சர்வதேச தரம் வாய்ந்த புகைப்படத்துடன் கடவுச்சீட்டு விநியோகம்-

அடுத்த வருடத்திலிருந்து சர்வதேச தரம் வாய்ந்த புகைப்படத் தன்மையுடன் கடவுச்சீட்டு விநியோகிக்கப்படும் என குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு ஆணையாளர் சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார். அதன்படி, அடுத்த வருடம்முதல் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தால் அங்கீகாரம் பெற்ற நிலையங்களில் மாத்திரமே கடவுச்சீட்டுக்கு புகைப்படம் எடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய புகைப்பட நிலையங்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒக்டோபர் 15ம் திகதி வரை இதற்கான விண்ணப்பங்களைப் பெற முடியும். இது குறித்து 0115 731028 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள முடியும் என சூலானந்த பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

அனர்த்தத்தில் சிக்கிய படகை மீட்க நடவடிக்கை-

இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கிடையேயான கடற்பரப்பில் அனர்த்திற்கு உள்ளான படகை மீட்பதற்காக கடற்படையின் சாகர கப்பல் நேற்றிரவு அனுப்பபட்டுள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். தென்மேற்கு கடற்பரப்பின் 215 மைல் கல் தூரத்திற்கு அப்பால் ‘தினுஜ புதா’ என்ற இயந்திரப் படகு அனர்த்திற்கு உள்ளானதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 65பேர் அவுஸ்திரேலியா நோக்கிப் பயணித்ததாக கூறப்படும் இந்த இயந்திர படகில் ஏராளமான சிறுவர்கள் மற்றும் பெண்கள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி- இரா.சம்பந்தன் சந்திப்பு-

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. வடமாகாண சபைக்கான தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றியீட்டியதையடுத்து இருவருக்கும் இடையில் இடம்பெறுகின்ற முதலாவது சந்திப்பு இதுவாகும். இந்த சந்திப்பின்போது வடமாகாண அமைச்சரவை பதவியேற்பு தொடர்பிலும், மாகாண சபைகளுக்கான காணி அதிகாரங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டதாக தெரியவருகின்றது.

இலங்கை தொடர்பான காணொளிகளுக்கு தடை-

நேபாளத்தில் நடைபெறும் தெற்காசிய திரைப்பட விழாவில் காண்பிக்கப்படவிருந்த இலங்கை தொடர்பான மூன்று பெட்டக காணொளிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கை அடிப்படையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. செனல் போ தயாரித்த ‘த நோ பயர் சோன்’ மற்றும் தமிழ் இயக்குனர் ஒருவர் தயாரித்த ப்ரோக்கன் மற்றும் த ஸ்டோரி ஒப் வன் ஆகிய காணொளிகளுக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.