அரசாங்கத்திலுள்ள சிங்கள இனவாதக் கட்சிகளின் கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஒரு போதும் அலட்டிக் கொள்வதில்லை-வாசுதேவ நாணயக்கார
அரசாங்கத்திலுள்ள சிங்கள இனவாதக் கட்சிகளின் கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஒரு போதும் அலட்டிக் கொள்வதில்லை. அதனை வட மாகாண சபைத் தேர்தலை நடத்திக்காட்டியதன் மூலம் நிரூபித்துள்ளார் .
வெள்ளவத்தையையும், மட்டக்குளியையும் நந்திக்கடலாக மாற்ற வேண்டாமென்ற ஹெல உறுமயவின் கருத்து முட்டாள்தனமான இனக்குரோதத்தை ஏற்படுத்துவதாகுமென்றும் அமைச்சர் விமர்சித்தார்.
வடக்கில் குறிப்பிட்ட ஒரு சிலர் மத்தியில் ஆயுதம் ஏந்தும் சிந்தனை இருக்கலாம். அதேபோன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் அரசியல் அதிகாரம் உள்ள பிரதேசங்களிலும் அவர்களது கொள்கைகள் வலுப் பெற்றிருக்கலாம். ஆனால், வெள்ளவத்தை, மட்டக்குளி மற்றும் கொழும்பில் வாழும் தமிழ் மக்களிடையே ஆயுதம் ஏந்தும் சிந்தனை கிடையாது.
அவர்கள் அனைத்து இன, மத மக்களுடன் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். எனவே, கூட்டமைப்பினரின் கொள்கை கொழும்பில் எடுபடாது. இவ்வாறானதொரு நிலையில் வெள்ளவத்தை, மட்டக்குளி பிரதேசங்களை நந்திக்கடலாக மாற்ற வேண்டாமென்ற ஜாதிக ஹெல உறுமயவின் கருத்தானது இனங்களிடையே குரோதத்தை ஏற்படுத்தும் முட்டாள்தனமானதாகும்.
இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் ஜனாதிபதியின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும் கடும் போக்கு கருத்தாகும். ஆனால், அரசாங்கத்தில் பங்காளர்களாகவுள்ள இனவாதிகளின் கருத்துகளையும் கோரிக்கைகளையும் ஜனாதிபதி கண்டுகொள்வதுமில்லை. அது தொடர்பில் அலட்டிக் கொள்வதும் இல்லை.
ஜனாதிபதி முன்னிலையில் விக்கினேஸ்வரன் முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்து கொள்வதென்பது பாராட்டுக்குரிய விடயமாகும். இதன் மூலம் வட மாகாணத்திலும் ஜனாதிபதியின் அதிகாரம் இருப்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொள்கிறது. இவ்வாறான மாற்றம் வரவேற்புக்குரியது.
இதனையும் சிங்கள இனவாத சக்திகள் விமர்சிக்கின்றன. தமிழ் மக்களுக்கு எதிராக இனக்குரோதத்தை ஊக்குவிக்கின்றனர். இவையனைத்தும் சிங்கள மக்கள் மத்தியில் இழந்துபோன அரசியல் செல்வாக்கை மீண்டும் நிலை நிறுத்திக் கொள்வதற்கான கபடத்தனமான நாடகமாகுமென்றார் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார .