Posted by plotenewseditor on 6 October 2013
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 6 October 2013
Posted in செய்திகள்
மன்னார் படகு விபத்தில் உயிரிழப்பு அதிகரிப்பு-
மன்னார் சிலாபத்துறை கடலில் நேற்று முற்பகல் படகொன்று கவிழ்ந்ததில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் சிறு பிள்ளையொன்றும் அடங்குவதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். படகு கவிழ்ந்தமை தொடர்பான தகவல் கிடைத்தவுடன் கடற்படையினர் மீட்புப் பணிகளை ஆரம்பித்திருந்ததாகவும், மாலம்பே பகுதியைச் சேர்ந்த சிலரே இந்த விபத்தில் சிக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சுற்றுலாப் பயணம் மேற்கொண்டு படகில் பயணித்த நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காணி அதிகாரம் குறித்து இந்தியா கோரவில்லை-
வட மாகாண சபைக்கு காவற்துறை மற்றும் காணி அதிகாரங்களை வழங்குமாறு இந்தியா எந்த சந்தர்ப்பத்திலும் உத்தியோகபூர்வமாக கோரவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம இதனைத் தெரிவித்துள்ளார். வடமாகாண சபைத் தேர்தல் நிறைவடைந்த பின்னரும், அவ்வாறான கோரிக்கையை இந்திய முன்வைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் நாளை இலங்கைவரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் காணி மற்றும் காவற்துறை அதிகாரங்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூத்த ஊடகவியலாளர் நடா, ஊடகவியலாளர் ரவிவர்மா ஆகியோர் மரணம்-
இலங்கையின் மூத்த ஊடகவியலாளர்களில் ஒருவரான எஸ்.நடராஜா நேற்று சனிக்கிழமை காலமாகியுள்ளார். ‘நடா’ என அன்புடன் அழைக்கப்பட்ட எஸ்.நடராஜா வீரகேசரி பத்திரிகையில் நான்கு தசாப்தகங்களாக பணியாற்றியுள்ளார். 1997ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டுவரை வீரகேசரியின் பிரதம ஆசிரியராக அவர் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை தினக்குரல் பத்திரிகையின் உதவி ஆசிரியராக செயற்பட்ட ரவிவர்மாவும் காலமாகியுள்ளார். நீண்ட காலமாக தினக்குரல் பத்திரிகையில் கடமையாற்றிய இவர் கடந்த சில வருடங்களாக சுகயீனமுற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Posted by plotenewseditor on 6 October 2013
Posted in செய்திகள்
வட மாகாண முதலமைச்சர் சத்தியப் பிரமாணம் குறித்து புளொட் தலைவர் கருத்து-
வட மாகாண முதலமைச்சராக சி.வி விக்னேஸ்வரன் அவர்கள் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்வது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பில் வட மாகாணசபைக்கு தெரிவான புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், வட மாகாண முதலமைச்சர் ஜனாதிபதி முன்பாக சத்தியப் பிரமாணம் எடுப்பது தவறு என கருதுகிறவர்களில் நாங்கள் உட்பட பலர் உள்ளனர். தமிழ் மக்கள் அரசுக்கு எதிராகவே வாக்களித்துள்ளனர். இதன்படி அரசுக்கு எதிரான வாக்கே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு விழந்துள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்வதென்பது தவறு என்ற அபிப்பிராயமே மிகப் பரவலாக இருக்கின்றது. ஆனாலும் சுமூகமான ஆரம்பத்தை நோக்கியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடு இருக்க வேண்டும், ஆரம்பமே முறுகலுடனானதாக இருக்கக்கூடாது என்று சர்வதேச சமூகமும் ஏனைய பலரும் கேட்டிருப்பதாக இரா. சம்பந்தன் அவர்கள் எங்களுக்கு கூறியிருக்கின்றார். எனினும், இந்த விடயத்தை மக்கள் உணர்வுபூர்வமாகப் பார்ப்பதால், கட்சிகளும் அதனையே பிரதிபலிக்கின்றன. இந்நிலையில் தாங்கள் சிங்கள அரசிடம் சரணாகதி அடைந்து விட்டோம் என்ற கருத்து மக்கள் மனதில் ஏற்பட்டுவிடும் என்பதுதான் எமது கவலை என குறிப்பிட்டுள்ளார்.
கணக்கெடுக்கப்பட்ட வாக்குச் சீட்டுக்களே மீட்பு-தேர்தல் ஆணையாளர்-
புத்தளம் புனித அன்ரூஸ் கல்லூரியில் கண்டெடுக்கப்பட்ட புள்ளடியிடப்பட்ட வாக்குச் சீட்டுகள் கணக்கெடுக்கப்பட்டவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் நேற்றுமாலை அந்த வாக்குச் சீட்டுகளின் எண்ணிக்கை கணிப்பீடு செய்யப்பட்டதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்ரிய தெரிவித்துள்ளார். இதன்போது வாக்குகள் மீள எண்ணப்படவில்லை என்றும், வாக்குச் சீட்டுகளின் எண்ணிக்கை மாத்திரமே கணிப்பிடப்பட்டதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். வாக்கெண்ணும் நிலையத்திலிருந்து காணாமல்போன வாக்குச் சீட்டுகளின் எண்ணிக்கையும், கண்டெடுக்கப்பட்ட வாக்குச் சீட்டுகளின் எண்ணிக்கையும் பெரும்பாலும் ஒன்றுக்கொன்று பொருந்துகின்றமை இதன்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆயினும், அந்த வாக்குச் சீட்டுகளில் ஒருதொகுதி காணாமல் போயுள்ளன. அவற்றை பாடசாலை மாணவர்கள் எடுத்துச் சென்றிருக்கலாம் என சந்தேகம் நிலவுகிறது என தேர்தல்கள் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம்
ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட ஏழு நாடுகளைச் சேர்ந்த புதிய தூதுவர்களும் உயர்ஸ்தானிகர்களும் இன்றையதினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் தமது நியமனக் கடிதங்களை சமர்ப்பித்துள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்த அவர்கள் நியமனக் கடிதங்களை கையளித்ததாக ஜனாதிபதியின் பேச்சாளர் கூறியுள்ளார். கட்டார், மியன்மார், பிரான்ஸ், எகிப்து, ஆகிய நாடுகளின் புதிய தூதுவர்களும் சாம்பியா, லெசோத்தோ ஆகிய குடியரசுகளின் உயர்ஸ்தானிகர்களும் இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் கொண்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
சல்மான் குர்ஷித்த கூட்டமைப்பு சந்திப்பு-
இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித் இலங்கை வரும்போது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் குழு ஒன்று அவரை சந்திக்கவுள்ளது. சல்மான் குர்சித் எதிர்வரும் 7ம் திகதி இலங்கை வருகிறார். இந்த நிலையிலேயே அவரை தமிழ் தேசிய கூட்டமைப்பு அவரை சந்திக்கவிருக்கிறது. சல்மான் குர்சித் வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனையும் இந்த விஜயத்தின்போது சந்திக்கவுள்ளார். எதிர்வரும் 07ஆம் 08ஆம் திகதிகளில் இலங்கையில் தங்கியிருக்கும் சல்மான் குர்சித், ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர் மற்றும் வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறியையும் சந்திக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.