அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கல் அவசியம்-குர்ஷித்-
இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இன்றுகாலை அலரிமாளிகையில் இச்சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் பற்றி இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கையில் அர்த்தமுள்ள அதிகாரப்பரவல் மேற்கொள்ளப்பட வேண்டும் என சல்மான் குர்ஷித் இதன்போது ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார். 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்ட குர்ஷித் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழு மீண்டும் கூடி பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். இருநாட்டு மீனவர்களுக்கிடையிலான கலந்துரையாடல் மூலம் மீனவர் பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு சல்மான் குர்ஷத் சந்திப்பு-
வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பெற்றுக்கொண்டுள்ள பிரமாண்டமான வெற்றிக்கு இந்தியாவின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிப்பதாக கூறிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், வடக்கு மக்களால் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள இந்த வெற்றியானது இந்தியாவுக்கு அரசியல் ரீதியிலான பல்வேறு பாரிய அழுத்தங்களை பிரயோகித்திருப்பதாகவும் கூறியுள்ளார். இலங்கைத் தமிழர் விடயத்தில் இந்தியா முழுமையான அக்கறை செலுத்தி பங்களிப்பையும் வழங்கத் தயாராகவுள்ளது. தற்போது இடம்பெற்றிருப்பது முதற்படி மாத்திரமே. இங்கு எதுவும் முடிந்துவிடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சல்மான் குர்ஷித்தை கூட்டமைப்பு பிரதிநிதிகள் நேற்று கொழும்பில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதன்போது கூட்டமைப்பினரிடம் விடயங்களை கேட்டறிந்த குர்ஷித் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான பிரதிநிதிகளும், அமைச்சர் குர்ஷித்துடன் இந்திய வெளியுறவுத்துறை பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பொதுநலவாய நாடுகளுக்கான நிதியை குறைக்க கனடா திட்டம்-
இலங்கையில் பொதுநலவாய நாடுகள் அமர்வுகள் நடத்தப்படுவதற்கான எதிரொலியாக பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்கு வழங்கிவரும் நிதி உதவியை குறைக்க கனடா திட்டமிட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்கு வழங்கும் நிதி உதவிகளை கணிசமாக குறைப்பது குறித்து கனடா ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்கு நிதி உதவிகளை அதிகளவில் வழங்கும் நாடுகளின் வரிசையில் கனடா இரண்டாம் இடத்தை வகிக்கின்றது. ஆண்டு தோறும் கனடா 20 மில்லியன் கனேடிய டொலர்களை பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்காக வழங்கி வருகின்றது. இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து திருப்தியடைய முடியாது என கனடா அறிவித்துள்ளது. கனடாவில் வரி செலுத்தும் மக்களின் பணமே இவ்வாறு உதவியாக வழங்கப்படுவதாகவும் அதனை ஆக்கபூர்வமான முறையில் பயன்படுத்த விரும்புவதாகவும் கனடா அறிவித்துள்ளது.
பொதுநலவாய மாநாட்டில் சைப்பிரஸ் ஜனாதிபதி பங்கேற்க தீரமானம்-
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவாகள்; அமர்வி;ல் பங்கேற்பதென்று சைப்பிரஸ் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரிஸ் சைப்பிரஸ் ஜனாதிபதி நிக்கொஸ் எனஸ்ட்டியாடெஸை சந்தித்தபோது இந்த தீர்மானம் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வில், பங்கேற்பதென அவுஸ்திரேலியா, பி;ரித்தானியா போன்ற நாடுகள் அறிவித்துள்ளன. மனித உரிமை நிலவரத்தை காரணம் காட்டி கனடா இலங்கை அமர்வை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.