தேசிய பிரச்சினைத் தீர்வுத்திட்டம் தொடர்பில் ஆளும் கட்சிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தனித்துப் பேச்சு நடத்த முடியாது.  ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல

வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளது. இந்நிலையில் கூட்டமைப்பின் விக்னேஸ்வரன் முதலமைச்சராக பதவியேற்கவுள்ளதாக அறிய முடிகின்றது. அவ்வாறு பதவியேற்கவுள்ள விக்னேஸ்வரன் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பதற்கு தீர்மானித்தால் அவர்கள் செய்வது ஒரு சிறந்த முடிவாக அமையும். மாறாக வட மாகாண முதலமைச்சருக்கு பதவி பிரமாணம் செய்வதற்கு பல்வேறு வழிகள் உள்ளன.
இதேவேளை வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளது என்பதற்காக தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பில் கூட்டமைப்புடன் தனித்துப் பேச்சு நடத்த முடியாது.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவை விடுத்து ஆளும் கட்சியானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தாது. அவ்வாறு ஆளும் கட்சியினதும் தமிழ்க் கூட்டமைப்பினதும் பிரதிநிதிகள் மட்டும் பேச்சு நடத்துவதில் அர்த்தம் இல்லை. அவ்வாறு பேச்சு நடத்தப்படமாட்டாது. தேசிய பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் தொடர்பில் அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துவது அவசியமாகும். அந்த வகையில் அவ்வாறான தீர்வுக்கான இணக்கப்பாட்டைக் காண்பதற்கு பாராளுமன்றத் தெரிவுக்குழுவே சிறந்த இடமாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மாகாண சபை என்ற முறையில் வட மாகாண சபையின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி பேச்சு நடத்துவார். அது வழமையான விடயமாகும். நாட்டின் ஏனைய மாகாண சபைகளுடனும் ஜனாதிபதி அவ்வாறான பேச்சுக்களை நடத்திவருகின்றார். அதேபோன்று வட மாகாண சபையுடனும் பேச்சு நடத்துவார் என்றார்.