Header image alt text

தேசிய பிரச்சினைத் தீர்வுத்திட்டம் தொடர்பில் ஆளும் கட்சிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தனித்துப் பேச்சு நடத்த முடியாது.  ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல

வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளது. இந்நிலையில் கூட்டமைப்பின் விக்னேஸ்வரன் முதலமைச்சராக பதவியேற்கவுள்ளதாக அறிய முடிகின்றது. அவ்வாறு பதவியேற்கவுள்ள விக்னேஸ்வரன் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பதற்கு தீர்மானித்தால் அவர்கள் செய்வது ஒரு சிறந்த முடிவாக அமையும். மாறாக வட மாகாண முதலமைச்சருக்கு பதவி பிரமாணம் செய்வதற்கு பல்வேறு வழிகள் உள்ளன.
இதேவேளை வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளது என்பதற்காக தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பில் கூட்டமைப்புடன் தனித்துப் பேச்சு நடத்த முடியாது.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவை விடுத்து ஆளும் கட்சியானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தாது. அவ்வாறு ஆளும் கட்சியினதும் தமிழ்க் கூட்டமைப்பினதும் பிரதிநிதிகள் மட்டும் பேச்சு நடத்துவதில் அர்த்தம் இல்லை. அவ்வாறு பேச்சு நடத்தப்படமாட்டாது. தேசிய பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் தொடர்பில் அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துவது அவசியமாகும். அந்த வகையில் அவ்வாறான தீர்வுக்கான இணக்கப்பாட்டைக் காண்பதற்கு பாராளுமன்றத் தெரிவுக்குழுவே சிறந்த இடமாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மாகாண சபை என்ற முறையில் வட மாகாண சபையின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி பேச்சு நடத்துவார். அது வழமையான விடயமாகும். நாட்டின் ஏனைய மாகாண சபைகளுடனும் ஜனாதிபதி அவ்வாறான பேச்சுக்களை நடத்திவருகின்றார். அதேபோன்று வட மாகாண சபையுடனும் பேச்சு நடத்துவார் என்றார்.

அரசாங்கத்தை கவிழ்த்து, தனி தமிழீழத்தை உருவாக்குவதற்காகவே விக்னேஸ்வரன் முயற்சி தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார

அரசாங்கத்தை கவிழ்த்து, தனி தமிழீழத்தை உருவாக்குவதற்காகவே விக்னேஸ்வரன் வடமாகாண சபையின் முதலமைச்சராக ஜனாதிபதியின் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்யவுள்ளார். இதனை அரசாங்கம் உடனடியாக நிராகரிக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் கூட்டமைப்பின் இம் முயற்சி நிறைவேறினால் ஆளுநரின் அதிகாரங்கள் சவாலுக்கு உட்படுத்தும் நிலை உருவாகும் என்றும் அவ்வியக்கம் தெரிவித்தது. மாகாண சபையொன்றின் முதலமைச்சர் ஒருவர் ஆளுநரின் முன்னிலையிலேயே சத்தியப் பிரமாணம் செய்ய வேண்டும். ஏனென்றால் மாகாண சபைகளின் அதிகாரம் உள்ள ஜனாதிபதியின் பிரதிநிதியாக ஆளுநரே நியமிக்கப்படுகின்றார். இதுதான் இலங்கையின் மாகாண சபைகளின் சட்டமாகும். ஜனாதிபதியின் முன்னிலையிலும் சத்தியப் பிரமாணம் செய்யலாம். ஆனால் ஆளுநரின் முன்னிலையிலேயே இதனைச் செய்வதே சிறந்ததாகும். இவ்வாறானதோர் நிலையில் வடகிழக்கு மாகாண ஆளுநரின் அதிகாரங்களை சட்டத்தின் சவாலுக்குட்படுத்தும் நோக்கிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சரான விக்னேஸ்வரன் ஜனாதிபதியின் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்ய முயற்சிக்கின்றார். தற்போதைய ஆளுநர் இராணுவ அதிகாரியென்ற கூட்டமைப்பின் குற்றச்சாட்டை ஏற்க முடியாது. ஏனென்றால் தற்போது அவர் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர். ஆளுநரின் முன்னிலையில் விக்கினேஸ்வரன் முதலமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்வதை நிராகரித்தால், ஆளுநர் அடுத்த இரண்டாவது இடத்தை பிடித்தவர்களுக்கு ஆட்சியமைக்க அழைப்பு விடுப்பார். அவர்களும் அழைப்பை நிராகரித்தால் வடமாகாண சபையை கலைத்து விடுமாறு ஆளுநரால் ஜனாதிபதிக்கு சிபாரிசு செய்ய முடியும். இவ்வாறு குழப்பகரமான சூழலை ஏற்படுத்தி சர்வதேசத்தின் தலையீட்டை அதிகரிக்கச் செய்வதே கூட்டமைப்பின் திட்டமாகும். அரசுக்கு எதிராக சர்வதேசத்தினாலும் கூட்டமைப்பினாலும் நெருக்கடிகள் ஏப்ரல் மாதமளவில் உச்சக்கட்டத்தை அடையும். இதன்போது எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை கவிழ்க்கும் போராட்டங்களையும் சதித் திட்டங்களையும் உத்வேகப்படுத்தும். இதற்கான முதலாவது வேட்டே ஜனாதிபதி முன்னிலையில் விக்கினேஸ்வரன் முதலமைச்சராக பதவியேற்க வேண்டுமென்பதாகும் என்றார்.