13 ஆவது திருத்தச் சட்டமே இந்தியாவின் விருப்பம்-கலாநிதி மன்மோகன்சிங்-

13வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாடு இலங்கைக்கு நன்கு தெரியும் என இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார். விமானம்மூலம் நியூயோர்கில் இருந்து இந்தியாவிற்கு பயணிக்கும்போது ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே மன்மோகன் சிங் இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன், இலங்கையில் அதிகாரப் பரவலாக்கம் செய்யப்பட்ட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டதுடன், திகதி ஒதுக்கீடு சிக்கல் காரணமாக இலங்கை ஜனாதிபதியுடனான நியூயோர்க் சந்திப்பு இடம்பெறாது போனதாகவும் கூறியுள்ளார்.

வடமேல், மத்திய மாகாண முதலமைச்சர்கள் பதவிப்பிரமாணம்-

வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான முதலமைச்சர்கள் இன்றையதினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். இந்த பதவிப்பிரமாண நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது. வடமேல் மாகாண சபையின் முதலமைச்சராக சட்டத்தரணி தயாசிறி ஜயசேகரவும், மத்திய மாகாண முதலமைச்சராக சரத் ஏக்கநாயக்கவும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். வடமேல் மாகாண அமைச்சர்களாக சனத் நிஷாந்த, சந்திய சமந்தகுமார ராஜபக்ஸ, குணதாச தெஹிகம, தர்மசிறி பண்டார ஹேரத் ஆகியோரும் இதன்போது பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். அத்துடன் மத்திய மாகாண அமைச்சர்களாக பந்துல யாலேகம, ராமசாமி முத்தையா, எதிரிவீர வீரவர்தன, பிரமித பண்டார தென்னக்கோன் ஆகியோர் பதவிப்பிரமாணம் செய்துள்ளனர் என ஜனாதிபதி ஊடக இணைப்புச் செயலாளர் விஜயானந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஐ.தே.கட்சி பொதுச்செயலர் திஸ்ஸ அத்தநாயக்க விலகல்-

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கண்டி குண்டசாலை தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து விலகியுள்ளார் .கடந்த தேர்தலில் கட்சி சந்தித்த தோல்வியை ஏற்றுக்கொண்டு, தாம் இந்த பதவியிலிருந்து விலகுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தோல்வியை கட்சியின் தலைவர்மீது மாத்திரம் சுமத்தாமல், இதனை கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். எனினும் இது தொடர்பான கடிதத்தை கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஏற்றுக் கொண்டாரா இல்லையா? என்பது தொடர்பில் தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.

குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை-அமைச்சர் பீரிஸ்-

இறுதி யுத்தத்தின்போது ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் பதிலளிக்க வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அமெரிக்காவில் வைத்து தெரிவித்துள்ளார். த கார்டியன் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியின்படி, இலங்கைமீது சர்வதேச நாடுகள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையகவும், மேற்குலக நாடுகளும், தமிழ் பிரிவினைவாத அமைப்புகளின் தகவலை மாத்திரம் கொண்டு, இலங்கைமீது பாரபட்சம் காட்டி வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். தம்மீதான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அரசாங்கம் உரிய செயற்பாட்டை முன்வைக்க தவறினால், சர்வதேச விசாரணை ஒன்றுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் எச்சரித்திருந்தார். இதற்கு பதில் வழங்கியுள்ள அமைச்சர், இலங்கை அரசாங்கம் எதனையும் மறைக்கவில்லை எனவும், காணாமல் போனவர்கள் குறித்து ஆராய்வதற்கான ஆணைகுழு ஒன்றை ஜனாதிபதி நியமித்துள்ளமையையும்  அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.