அரசியல் காரணங்களால் சத்தியப்பிரமாண நிகழ்வில் பங்கேற்கவில்லை-குணசீலன்-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களின் நேற்றைய பதவிப்பிரமாண நிகழ்வில் தான் பங்கேற்காமைக்கு அரசியல் ரீதியாக பல காரணங்கள் உள்ளதாக ரெலோ சார்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்டு வடமாகாண சபைக்கு தெரிவான வைத்தியக் கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிடுள்ள அறிக்கையில், யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டமைப்பின் பதவியேற்பு நிகழ்வில் நான் கலந்து கொள்ளாமைக்கு எனது மனைவி விபத்தில் சிக்கியதே காரணமென வெளியான செய்திகளில் எவ்வித உண்மைகளும் இல்லை. எனது மனைவி அவ்வாறான விபத்தில் சிக்கவுமில்லை. நான் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ளாமைக்கு அரசியல் ரீதியாக பல காரணங்கள் உள்ளன என்று கூறியுள்ளார்.
இறுதிப் போரில் மக்களை காக்கும் யோசனை ஏற்கப்படவில்லை-ஐ.நா பேச்சாளர்-
இலங்கையின் இறுதிக்கட்ட போரின்போது பொதுமக்கள் பாதுகாப்பு குறித்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் யோசனையை அரசாங்கம் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூனின் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். இறுதிப் போர் இடம்பெற்ற காலத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு வலயங்களை அறிமுகம் செய்வது குறித்து ஐ.நா தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தது. எனினும், அரசாங்கம் இந்த யோசனையை முழுமையாக அமுல்படுத்தவில்லையென அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு செயற்பட்டு வந்ததுடன் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வலயங்களை அறிவிக்குமாறு வலியுறுத்தியும் வந்தது. போரை நிறுத்துமாறும், பாதுகாப்பு வலயங்களை உருவாக்குமாறும் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை இலங்கை அரசாங்கம் உரிய முறையில் அமுல்படுத்தத் தவறியது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இன்னர் சிற்றி பிரஸ் ஊடகத்திற்கு அளித்த விசேட செவ்வியின்போதே பர்ஹான் ஹக் இதனைக் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை: திஸ்ஸ விதாரண-
தேசிய பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கமும் தனித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை. மாறாக பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்வதன் மூலமே தீர்வு என்பது சாத்தியமாகும் என அமைச்சரும் முன்னாள் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். உலகில் இதுபோன்ற உள்நாட்டு பிரச்சினைகள் நிலவிய நாடுகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து ஒரு மேடையில் கூடி பேச்சுவார்த்தை நடத்தியே தீர்வு காணப்பட்டுள்ளது. தனித்து இரு தரப்புக்கள் பேச்சுநடத்தித் தீர்வு எட்டப்படுவது சாத்தியமற்றது எனவும் அவர் கூறியுள்ளார்.
வடமராட்சி கடல் கொந்தளிப்பில் 40ற்கும் மேற்பட்ட படகுகள் சேதம்- வடமராட்சி கடலின் மணற்காட்டுபகுதியில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் பெருமளவு சேதம் ஏற்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு 12 மணியளவில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் நாற்பதிற்கும் மேற்பட்ட மீன்பிடிப்படகுகளும் வலைகளும் நீரினுள் அடித்து செல்லபட்டுள்ளது. இதனால் மீன்பிடியை வாழ்வாதாரமாக கொண்ட அப்பகுதி மக்கள் தொழிலை இழந்துள்ளனர். மேலும் மீட்கப்பட்ட படகுகள் பாவனைக்குதவாத வகையில் உள்ளது எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.