Header image alt text

அவுஸ்திரேலியாவிலிருந்து மேலும் 33 பேர் திருப்பி அனுப்பிவைப்பு-

அவுஸ்திரேலியாவில் புகலிடம்கோரி அகதிகளாக சென்றவர்களில் மேலும் 33 பேர் இன்று விமானம் ஊடாக நாடுதிரும்பியுள்ளனர். அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவிலிருந்து விசேட விமானத்தின் மூலமாக பலத்த பாதுகாப்புடன் இவர்கள் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இக்குழுவில் 8 பெண்களும் 25 ஆண்களும் உள்ளதுடன், சிறுவர்கள் எட்டுபேரும் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் திருகோணமலையிலிருந்து மீன்பிடி படகுகள் மூலமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்றதாகவும், அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து கிடைக்காததையடுத்து திருப்பியனுப்பப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, அவுஸ்திரேலியாவிலிருந்து நேற்றும் 40பேர் திருப்பியனுப்பப்பட்டிருந்தனர்.

நாடு திரும்பியோர்மீது குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை-

அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக சென்று, அங்கு புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 40 பேர் நேற்றையதினம் மாலையில் விமானம்மூலம் இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர். இவர்களில் 12 பெண்களும், 08 சிறார்களும் அடங்குவதாக பொலிஸ் பதில் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார். இவர்கள் கடந்தமாதம் 7ஆம் திகதி படகுமூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்றிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இக் குழுவினர் தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இவர்களில் 12 பெண்களும், 08 குழந்தைகளும் அடங்குவதுடன்,. இவர்களை இன்றையதினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிககை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. 

இந்தியா செல்வோர் தொடர்பில் கூடுதல் கவனம்-

இந்தியாவின் சென்னை, மும்பை மற்றும் மதுரை ஆகிய பகுதிகளுக்கு விமானம் மூலம் பயணிப்பவர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளதாக இலங்கை சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது. சட்டவிரோதமான முறையில் இந்தியாவிற்கு தங்கத்தை கடத்தும் சம்பவங்களை கருத்திற்கொண்டு, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளரும், சுங்கப் பணிப்பாளருமான லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார். இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இவ்வாறான சுமார் 50 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.  கடந்த இரு மாதங்களில் நாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் தங்கத்தை கொண்டுசெல்லும் நடவடிக்கை 20 தடவைகள் முறியடிக்கப்பட்டது. சிலர் மிகவும் சூட்சுமமான முறையில் தங்கத்தை தமது உடலில் மறைத்து எடுத்துச்செல்கின்றமையை கடந்த காலங்களில் கண்டறிய முடிந்தது. அது தொடர்பில் சுங்க உத்தியோகத்தர்கள் அதிக கவனம் செலுத்தியுள்ளனர். இலங்கையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைதல், இந்தியாவில் தங்கத்திற்கு விதிக்கப்பட்டுள்ள அதிகவரி உள்ளிட்ட சில காரணங்களால் இந்தியாவிற்கு சட்டவிரோதமான முறையில் தங்கம் கொண்டுசெல்லும் நடவடிக்கை அதிகரித்துள்ளது என சுங்க ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழிற்கான ரயில் பாதையின் இரண்டாம் கட்ட இணைப்பு-

யாழ்ப்பாணத்துக்கான ரயில் பாதையின் இரண்டாம் கட்ட இணைப்பு விரைவில் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது இதன்படி, கிளிநொச்சிக்கும் பளைக்கும் இடையிலான ரயில் பாதை திறக்கப்படவுள்ளது. ஏற்கனவே ஓமந்தையில் இருந்து கிளிநொச்சி வரையிலுமான ரயில் பாதையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அண்மையில் திறந்து வைத்துள்ளார் இந்நிலையில் கிளிநொச்சியில் இருந்து பளை வரை இணைக்கப்படவுள்ள பாதையிலும் ரயில் சேவையை நடத்தக்கூடியதாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் பட்டதாரிப் பயிலுநர்களுக்கு நிரந்தர நியமனம்-

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 255 பட்டதாரிப் பயிலுநர்களுக்கு நிரந்தர நியமனங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன. பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் மேற்படி நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. மன்னார் மாவட்ட செயலகத்தின் ஜெயிக்கா மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் ரிசாட் பதியுதீன், மன்னார் அரசாங்க அதிபர் எம்.வை.தேசப்பிரிய, மேலதிக அரசாங்க அதிபர் நந்தினி ஸ்ரான்லி டி மேல், உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.பரமதாஸ், மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.சியான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வட மாகாணசபையின் கன்னியமர்வு-
வட மாகாண சபையின் கன்னியமர்வு எதிர்வரும் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ். கைதடியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அலுவலகத்தில் இந்த அமர்வு நடைபெறவுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பின் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.