Header image alt text

கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட வேட்பாளர் க.சிவநேசன் (பவன்) ஊடக அறிக்கை-

bawan 2திரு.கந்தையா சிவநேசன் (பவன்) ஆகிய நான் வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிட்டேன். இந்தவகையில், நடந்து முடிந்த மாகாணசபைத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் எனக்கு ஒன்பதாயிரம் (9,000) வரையான விருப்புவாக்குகளை அளித்த மக்கள் அனைவருக்கும் என் இதையம் நிறைந்த நன்றிகளைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

நான் அந்த மககளுக்கு நிதியையோ, அன்பளிப்புப் பொருட்களையோ வழங்காமல் எமது கட்சியின் கொள்கைகளையும் இன்றைய எமது நிலைப்பாட்டையுமே முன்வைத்திருந்தேன;. அந்த மக்கள் அதனை ஏற்றுக்கொண்டு தங்கள் பெறுமதிமிக்க வாக்குகளை வழங்கி எனக்கு ஆதரவுகளை அள்ளி வழங்கினார்கள். அந்த மக்கள் கொண்டிருந்த கொள்கைப்பற்றும், உறுதியான நிலைப்பாடும் இதன்மூலம் தெளிவாக்கப்பட்டது. Read more

வவுனியாவில் கூட்டமைப்பு வேட்பாளர்கள் சத்தியப்பிரமாணம்-

தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் வட மாகாணசபை உறுப்பினர்கள் சிலர் இன்று வவுனியாவில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து இந்த சததியப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றுள்ளது. கூட்டமைப்பில் ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் தெரிவான வட மாகாணசபை உறுப்பினர்களான க.சர்வேஸ்வரன், ம.தியாகராஜா, கலாநிதி எஸ்.சிவமோகன் ஆகியோர் வவுனியா சிரேஷ்ட சட்டத்தரணி க.தயாபரன் முன்னிலையில் சத்திரயப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். இந் நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் உள்ளிட்ட மேலும் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச மன்னிப்புச்சபை கண்டனம்-

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த பிரித்தானிய மேலோர் சபையின் உறுப்பினர் ரோகன் வெளியிட்ட கருத்துக்கு, சர்வதேச மன்னிப்பு சபை கண்டனம் வெளியிட்டுள்ளது. மன்னிப்பு சபையால் விடுக்கப்பட்டுள்ள விசேட அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இலங்கைவந்த அவர், இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் சீராக இருப்பதாகவும், வடக்கில் இராணுவ பிரசன்னம் கூறப்பட்ட அளவில் இல்லை என்றும் தெரிவித்திருந்தார். இதற்கே இந்த கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்களை கணக்கெடுக்க முடிவு-

யுத்தகாலத்தில் ஏற்பட்ட மரணங்கள், காணாமல் போனவர்கள் மற்றும் ஆட்களுக்கும் சொத்துகளுக்கும் உண்டான சேதங்கள் தொடர்பாக ஒரு விசேட கணக்கெடுப்பை அரசாங்கம் நடத்தவுள்ளது. இந்த கணக்கெடுப்பு நவம்பர் 30 தொடக்கம் டிசெம்பர் 10 வரை நடைபெறும் என்று பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடக்கவுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வுக்கு முன் நல்லிணக்க ஆணைக்குவின் பரிந்துரைங்களின்படி நட்டஈடு வழங்குவதற்காக அரசாங்கம் இந்த கணக்கெடுப்பை நடத்தவுள்ளது. இந்த விசேட கணக்கெடுப்பு 1983இலிருந்து மே 2009இல் யுத்தம் முடிவடைந்த காலத்தினை அடக்கியதாக இருக்கும். இந்த கணக்கெடுப்பு நவம்பர் 30 தொடக்கம் டிசெம்பர் 10 வரை நடைபெறும். வீட்டிக்கு வரும் கிராம அதிகாரிக்கு சரியான தகவலை வழங்குவதன் மூலம் பொதுமக்கள் இக் கணக்கெடுப்புக்கு உதவ வேண்டுமென பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

பேனை வடிவிலான வெளிநாட்டு கைத்துப்பாக்கி மீட்பு-

பேனை வடிவிலான பிஸ்டல் ரக துப்பாக்கியை புத்தளம் மாவட்டத்தின் சிலாபம் பொலிஸார் மீட்டுள்ளனர். இந்த துப்பாக்கி வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டதென்று விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முந்தல் பிரதேசத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட இருவரை பொலிஸார் நேற்றையதினம் கைது செய்தனர். இவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போதே பேனை வடிவிலான பிஸ்டல் ரக துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.

சம்பூர் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துமாறு நீதிமன்றம் பணிப்புரை-

திருகோணமலை சம்பூர் பகுதியில் அனல் மின்நிலையம் அமைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ள உயர்நீதிமன்றம், அப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக்குடியமர்த்த துரித நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்துக்கு பணித்துள்ளது. 2006ஆம் ஆண்டில் இடம்பெயர்ந்த தம்மை தமது இருப்பிடங்களில் மீளக்குடியமர நடவடிக்கை எடுக்குமாறு கோரி சம்பூர்வாசிகள் சிலரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்தபோதே இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. சம்பூர் மக்களில் பெரும்பாலானோர் மீளக்குடியமர்த்தப்பட்டு உள்ளதாகவும், மிகச்சிலரே இன்னமும் குடியமர்த்தப்படவில்லை என்றும் கூறிய அரசதரப்பு சட்டத்தரணி, அவர்களையும் மீளக் குடியமர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதற்கான இடங்கள் அடையாளம் காணப்பட்டுவிட்டதாகவும் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார். ஆனால், அதனை நிராகரித்த மனுதாரர் தரப்புச் சட்டத்தரணி, சுமார் 200 குடும்பங்கள் இன்னமும் குடியமர்த்தப்படவில்லை என்றும் அதற்கான இடங்கள் அடையாளங்காணப்படவில்லை என்றும் கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதியரசர்கள் மக்களை குடியமர்த்துவதற்கான இடங்களை அடையாளம் காட்ட உடன் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.