வடமாகாண சபை சிறப்பாகச் செயற்பட இந்தியா ஒத்துழைக்கும்-குர்ஷித்-

வடக்கு மாகாண சபை சிறப்பாகச் செயற்படுவதற்கும், இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் இந்நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக வாழவும் தம்மாலான உதவிகளை வழங்கத் தயாராகவுள்ளோம் எனவும் இலங்கையில் புகையிரதப் பாதை அபிவிருத்தி, துறைமுக அபிவிருத்தி, பொருளாதாரா அபிவிருத்திகள், கலாசார அபிவிருத்திகள் என்பனவற்றை மேற்கொள்வதற்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்குவோம் எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் நேற்று தெரிவித்துள்ளார். அமைச்சர் குர்ஷித் தனது குழுவினர் சகிதம் நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து மதகுருமார், வர்த்தகர்கள், தொழில்துறை தலைவர்கள், புத்திஜீவிகள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரை யாழ். ரில்கோ விருந்தினர் விடுதியில் வைத்து சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேர்வினின் செயலரும் பாதுகாப்பு அதிகாரியும் வீடு திரும்பல்-

கொழும்பு, மருதானையில் வைத்து கடத்தப்பட்டதாக கூறப்படும் பொதுமக்கள் தொடர்புகள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் இணைப்புச்செயலர் ஜே.டி. திலக்கசிரி மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரியும் வீடு திரும்பியுள்ளதாக பொலிஸ் பதில் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அதிகாரி அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். அவ்விருவரும் தாக்கப்பட்டுள்ளதாகவும், மாலபேயிலிருந்து வீட்டுக்கு ஆட்டோவில் சென்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கொழும்பு டி.ஆர் விஜயவர்த்தன மாவத்தையில் வைத்து இவ்விருவரும் நேற்று கடத்தப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இருவரையும் கடத்தியவர்கள் யார். அவர்களை தடுத்துவைத்து விசாரணைகளை நடத்தியோர் யார் என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

விக்னேஸ்வரன் கடமைகள் பொறுப்பேற்பு-

வடமாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்கள் கடமைகளை இன்றையதினம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். யாழ். கோவில் வீதியில் அமைந்துள்ள முதலமைச்சரின் இல்லத்தில் அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இந்நிகழ்வில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடமாகாண பிரதம செயலர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பொத்துவிலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்-

அம்பாறை மாவட்டம் பொத்துவில் பகுதியில் வீசிய பலத்த காற்று மற்றும் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. இது தொடர்பான விபரங்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருவதாக அம்பாறை மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் எஸ்.எம். ஸியாத் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவுகளை வழங்குவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார். காற்று மற்றும் மழையினால் வீடுகள் சேதமடைந்த நிலையில் இடம்பெயர்ந்தவர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தற்போது தங்கியுள்ளனர். நேற்றுமாலை வீசிய பலத்த காற்றால் 373க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன. இதில் 09 வீடுகள் முழுமையாகவும், 364 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. அத்துடன் இந்த அனர்த்தங்களின் போது, இருவர் காயமடைந்துள்ளனர். இதேவேளை வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் அரச அலுவலகங்களின் கூரைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.