வட மாகாண சபை தவிசாளர், அமைச்சர்கள் தெரிவு தொடர்பில் புளொட் தலைவரும், வட மாகாணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் கருத்து-

வட மாகாணசபை தவிசாளர் மற்றும் அமைச்சர்களின் பெயர்கள் வெளியாகியிருக்கும் நிலையில் இது தொடர்பில் பி.பி.சி செய்தியாளர் புளொட் தலைவரும், வட மாகாணசபை உறுப்பினருமான திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களைத் தொடர்புகொண்டு இதுபற்றி கேட்டபோது,

மக்களைப் பொறுத்தமட்டில் உணர்ச்சிபூர்வமாக மிகப் பெருவாரியாக இரண்டு விசயங்களுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்துள்ளார்கள். அது அவர்கள் இந்த ஒற்றுமையை வலியுறுத்துவதற்கும் தங்களுடைய உணர்வுகளை வெளிக்கொணர்வதற்காகவுமே. தேர்தல் முடிந்து ஐந்து கட்சிகளும் கலந்துகொண்ட முதலாவது கூட்டத்திலே கொள்கை ரீதியாக ஓர் உடன்படிக்கையை கண்டுகொண்டோம். நாலு கட்சிகளுக்கும் ஒவ்வொரு அமைச்சுப் பதவியையும், திரு.ஆனந்தசங்கரி அவர்களை போனஸ் ஆசனம் அதாவது மேலதிக ஆசனத்தின் ஊடாக கொண்டுவந்து அவரை இந்த அவைத் தலைவர் பதவிக்கும் வைக்க முடியும் என்ற கோரிக்கையை நான்கு கட்சிகள் மிக வலுவாக முன்வைத்தபோது, கொள்கை ரீதியில் அது ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பின்பு கொஞ்சம் கொஞ்சமாக மாறி அவர் வெளியிலே விடப்பட்டார். இப்போது கடைசியாக தமிழரசுக் கட்சி தங்களுக்கு இரண்டு ஆசனங்களையும் மற்றைய இரண்டு ஆசனங்களை ஈ.பி.ஆர்.எல்.எவ் இற்கும் ரெலோவிற்கும் கொடுத்துவிட்டு அதிலேகூட ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியாலோ அல்லது ரெலோ கட்சியாலோ கூறப்பட்டவர்களை விடுத்து தாங்களே ஆட்களையும் தெரிவுசெய்து நிரப்பியிருக்கின்றார்கள்.

இது ஒரு ஆரோக்கியமான ஆரம்பமாக எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால் எங்கள் கட்சிகளிடையே ஒரு ஒற்றுமை நிலவுவதன் மூலம்தான் அந்த மக்களுடைய அதாவது அவர்கள் என்னத்தை வேண்டி இந்த தேர்தலிலே வாக்களித்தார்களோ அதை நாங்கள் நிறைவேற்ற முடியும்.

இந்த மாகாண சபையிலே இருக்கக்கூடிய முக்கிய பொறுப்புக்கள் ஐந்து கட்சிகளுக்கும் பகிரப்படுகின்ற போதுதான், ஒன்று அந்தக் கட்சிகளிடையே தமிழ் மக்களிடையே இருக்கின்ற அந்த ஒற்றுமையை நாங்கள் வலியுறுத்த முடியும்.

மற்றையது, இந்தக் கட்சிகளும் தாங்களும் இதிலே ஒரு பங்காளிகளாக ஒரு சமத்துவமாக இருக்கிறோம் என்பதை உணர்வதன்மூலம் தான் அவர்களுடைய பங்களிப்பும் மிகப் பெரியளவிலே இருக்கமுடியும். இதுதான் அதிலே முக்கியமேயொழிய இந்தப் பதவி, அமைச்சுப் பதவி என்பன முக்கியமான விசயமாக எனக்குத் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.