வடமாகாண சபை அமைச்சர்களின் விபரம் வெளியீடு-

வடமாகாண சபைக்கான அமைச்சரவை தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. நேற்று நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டத்தில் இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சர் – தம்பிராஜா குருகுலராஜா சுகாதார அமைச்சர் – பத்மநாதன் சத்தியலிங்கம் விவசாய அமைச்சர் – பொன்னுத்துரை ஐங்கரநேசன் உள்ளுராட்சி அமைச்சர் – பாலசுப்பிரமணியம் டேனிஸ்வரன் அவைத் தலைவர் – கந்தையா சிவஞானம், பிரதி அவைத் தலைவர் – அன்ரனி ஜெகநாதன் ஆகியோரின் பெயர்களே வெளியிடப்பட்டுள்ளன. நேற்று நடைபெற்ற இக் கூட்டத்தில் வடமாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, எம்.ஏ சுமந்திரன் ஆகியோர் மாத்திரமே கலந்துகொண்டிந்தமை குறிப்பிடத்தக்கது.

வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக கமலேந்திரன் தெரிவு-

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கந்தசாமி கமலேந்திரன் வடமாகாண சபையின் எதிர்க் கட்சித் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்டு மாகாணசபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட கந்தசாமி கமலேந்திரன் எதிர்க்கட்சித் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக நேற்று ஈ.பி.டி.பி அறிவித்துள்ளது. இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பொதுச் செயலாளரினால் ஆளுநருக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஈ.பி.டி.பி மேலும் குறிப்பிட்டுள்ளது.

பிரித்தானியாவில் இலங்கையர் கைது-

இலங்கையர் உள்ளிட்ட ஆறுபேர் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். விஸா காலம் நிறைவடைந்த நிலையில், பிரித்தானியாவில் தங்கியிருந்த குற்றத்திற்காகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். லங்கேசியர் பகுதியில் வைத்தே இந்த இலங்கையர், குடிவரவுத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகரம் அறிவித்துள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்ளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையரின் கைது தொடர்பில் இலங்கை தூதரகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.