Header image alt text

யாழ். சாவற்காடு பகுதியில் மக்கள் சந்திப்பு-

யாழ் சாவற்காடு பகுதியில் மக்கள் சந்திப்பு நிகழ்வொன்று இன்றுமாலை இடம்பெற்றது. பிரதேச சபை உறுப்பினர் திரு. பரமகுரு அவர்களின் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர்களான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன், திரு. பா. கஜதீபன் ஆகியோரும் பிரதேச சபை உறுப்பினர்களான திரு.கௌரிகாந்தன், திரு.கணேசவேல் ஆகியோரும் கலந்து கொண்டு உரைநிகழ்த்தினார்கள். இதன்போது மக்கள் தங்களுடைய பிரதேசத்தில் நிலவும் தேவைகளையும் குறைகளையும் எடுத்துக் கூறினார்கள். இதன்போது வட மாகாணசபை உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், பா.கஜதீபன் ஆகியோர் வட மாகாணசபைத் தேர்தலில் தமக்கு வாக்களித்தமைக்கு முதலில் மக்கள் அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதாக கூறினார்கள். அத்துடன் இந்த மாகாணசபையின் அதிகாரங்கள் மற்றும் மாகாணசபைக்கு கிடைக்கக்கூடிய நிதி எவ்வளவு போன்ற விடயங்கள் தெரியாது, அரசு மாகாண சபைக்கு எவ்வளவு கொடுக்குமென்பதும் தெரியாதுள்ளது. இதனைப் பொறுத்தே செயற்பாடுகளை முன்கொண்டு செல்லமுடியும். ஆனால் நிச்சயமாக இந்த குறைபாடுகளையும், தேவைகளையும் நிவர்த்தி செய்ய நாம் முழுமையான முயற்சி எடுப்போம் என்றும் தெரிவித்துள்ளனர்.

பொதுநலவாய அமைப்புக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்-பிரித்தானியா-

கொழும்பில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மாநாட்டை பகிஸ்கரித்தால், அது பொதுநலவாய அமைப்புக்கு ஏற்படும் பாரிய தாக்கம் என பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் வில்லியம் ஹேக் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் வைத்து இக்கருத்தை வெளியிட்டுள்ளார். இலங்கையில் மனித உரிமை நிலைமை தொடர்பில் அவதானம் செலுத்துவதற்கு இந்த பிரசன்னம் அவசியமாகின்றது. பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என பிரித்தானிய எதிர்க்கட்சி தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த பதிலை வழங்கியுள்ளார். இதனிடையே, இந்திய அரச தரப்பில் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வது தொடர்பில் நேற்று விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்ட போதும், எந்தவித தீர்மானங்களும் எட்டப்படவில்லை.

பிரதம நீதியரசர் பதவிக்கு எதிர்ப்பு-

பிரதம நீதியரசரை நியமிப்பது தொடர்பில் நீதிமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்கோ சவால் விடுவதற்கோ யாருக்கும் சட்டரீதியாக உரிமை இல்லை என சட்டமா அதிபர் பாலித்த பெர்னான்டோ உயர் நீதிமன்றதில் தெரிவித்துள்ளார். பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டதற்கு எதிராக மாற்று கொள்கை கேந்திர நிலையம் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு ஐவர் கொண்ட நீதியரசர் குழாமினால் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அரசியலமைப்புக்கு அமைய பிரதம நீதியரசர் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுவதாக சட்டமா அதிபர் அறிவித்துள்ளார். இதன்படி, ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைக்கு எதிராக வழக்குத் தாக்கல்செய்ய முடியாது என்றும், அவ்வாறான வழக்குகளில் இருந்து விடுபடுவதற்கான விசேட வரப்பிரசாதத்தையும், விதிவிலக்கையும் அரசியலமைப்பிலேயே ஜனாதிபதி வழங்கியிருப்பதாகவும் சட்டமா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

 அதிகாரமிக்க தலைவர்களின் பட்டியலில் புட்டின் முதல் இடம்-

உலகின் அதிகாரமிக்க தலைவர்களின் பட்டியலில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவை புறந்தள்ளி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் முதல் இடத்தை தன்வசப்படுத்தியுள்ளார். இந்த வருடத்துக்கான அதிகாரமிக்க தலைவர்களுக்கான பட்டியலை பொப் சஞ்சிகை வெளியிட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றதன் பின்னர் முதல் தடவையாக பரக் ஒபாமா இந்தப் பட்டியலில் பின்னடைவு கண்டுள்ளார். சிரிய விவகாரங்களை கையாள்வதில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் வகித்த பங்கே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவுக்கு எதிரான கருத்துக்களை தீவிரமாக தெரிவித்துவருவதில் ரஷ்ய ஜனாதிபதி கைதேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்குகளுக்கு விசேட பொலீஸ்பிரிவு-

காவியுடையணித்த பிக்குகளால் பெண்கள்மீது பிரயோகிக்கப்படும் வன்முறைகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள விசேட காவல்துறை பிரிவொன்றை அமைக்குமாறு புத்தசாசன அமைச்சின் செயலாளர் பொலிஸ் மா அதிபரிடம் கோரியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பொலிஸ் மா அதிபரும் இணக்கப்பாட்டை வெளியிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் இன்று பொதுபல சேனா அமைப்பு மற்றும் புத்தசாசன மற்றும் ஆன்மீக விவகார அமைச்சின் செயலாளர்களுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது.

 காத்தான்குடியில் ஊடகவியலாளர் கைது-

மட்டக்களப்பு காத்தான்குடியிலுள்ள வார உரைகல் எனப்படும் பத்திரிகையின் பிரதம ஆசிரியரான எம்.ஐ.எம். றஹ்மத்துல்லா (புவி) என்பவரை அவரின் வீட்டில் கஞ்சா வைத்திருந்ததாக கூறி காத்தான்குடி பொலிசார் சந்தேகத்தின்பேரில் இன்றுகாலை கைது செய்துள்ளனர். இன்றுகாலை 7 மணியளவில் குறித்த பத்திரிகையின் ஆசிரியரின் வீட்டுக்கு சென்ற பொலிஸ்குழு ஒன்று அவரின் வீட்டுக்குள் பொலிஸ் நாய்மூலம் தேடுதல் நடத்தியபோது கஞ்சா கட்டு ஒன்றை கைப்பற்றியுள்ளனர். இது அவரின் வீட்டு வளாகத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது. Read more

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

vikiநேற்று மதியம் 1.00 மணியளவில் வட மாகாண முதலமைச்சர் இருதய பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் இருதய சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். அவர் தற்போது நலமாக உள்ளார். அவர் இருதயப் பரிசோதனையின் பின்னர் 24 மணிநேரம் வைத்தியர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற  இருப்பதனாலேயே வைத்தியசாலையில் தொடர்ந்தும் உள்ளார்

மூளாய், சுழிபுரம் முன்பள்ளி சிறார்களுக்கான விளையாட்டுப் போட்டி-

யாழ். மூளாய், சுழிபுரம் மனிதவள அபிவிருத்தி சனசமூக நிலைய முன்பள்ளி சிறார்களுக்கான விளையாட்டுப் போட்டி நேற்று மாலை இடம்பெற்றது. சுழிபுரம் மனிதவள அபிவிருத்தி சனசமூக நிலைய முன்றலில் நடைபெற்ற இந்த விளையாட்டுப் போட்டி நிகழ்விற்கு பிரதம விருந்தினர்களாக வட மாகாணசபை உறுப்பினர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், வலி மேற்கு பிரதேசசபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரநேசன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வலி மேற்கு பிரதேச உறுப்பினர்கள் நடனேந்திரன், சசி ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். இந்நிகழ்வில் பெருந்திரளான மக்களும் கலந்து கொண்டிருந்ததுடன், விளையாட்டுப் போட்டியில் பங்கு பற்றியிருந்த சிறார்களுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இலங்கை அலுவலகங்களின் பாதுகாப்பு அதிகரிப்பு-

தமிழகத்தில் உள்ள இலங்கை அலுவலகங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.சென்னையில் உள்ள மஹாபோதி, இலங்கை தூதரகம் உள்ளிட்ட அலுவலகங்களின் பாதுகாப்புக்களே இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளன. நேற்று தமிகத்தில் அஞ்சல் நிலையங்கள் இரண்டில் இடம்பெற்ற சிறிய வெடிவிபத்தினை தொடர்ந்தே இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக த ஹிந்து செய்திதாள் குறிப்பிட்டுள்ளது.

பிரித்தானியா அறிவிப்பு-

அரசியல் தஞ்சம் கோரி வீணான முயற ;சியில் ஈடுப்பட வேண்டாம் என்று பிரித்தானியா அறிவித்தல் விடுத்துள்ளது. புதிய சட்டத்தின் படி, அகதி அந்தஸ்து கோரி வருபவர்கள் திரும்பவும் தமது சொந்த நாட்டுக்கே அனுப்பப்படுவார்கள் என பிரித்தானிய உள்துறை அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தனிப்பட்ட இலாபம் கருதியே இவ்வாறு அகதி அந்தஸ்து கோரி வருவதாக பிரித்தானிய உள்துறை அமைச்சர் மார்க் ஹாபர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதியில் 347 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ அமெரிக்கா முன்வருகை-

வடக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 5000 குடும்பங்களுக்கு உதவுவதற்கு அமெரிக்கா முன்வந்துள்ளது. வட மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனை, யாழிலுள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தபோது, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்செல் ஜே சீசென் இதற்கான உறுதிமொழியை வழங்கியுள்ளார். அமெரிக்கத் தூதுவர் மிச்செல் ஜே சிசென், யாழ் ஒஸ்மானியா கல்லூரிக்கு விஜயம் செய்ததுடன், அதன் பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடியுள்ளார். அத்துடன் அமெரிக்க தூதுவர் இன்றுபிற்பகல் வடமராட்சிக்கு விஜயம் செய்துள்ளார்.

 சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளன உறுப்பினர்கள் கைது .

சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளன ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் உட்பட சம்மேளனத்தின் இரண்டு உறுப்பினர்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சுதந்திர ஊடக இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பயிற்சி பட்டறையில் கலந்துகொண்டபோதே இந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றுலா விசாவில் வந்து செயலமர்வை நடத்தினர் எனக்கூறியே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சுதந்திர ஊடகவியலாளர் இயக்க உறுப்பினரொருவர் தெரிவித்துள்ளார். குறித்த செயமலர்வு ஜானகி ஹோட்டேலில் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் 10 பேர் வந்து இந்த இரண்டு வெளிநாட்டு பிரஜைகளையும் கைதுசெய்துள்ளனர். இவர்கள் இருவரும் அதிதிகளாகவே செயலமர்வில் கலந்துகொண்டதாக சுதந்திர ஊடகவியலாளர் இயக்கம் மேலும் தெரிவித்துள்ளது.

யாழ். ஊடகவியலாளர்களுக்கு உயிர் அச்சுறுத்தல்-

IMG_4146இராணுவத்தினரால் தமக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படுத்தப்படலாம் என யாழ். ஊடகவியலாளர்கள் ஐவர் யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர். மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் இன்றுபகல் இந்த ஊடகவியலாளர்கள் ஐவரும் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். மாவட்ட இணைப்பாளர் த.கனகராஜிடம் தமது முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளனர். முறைப்பாடு செய்ததன் பின்னர் மேற்படி ஊடகவியலாளர்கள் கருத்துத் தெரிவிக்கையில், வலி.வடக்கு கட்டுவன் பிரதேசத்தில் இராணுவத்தினரால் வீடுகள் இடித்தழிக்கப்படுவதாக வெளியான தகவல்களை அடுத்து நேற்று அங்கு நாம் சென்றிருந்தோம். அங்கு உயர் பாதுகாப்பு வலயமாக்கப்பட்டுள்ள பிரதேசத்திற்குள் உள்ள வீடுகளை இராணுவத்தினர் புல்டோசரால் இடித்து தரைமட்டமாக்கி கொண்டு இருந்தார்கள். அதனை நாம் ஒளிப்படம் எடுத்தோம். அதனை அவதானித்த இராணுவத்தினர் எம்மை சுற்றிவளைத்து எம்மிடம் இருந்த ஒளிப்பட கருவி, ஒலிப்பதிவுக்கருவி என்பவற்றை பறித்து அதில் இருந்த சகலவற்றையும் அழித்தனர். அத்துடன் இச் சம்பவம் தொடர்பாக ஏதாவது படங்களோ செய்திகளோ ஊடகங்களில் வெளியானால் அதன் பின்னர் நடப்பதே வேறு அதன் பின்னர் நாம் இராணுவ பலத்தை பிரயோகிக்க வேண்டிவரும் என தன்னை இராணுவ பிரிகேடியர் என அறிமுகம் செய்த இராணுவ அதிகாரி மிரட்டியிருந்தார். நேற்றைய இச்சம்பவம் தொடர்பான செய்திகள், படங்கள் என்பன இன்று ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இதனால் இராணுவத்தினரால் எமது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படலாம் என்பதனால் நாம் இன்று மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளனர். மேற்படி ஊடகவியலாளர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சரவணபவன், வட மாகாணசபை உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், பா.கஜதீபன் மற்றும் வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர்களுடன் நேற்று கட்டுவன் பிரதேசத்திற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.IMG_4147IMG_4124IMG_4135IMG_4137

இலங்கையின் மிகச் சிறந்த நூலகமாக யாழ் நூலகம் தெரிவு-

jaffna libraryஇலங்கையின் மிகச் சிறந்த நூலகமாக யாழ்ப்பாண நூலகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள நூலகங்களுக்கு இடையில் போட்டி நடாத்தப்பட்டது. இதன்படி அகில இலங்கை ரீதியில் மிகச் சிறந்த நூலகமாக யாழ்ப்பாண நூலகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாநகரசபைகளுக்கு இடையில் நடாத்தப்பட்ட நூலகப் போட்டியில் யாழ்ப்பாண நூலகம் முதலாம் இடத்தைப்பெற்றுக் கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கையுடனான உறவை தொடர்வது அவசியம்: மணிசங்கர் ஐயர்-

indiaஇலங்கையில் உள்ள தமிழர் பகுதிகளில் இந்தியா மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டுவரும் சூழ்நிலையில், அந்நாட்டுடனான உறவு தொடர்வது அவசியம் என தமிழகத்தின் முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவருமான மணிசங்கர் ஐயர் வலியுறுத்தியுள்ளார். காங்கிரஸ் கட்சியினர் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பது குறித்து இருவேறு கருத்துக்களை கூறிவரும் நிலையில், மணிசங்கர் ஐயர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார். பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சியினரும் பிரதமர் உட்பட யாரும் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க கூடாது என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் மத்திய வெளியுறுவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் மாநாட்டில் பங்கேற்பது அவசியம் என வலியுறுத்தினார். அதேபோல் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பனும் வலியுறுத்தியிருந்தார். ஆனால் காங்கிரஸ் கட்சியின் தமிழக முன்னாள் தலைவர் தங்காபாலு மற்றும் மத்திய அமைச்சர் ஜி.கே வாசன் உள்ளிட்டோர் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 பிரித்தானிய பல்கலைக்கு பிக்குகள் சங்கம் எதிர்ப்பு

மீரிகம பிரதேசத்தில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்;ள பிரித்தானிய லான்கஷெயார் பல்கலைக்கழகத்தின் கிளைக்கு சோசலிச பிக்கு முன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனை முன்னிட்டு கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்திற்கு கோரிக்கை மனுவொன்றும் கையளிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, புதிய பல்கலைக்க ழகத்திற்கான அடிக்கல்லை இலங்கை வரும் பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் நாட்டி வைப்பார் என்ற செய்தியை பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம்;; மறுத்துள்ளது.

வாக்காளர் இடாப்பில் பெயர்களை சேர்க்க நாளை வரை கால அவகாசம்-

2013 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில் இதுவரை தமது பெயர்களை சேர்த்துக்கொள்ளாதவர்கள் அது தொடர்பான உரிமைக் கோரிக்கையினை முன்வைப்பதற்கு தேர்தல்கள் செயலகம் வழங்கிய காலஅவகாசம் நாளையுடன் நிறைவு பெறவுள்ளது இந்த வருடத்திற்கான வாக்காளர் இடாப்பை தயாரிக்கும் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி 2013 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பு அத்தாட்சிப்படுத்தப்படவுள்ளது. 2014 ஆம் ஆண்டில் ஏதேனும் ஒரு தேர்தல் நடாத்தப்படுவதாயின் அதற்காக 2013 ஆம் ஆண்டிற்கான தேர்தல் இடாப்பு பயன்படுத்தப்படவுள்ளது. தேர்தல் ஒன்றின்போது வாக்காளர் இடாப்பில் பெயர் சேர்க்கபடவில்லை என்று முறைப்பாடு செய்தாலும் வாக்காளர் இடாப்பு அத்தாட்சிப்படுத்தப்பட்ட பின்னர் புதிதாக எந்தவொரு பெயரையும் உட்சேர்க்க முடியாது என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். 2013 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பில் பெயரைச் சேர்த்துக்கொள்வதற்காக தற்போது வழங்கப்பட்டுள்ள இறுதிச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணையாளர் கோட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பான கோரிக்கைகளை உடனடியாக தத்தமது மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க முடியும் எனவும் தேர்தல்கள் செயலகம் குறிப்பிடுகின்றது.

இந்தியாவின் பங்கேற்பை தடுக்க கோரும் மனு தள்ளுபடி-

law helpஇலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பேராசிரியர் சரஸ்வதி கோவிந்தராஜ் என்பவரால் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை இன்று பரிசீலனை செய்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதனை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

கப்பல் கூட்டுத்தாபன தலைவராக வைஸ் அத்மிரால் ஜயநாத் கொலம்பகே நியமனம்-

இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்தின் தலைவராக வைஸ் அத்மிரால் ஜயநாத் கொலம்பகே நியமிக்கப்பட்டுள்ளார். வைஸ் அத்மிரால் ஜயநாத் கொலம்பகே தற்போது இலங்கை கடற்படை தளபதியாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் இனங்களிடையே முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும். இனவாதத்திற்கு சாதகமாக அமைந்துவிடும். அமைச்சர் வாசுதேவ நாணயக்கார –

அரசாங்கத்தின் தலையீட்டுடன் தொகை தொகையாக வட மாகாணத்தில் சிங்கள மக்களை குடியேற்றுவதை எதிர்க்கின்றேன். ஆனால், சிங்கள மக்களாகட்டும், தமிழ் மக்களாகட்டும் அனைவரும் சுயவிருப்பதோடு எங்கும் வாழலாம். அதனை தடைசெய்ய முடியாது 
சிங்கள மக்கள் தமது வர்த்தகம் மற்றும் தொழில்கள் நிமித்தமும், சுயவிருப்பத்துடனும் வடக்கில் குடியேறுவதை தடுப்பதும் எதிர்ப்புத் தெரிவிப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
வடக்கு முதலமைச்சரின் அந்த நிலைப்பாட்டை எதிர்க்கின்றேன். வடக்கில் சிங்கள மக்களுக்கு எதிராக அவ்வாறான ஒரு நிலை உருவானால் தெற்கிலும் தமிழ் மக்கள் வந்து குடியேற முடியாது. அதற்கு இடமளிக்கமாட்டோம் என சிங்கள மக்கள் மத்தியில் எதிர்ப்புக்கள் கிளம்பும்.
இது மீண்டும் இனங்களிடையே முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும். இனவாதத்திற்கு சாதகமாக அமைந்துவிடும்.
எனவே, சிங்கள மக்கள் தமது சுயவிருப்பின் பேரில் வடக்கில் மட்டுமல்ல எங்கும் வாழமுடியும். அதேபோன்று தமிழ் மக்களும் தமது சுயவிருப்பின் பேரில் எங்கும் வாழ முடியும். இதற்குத் தடைபோட எவருக்கும் அதிகாரம் இல்லை.
வடக்கில் மக்கள் வாழும் இடங்களில் இராணுவ நடமாட் டத்தைத் தடைசெய்ய வேண்டும்.
இராணுவத்தினர் அவர்களுக்குரிய இடங்களில் இருக்க வேண்டும். அத்தோடு, சிவில் நிர்வாகத்தில் இராணுவத் தினரின் தலையீட்டை இல்லாது செய்ய வேண்டும். தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு உளவுப் பிரிவினர் நடமாடலாம். ஆனால், இராணுவச் சீருடையுடன் மக்கள் மத்தியில் நடமாடுவதென்பது, மக்கள் மத்தியில் அச்சத்தையும், தாம் இராணுவ மயமாக்கலுக்குள் சிக்கியிருக்கின்றோம் என்ற உணர்வை ஏற்படுத்தும்.
வடக்கிற்கு அரசாங்கம் ஜனநாயகத்தை வழங்கியுள்ளது. அதனை சுவாசிக்க மக்களுக்கு இடமளிக்கப்பட வேண்டும்.
எந்தவொரு மாகாண சபை முதலமைச்சருக்கும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. எனவே, வடக்கு முதலமைச்சருக்கும் அதே நிலைதான்.பொலிஸ் அதிகாரத்தை வழங்குவதா? இல்லையா என்பதை ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டும்.
இராணுவத்தைச் சார்ந்த ஒருவர் வட மாகாண ஆளுநராகப் பதவி வகிப்பதை நானே முதலில் எதிர்த்தேன். சிவிலியன் ஒருவரே ஆளுநராக நியமிக்கப்பட வேண்டுமென அரசாங்கத்தை இன்றும் வலியுறுத்துகிறேன் என சமூக ஒருமைப்பாடு மற்றும் தேசிய மொழிகள் தொடர்பான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.  

வலி. வடக்கில் கூட்டமைப்பு பிரதிநிதிகள் மற்றும் ஊடகத்தினருக்கு அச்சுறுத்தல்-

யாழ். வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள கட்டுவன் பகுதியில் இராணுவத்தினரால் வீடுகள் உடைக்கப்படுவதாக ஊர் மக்களால் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்றுமுற்பகல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சரவணபவன், வட மாகாணசபை உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், பா.கஜதீபவன், வலி.தெற்கு பிரதேசசபைத் தலைவர் பிரகாஸ் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் சிலரும், ஊடகவியலாளர்களும் அங்கு சென்று பார்வையிட்டுள்ளனர். இதன்போது அந்தப் பகுதிக்குப் பொறுப்பான பிரிகேடியர் சில இராணுவத்தினருடன் அங்கு வந்தநிலையில் வீடுடைக்கும் செயற்பாடு முற்றிலும் தவறானதென அவருக்கு சுட்டிக்காட்டப்பட்டது. இதன்போது நீண்டநேரம் அவருடன் தர்க்கமும் ஏற்பட்டது. இதனையடுத்து அந்த பிரிகேடியர் தான் கட்டளைகளை நிறைவேற்றுவதாகவும், இதுபற்றி கதைப்பதென்றால் மேலிடத்தில் கதைக்கும்படியும் கூறினார். இதேவேளை அப்பகுதி நிலைமைகளை ஊடகத்தினர் படமெடுத்த நிலையில் இங்கு படமெடுக்கக் கூடாது இங்கு வந்து படமெடுத்தது தவறு என்று அந்த பிரிகேடியர் எச்சரித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவருடன் வந்த படையினர் புகைப்படக் கருவிகளையும், கையடக்கத் தொலைபேசிகளையும் பறித்து படங்களை அழித்துவிட்டுச் சென்றுள்ளனர்.

வலையிறவுப் பாலம் திறந்துவைப்பு-

மட்டக்களப்பு வலையிறவுப்பாலம் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் வீதி அபிவிருத்தி திணைக்களத்தால் நிர்மாணிக்கப்பட்ட இந்த வலையிறவுப் பாலத்தை உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத்தும் இன்றுமுற்பகல் திறந்துவைத்துள்ளனர். 108 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வலையிறவுப்பாலமானது படுவான்கரையையும் மட்டக்களப்பையும் இணைக்கும் பிரதான பாலம் என்பது குறிப்பிடத்தக்கது. இதே நேரம் இப்பாலத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதியமைச்சார் கருணா அவர்களை ஏன் அழைக்கவில்லை இது ஜனாதிபதியின் வேலையா? பிள்ளையானின் வேலையா? என அவரின் ஆதரவாளர்கள் பதாதைகளை ஏந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.

அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு பஸ் சேவை ஆரம்பம்-

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு பஸ் சேவை இன்று காலையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகவேக நெடுஞ்சாலையில் சுமார் 20 சொகுசு பஸ்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன் ஆரம்ப நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சினி பெர்ணான்டோபிள்ளை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர். கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையூடாக நீர்கொழும்பிலிருந்து கொழும்புக்கான விசேட சொகுசு பஸ் சேவையும் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு பிரதான பஸ் நிலையத்திலிருந்து இந்த சொகுசு பஸ் சேவையை பிரதி அமைசசர் சரத் குமார குணரட்ன ஆரம்பித்து வைத்துள்ளார். அதிவேக நெடுஞ்சாலையூடாக நீர்கொழும்பிலிருந்து கொழும்பிற்கு ஏழு பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதேவேளை நேற்றுமாலை 6 மணியிலிருந்து முதல் 6 மணித்தியாலங்களில் கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் மூலம் அரசாங்கம் 2.3 மில்லியன் ரூபாவை சம்பாதித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பாதுகாப்புச் செயலர் இந்தியாவிற்கு விஜயம்-

பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இந்த வாரத்தில் இந்தியாவுக்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார் இந்திய அமைச்சர் வீ நாராணயசாமியை கோடிட்டு பிடிஐ செய்திசேவை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது இதன்போது இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெறும் என்றும் நாராயணசாமி குறிப்பிட்டுள்ளார்.

ஏழு மில்லியன் ரூபா போலி நாணயத்தாள்கள் பறிமுதல்-

ஏழு மில்லியன் ரூபா, போலி நாணயத்தாள்கள் புத்தளம் மாவட்டம் மாதம்பே பகுதியில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போலியாக அச்சிடப்பட்ட இரண்டாயிரம் ரூபா நாணயத்தாள்களே கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்ததாகவும் அவர்; கூறியுள்ளார். இந்த போலி நாணயத்தாள்களின் தொடர் இலக்கம் டீ 677 991 59 என்றும், இதனால் இரண்டாயிரம் ரூபா நாணயத்தாள்களை பயன்படுத்தும்போது விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் இலக்கம் குறிப்பிடப்பட்ட போலி இரண்டாயிரம் ரூபா நாணத்தாள்கள் கிடைக்கப்பெறும் பட்சத்தில் உடன் அதனை அருகிலுள்ள பொலிஸில் ஒப்படைக்குமாறு பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

கைதிகளின் குடும்பங்கள் தொடர்பில் மீளாய்வு செய்ய நடவடிக்கை-

சிறைக்கைதிகளின் குடும்பங்கள் தொடர்பான மீளாய்வு திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த திட்டத்தின்கீழ் அனைத்து சிறைக்கைதிகளினதும் குடும்பங்கள் தொடர்பான விபரங்களை சேகரிக்கவுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜீ.எஸ்.விதானகே கூறியுள்ளார். கைதிகளின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை செல்லும் வயதிலுள்ள பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது ஆராயப்படவுள்ளன. இந்த செயற்றிட்டத்திற்காக சமூக சீர்த்திருத்த திணைக்களத்தின் மூலம் பட்டதாரிகளை சேர்த்துக்கொள்வதற்கும் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

யாழ். வைத்தியசாலை தொண்டர்கள் பணி பகிஸ்கரிப்பு-

யாழ். போதனா வைத்தியசாலையில் தொண்டர்களாக பணிபுரிந்துவரும் சிற்றூழியர்கள் இன்றுகாலை பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர். சிற்றூழியர்கள் நியமனத்தின்போது தம்மை புறக்கணித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே சிற்றூழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர். யாழ். போதனா வைத்தியசாலையின் புதிய கட்டடத்திற்கு முன்பாக இன்றுகாலை 11.30 மணிவரை தொண்டர்களாக பணி புரியும் 199 பேர் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் க.கமலேந்திரன் வைத்தியசாலைக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்களுடனும் வைத்தியசாலை நிர்வாகத்துடனும் பேச்சுக்களை நடத்தியதைத் தொடர்ந்து தொண்டர்கள் தமது போராட்டத்தினை நிறைவுக்கு கொண்டுவந்துள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அமெரிக்காவிற்கு விஜயம்-

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இன்றையதினம் அமெரிக்காவுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளனர். கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் ஆகிய இருவருமே இவ் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர். நான்குநாள் விஜயம் மேற்கொள்ளும் தாங்கள் இருவரும் இன்றிரவு அமெரிக்கா நோக்கி பயணிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். அமெரிக்க தமிழ்ச் சங்கத்தில் இடம்பெறவுள்ள நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக தாம் இந்த விஜயத்தை மேற்கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடமாகாணத்தில் ஆறு புதிய மீன் பிடித்துறைமுகங்கள்-

வடமாகாணத்தில் ஆறு புதிய மீன்பிடித் துறைமுகங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமுத்திர வள அபிவிருத்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய முல்லைத்தீவு, மீசாலை, படுவக்கட்டை, இலங்கைத்துறை மற்றும் பளைச்சேனை ஆகிய பிரதேசங்களில் 200 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இந்த மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளன. இவற்றின் நிர்மாணப்பணிகள் எதிர்வரும் 2014ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமளவில் ஆரம்பிக்கப்படுமெனவும், நிர்மாணப்பணிகளை தாய்வான் நாட்டு நிறுவனமொன்று மேற்கொள்ளவுள்ளதாகவும் இப்பணிகளை 2015இல் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. படகுகள் நங்கூரமிடல், களஞ்சியசாலை உட்பட பல வசதிகளுடன் மீன் பிடித்துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளன. அத்துடன் இலங்கையிலுள்ள சகல மீன்பிடித்துறைமுகங்களும் சர்வதேச தரத்தில் அபிவிருத்தி செய்யப்படுமெனவும் அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

முல்லைத்தீவில் குண்டு வெடிப்பு-

முல்லைத்தீவில் குண்டொன்று வெடித்துள்ளது. முல்லைத்தீவு பி.டப்ளியு.டீ வீதியிலுள்ள முல்லைத்தீவுப் பொலிஸ் நிலையத்திற்கு பின்னால் உள்ள காணியிலேயே இந்த வெடிப்பு இன்றுமுற்பகல் 11.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மேற்படி காணியில் பொலிஸார் இன்று சிரமதானப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது குப்பைக்கு தீ மூட்டும்போதே குப்பைக்குள் இருந்து குண்டு வெடித்துள்ளது. பழைய மோட்டார் குண்டே வெடித்;துள்ளது. இதனால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லையென தெரிவித்த முல்லைத்தீவு பொலிஸார் அருகிலிருந்த ராயப்பு தேவாலயத்திற்கு சிறு சேதம் ஏற்பட்டதாக கூறியுள்ளனர்.

யாழ் நோக்கி பயணித்த பஸ் தீக்கிரை-

யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அதிசொகுசு தனியார் பஸ் ஒன்று நேற்று நள்ளிரவு தீக்கிரையாகியுள்ளது. வெள்ளவத்தையிலிருந்து சென்ற இந்த பஸ் புத்தளம் மாதம்பே கலஹிடியாவ 67ஆம் வளைவில் வைத்து தீக்கிரையாகியுள்ளது. தீ அனர்த்தம் ஏற்படும்போது பஸ்ஸில் 25 பயணிகள் வரையில் இருந்துள்ள போதிலும் பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மூன்று மணித்தியாலயங்கள் இந்த பஸ் தீப்பற்றி எரிந்துள்ளது. தொழிநுட்ப கோளாறே இந்த விபத்துக்கு காரணமென பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனால் கொழும்பு – சிலாபம் வீதியின் போக்குவரத்து 3 மணத்தியாலங்கள் பாதிக்கப்பட்டிருந்தபோதும் பின்னர் வழமைக்கு திரும்பியுள்ளது.

மட்டக்களப்பில் காணாமற்போன சிறுவன் யாழில் மீட்பு

மட்டக்களப்பில் காணாமற்போனதாகக் கூறப்பட்ட சிறுவன் யாழ். பஸ் நிலையத்தில் வைத்து மீட்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பெரிய கல்லாறைச் சேர்ந்த இராமநாதன் சானுஜன் என்ற சிறுவன் கடந்த 20ஆம் திகதி காணமற்போயிருந்தார். இந்நிலையில், இச்சிறுவன் காணாமல் போனமை தொடர்பாக பத்திரிகையில் புகைப்படத்துடன் வந்திருந்த செய்தியினை சாவகச்சேரி பிரதேச வலுவூட்டல் ஆலோசகர் கத்தரித்து வைத்திருந்துள்ளார். மேற்படி ஆலோசகர் நேற்று யாழ்.பஸ் நிலையத்திற்கு வந்தபோது, தான் வைத்திருந்த படத்திற்குரிய சிறுவன் தனியாக நிற்பதை அவதானித்து, அவனை மீட்டு யாழ் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். யாழ் பொலிஸார் சிறுவன் குறித்து மட்டக்களப்பு பொலிஸாருக்கு அறிவித்ததுடன், சிறுவர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய பின் மட்டக்களப்பு பொலிஸாரிடம் சிறுவனை ஒப்படைப்பதாக அறிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் போர்க் கப்பல்கள் கொழும்பு வருகை-

பாகிஸ்தான் கடற்படைக்குச் சொந்தமான இரு கப்பல்கள் நான்கு நாள் நல்லெண்ண விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளன. இவ்விரு கப்பல்களும் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளன. பயிற்சிகளுக்காகவே இந்த இரண்டு போர்க் கப்பல்கள் இன்றுகாலை இலங்கை வந்துள்ளன. இந்த கப்பல்களில் இரு நாடுகளினதும் கடற்படையினர் கூட்டுப் பயிற்சியை மேற்கொள்ளவுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய கூறியுள்ளார். பாகிஸ்தான் மற்றும் இலங்கை கடற்படையினருக்கு இடையிலான நற்புறவை வலுப்படுத்துவது இதன் நோக்கமென்று கூறப்படுகின்றது.

போர் விமானங்களை இலங்கைக்கு விற்க பாகிஸ்தான் முடிவு-

சீன அரசின் ஒத்துழைப்போடு தயாரிக்கப்பட்ட அதி நவீனரக ஜே.எப்-17 என்ற போர் விமானங்களை அடுத்த வருடத்திலிருந்து இலங்கை போன்ற நாடுகளுக்கு விற்பனை செய்ய பாகிஸ்தான் அரசு முடிவெடுத்துள்ளதாக கேஷன்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவுடன் இணைந்து 42 ஜே.எப்-17 ரக விமானங்கள் பாகிஸ்தானால் உருவாக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் விமானப்படைக்கு அடுத்தவருடம் இந்த ரக விமானங்களை 5 லிருந்து 7 வரை விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இலங்கை, குவைட்;, கட்டார் மற்றும் இதர நட்பு நாடுகளுடன் இதற்கான பேச்சுகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அந்த செய்தி மேலும் கூறியுள்ளது. பாகிஸ்தான் பாதுகாப்பமைச்சு இந்த போர் விமானங்களை அடுத்த வருடத்திற்குள் விற்பனை செய்து விடலாம் என்று நம்பப்படுகின்றது.

இலங்கை மாநாட்டில் குர்சித் பங்கேற்பது உறுதி-

இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.  தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த சல்மான் குர்ஷித் இதனை தெரிவித்துள்ளார். மாநாட்டில், பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பது குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இலங்கைத் தமிழர் பிரச்சினை இந்தியாவுக்கு மிக முக்கியமான ஒன்று என்று தெரிவித்துள்ள குர்ஷித், மாநாட்டில் கலந்து கொள்ளாமல் போனால் தமிழக மீனவர் பிரச்சினையை எப்படி எழுப்புவது என்றும் வினவியுள்ளார். பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பெயரளவில்கூட பங்கேற்க கூடாது என தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேறியுள்ள நிலையில் குர்ஷித்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொழும்பு – கட்டுநாயக்கா அதிவேக நெடுஞ்சாலை திறந்துவைப்பு-

கொழும்பு – கட்டுநாயக்கா அதிவேக நெடுஞ்சாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்றுமுற்பகல் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த அதிவேக நெடுஞ்சாலையை இன்று காலை 9.47 க்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பேலியகொட நுழைவாயிலில் வைத்து வாகனப் போக்குவரத்திற்காக அங்குரார்ப்பணம் செய்து வைத்துள்ளார்.

ஷிரானி திலகவர்தன பதில் பிரதம நீதியரசராக சத்தியப்பிரமாணம்-

உயர் நீதிமன்ற நீதியரசர்  ஷிரானி திலகவர்தன பதில் பிரதம நீதியரசராக ஜனாதிபதி முன்னிலையில் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். இதேவேளை, நீர்ப்பாசனம் மற்றும் விவசாய சிந்தனைகள் எனப்படும் ‘நில் தியவர கெத் யாயட’ என்ற நூலின் பிரதி  நேற்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. நீர்பாசனம் மற்றும் விவசாய அமைச்சராக தற்போதைய சபாநாயகர் சமல் ராஜபக்ஸ பதிவிவகித்த காலக்கட்டத்தில் அவர் ஆற்றிய சேவைகள் பாராட்டும் வகையிலேயே இந்த நூலினை நிமல் வீரதுங்க எழுதியுள்ளார். இதன்போது தேசிய நீர்பாசன துறையை பாதுகாக்கும் குழு உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.