கூட்டமைப்பினால் சுயாட்சியை உறுதிசெய்ய முடியும்-இந்தியா-
தமிழ் தேசியக் கூட்டமைப்பினால், இலங்கையில் சிறுபான்மை மக்களின் சுயஆட்சியை உறுதிசெய்ய முடியும் என்று, இந்திய மத்திய நிதித்துறை அமைச்சர் பீ.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 25 வருடங்களுக்குப பின்னர் நடத்தப்பட்ட வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வரலாற்று ரீதியான வெற்றியை பதிவுசெய்துள்ளது. இது 13ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக சிறுபான்மை மக்களுக்கான அரசியல் தீர்வுக்கான புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. அதேநேரம், மாகாணங்களுக்கான சுயஆட்சி, அதிகாரப்பகிர்வு, சமஉரிமை மற்றும் தமிழர்களுக்கும், ஏனைய சிறுபான்மை மக்களுக்கான சுய மரியாதை போன்ற விடயங்களை பாதுகாத்துக் கொள்ளும் இயலுமை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இருக்கிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
பக்கச் சார்பாக செயற்படவில்லை-கமலேஷ் சர்மா-
இலங்கை விடயத்தில் தாம் பக்க சார்பாக செயற்படவில்லை என, பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச்செயலாளர் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். கமலேஷ் சர்மா தமது அதிகாரத்தை பயன்படுத்தி, இலங்கை அரசாங்கத்தை பாதுகாக்க முற்படுவதாக கனடா குற்றம் சுமத்தியிருந்தது. இந்த குற்றச்சாட்டு தம்மீது முன்வைக்கப்பட்ட தனிப்பட்ட குற்றச்சாட்டாகவே தாம் கருதுவதாக கூறியதுடன், எனினும் தம்மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள அவர், தாம் எந்த தரப்புக்கும் சார்பாக செயற்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்.தேவி ரயிலில் பாய்ந்து தற்கொலை-
கிளிநொச்சியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த யாழ்.தேவி ரயில் முன் பாய்ந்து தாயொருவரும் மகளும் உயிரிழந்துள்ளனர். வெயங்கொட மற்றும் பல்லேபொல ரயில் நிலையங்களுக்கு இடையில் கீனவல பிரதேசத்தில் இச்சம்பவம் இன்றுபகல் 1மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தாய் ஒருவர் தனது இரண்டு பெண் பிள்ளைகளுடன் ஓடும் ரயில் முன் பாய்ந்துள்ளதாக மத்திய ரயில் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. இதன்போது தாயும் ஒரு மகளும் ரயிலுடன் மோதி உயிரிழந்த நிலையில் ஒரு மகள் தப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.