வடமாகாண சபைக்கான அமைச்சுப் பதவிகள் தொடர்பில் இறுதி முடிவு எட்டப்பாத நிலையில் அனைத்துக்கட்சி தலைவர்களின் கூட்டம் நிறைவடைந்துள்ளது.

இதுதொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தபோது இச் சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்துள்ள வெகுமதி ஆசனங்கள் தொடர்பிலும் அமைச்சுப் பதவி மற்றும் பதவியேற்பு போன்ற விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.
போனஸ் ஆசனம் தொடர்பில் அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொண்டதற்கிணங்க முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களை சேர்ந்த பிரதிநிதிகளுக்கு அவை வழங்கப்பட்டுள்ளன.
அமைச்சுப் பதவிகள் தொடர்பிலும், மற்றும் பதவியேற்பு தொடர்பிலும் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை. அவை இரண்டிற்;கும் நாட்கள் இருக்கின்ற படியால் மீண்டும் ஒரு தடவை கூடி இறுதி முடிவை எடுப்போம்’ என்று அவர் தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களிற்கான கூட்டம் யாழ்.உதயன் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது. இதில் வடமாகாண சபைக்குரிய நான்கு அமைச்சுப் பதவிகள் தொடர்பில் கலந்துரையாடல் நடைபெற்றன. இக்கலந்துரையாடலில், அமைச்சுப் பதவிகள் தொடர்பில் இறுதித்தீர்மானம் எடுப்பதில் கட்சிகளுக்கிடையில் இழுபறி நிலைக் காணப்பட்டதால் அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்குவதில் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சிக்கு 2 அமைச்சுப் பதவிகளும் ஈ.பி.ஆர்.எல்எப்.க்கு 1 அமைச்சும் ரெலோவிற்கு 1 அமைச்சும் என்ற அடிப்படையில் இந்த பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
இதில் முக்கிய அமைச்சான கல்வி மற்றும் சுகாதார அமைச்சு தமிழரசுக் கட்சிக்கு வழங்கப்படவேண்டும் என்று தமிழரசுக்கட்சி கோரி வருவதால் ஏனைய கட்சிகள் இதற்கு எதிர்ப்பு காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.