மூத்த ஊடகவியலாளர் செல்லையா நடராஜா அவர்களின் மறைவிற்கு புளொட் அனுதாபச் செய்தி-

வீரகேசரி பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் செல்லையா நடராஜா அவர்களின் மறைவானது பத்திரிகைத் துறைக்கு மிகப்பாரிய இழப்பாகும் என தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்(புளொட்) விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1950களில் ஊடகத்துறையில் காலடி எடுத்துவைத்த அமரர் நடராஜா அவர்கள், வீரகேசரி பத்திரிகையில் தம்மை இணைத்துக்கொண்டார். பின்னர் அதன் உதவி ஆசிரியராகவும், அதன் பிறகு செய்தி ஆசிரியராகவும் ஊடகத் துறையில் கடந்த 2005ஆம் ஆண்டுவரையில் பணியாற்றி ஓய்வுபெற்றார். 1983ஆம் ஆண்டில் காணப்பட்ட நெருக்கடியான சூழ்நிலையிலும் அமரர் நடராஜா அவர்கள் துணிச்சலுடன் தமிழ் மக்களின் அவலங்களை வெளிக்கொணர்ந்தவர். அத்துடன் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளையும், தேவைகளையும் உலகிற்குச் சொல்வதில் அயராது பாடுபட்டவர். போராட்ட வழிமுறை மாறியபோது அதற்கான நியாயங்களை கோடிகாட்ட அவர் பின்னின்றதில்லை. அந்தவகையில் எமது அமைப்புடனும் பத்திரிகை தொடர்பாக நெருங்கிய உறவை பேணியவர் என்பதை பசுமையுடன் நினைவு கூருகின்றோம். ஊடகத்துறையில் 49ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அமரர் நடராஜா அவர்கள், தமிழ்மணி விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது என்பவற்றையும் பெற்றார். ஊடகவியலாளர்கள், புத்திஜீவிகள், அரசியல் தலைவர்கள் என பலரினதும் நன்மதிப்பையும் பெற்ற அவர் ஊடகத்துறை பணியிலிருந்து ஓய்வு பெறும்வரையில் பல ஊடகவியலாளர்களையும் உருவாக்கித் தந்தவர். மூத்த ஊடகவியலாளரான அமரர் செல்லையா நடராஜா அவர்களின் இழப்பானது தமிழ் ஊடகத்துறையில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தினர், ஊடகத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந் துயரினைப் பகிர்ந்து கொள்வதோடு, அன்னாரின் குடும்பத்தினர், ஊடகத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.