள பேட்டி

வட பகுதியிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் கோர முடியாது. ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, ஜெனிவாவில் சமர்ப்பித்த வாய்மூல அறிக்கையை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். சிறிய நாடான இலங்கையை சில நாடுகள் கொடுமைப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.
அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றிலேயே இதனைத் தெரிவித்த அவர் ‘இலங்கையை கொடுமைப்படுத்துவதை சில நாடுகள் நிறுத்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இது மிகச் சிறிய நாடு’ எனக் குறிப்பிட்டார்.
‘ஒரு சம்பவம் நடந்தால் இலங்கை அரசாங்கத்தின் மீது விரல்கள் நீட்டப்படுகின்றன. ஆனால், அதேபோன்ற சம்பவம் மேற்கு நாடுகளில் நடந்தால் அது கவனிக்கப்படுவதில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஐ.நா. மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஜெனிவாவில் சமர்ப்பித்த வாய்மூல அறிக்கையை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டார். நவநீதம்பிள்ளை எப்போதுமே தங்கள் மீது வருத்தத்துடன் இருப்பவர் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைப் பயணத்தின் போது அரசாங்க உறுப்பினர்கள் தன்னை இலக்கு வைத்து அறிக்கைகளை வெளியிட்டதாக நவநீதம்பிள்ளை கவலை எழுப்பியுள்ளது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி ஜனநாயக நடைமுறையில் எவரும் எதையும் கூறும் உரிமையுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். தனது வாய்மூல அறிக்கையில் நவநீதம்பிள்ளை எழுப்பியுள்ள பல கவலைகள் குறித்து கொழும்பில் தன்னைச் சந்தித்த போது அவர் எழுப்பவில்லை என்றும் குறிப்பிட்ட மகிந்த ராஜபக்ச அவரது எந்தக் கவலை குறித்து விசாரணை நடத்துவதானாலும் அதற்கு ஆதாரங்கள் தேவை என்றும் தெரிவித்துள்ளார்.
வடக்குப் பகுதியில் இராணுவத்தை நிலை நிறுத்தும் உரிமை அரசாங்கத்துக்கு இருப்பதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி வடக்கில் உள்ள துருப்புகள் தொடர்பாக சில குழுக்கள் வெளியிடும் எண்ணிக்கை தான் பிரச்சினையாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார