யாழில் பத்திரிகையாளர் மாநாடு-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் இன்றுமுற்பகல் 10.30அளவில் யாழ்ப்பாணத்தில் பத்திரிகையாளர் மாநாடொன்றினை நடத்தியிருந்தனர்.
இங்கு உரையாற்றிய இவர்கள், தமிழரசுக் கட்சியின் தன்னிச்சையான போக்கைக் கண்டிக்கும் நோக்கிலும், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலுமே நாம் நேற்றைய சத்தியப் பிரமாண நிகழ்வில் பங்கு பற்றவில்லை. இதனை வட மாகாண சபையின் செயற்பாடுகளுக்கு குந்தகமதாக இருப்பதாகவோ மாகாண சபையை பகிஸ்கரிப்பதாகவோ கருதக்கூடாது. தமிழ் மக்கள் எங்களுக்கு தந்த ஆணையை மதிக்கின்றோம். நாம் வடக்கு மாகாண சபையை தனியே மாகாண சபையாக பார்க்கவில்லை. ஒட்டுமொத்த தமிழ் மக்களின் தீர்வுக்கான ஆரம்பப் புள்ளியாகவே பார்க்கின்றோம்.
தமிழ் மக்கள் தங்கள் ஒற்றுமையை காட்டி உள்ளார்கள். நாம் அவர்களுக்கு எமது ஒற்றுமையை காட்ட வேண்டும். ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்த நாம் அனைவரும் கடுமையாக உழைப்போம் என்று தெரிவித்துள்ளனர்.
அத்துடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழவில் தாம் பங்குபற்றாமல் விட்டது வட மாகாணசபையைப் புறக்கணிப்பதாகவோ, வட மாகாணசபையில் பங்குபற்றாமல் விட்டதாகவோ அர்த்தமில்லை என்றும், தாம் தொடர்ந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்களாக இருப்பதுடன், மாகாண சபையின் ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் முழுமையாக பங்குபற்றி மகாணசபையை திறம்பட செயற்பட வைப்போம் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் எம்.கே. சிவாஜிலிங்கம் ஆகியோர் மேலும் தெரிவித்துள்ளனர்.