சி.வி விக்னேஸ்வரன் மீண்டும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம்-

வட மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமது அமைச்சுப் பொறுப்புக்களுக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று முற்பகல் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இந்த சத்தியப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றுள்ளது. வடக்கு முதல்வராக தெரிவாகியுள்ள சி.வி.விக்னேஸ்வரன், கடந்தவாரம் ஜனாதிபதி முன்னிலையில் முதலமைச்சராகவும் மாகாணசபை உறுப்பினராகவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். இந்நிலையிலேயே தமக்கு பொறுப்பான அமைச்சுக்களுக்காக அவர் இன்று ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

தலைமைப் பதவியை இலங்கைக்கு வழங்கக் கூடாதென அறிவித்தல்-

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைமைப் பதவியை இலங்கைக்கு வழங்கக் கூடாது என மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் இரண்டாண்டு காலப்பகுதிக்கு இலங்கைக்கு பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைமைப் பதவி இலங்கைக்கு வழங்கப்பட உள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் 15ஆம் திகதிமுதல் 17ஆம் திகதி வரையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு இலங்கையில் நடைபெறவுள்ளது. இலங்கை அமர்வுகளின் நிகழ்ச்சி நிரல் குறித்து இன்றும் நாளையும் லண்டனில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் அமைச்சர்கள் மாநாட்டில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது, இலங்கைக்கு தலைமைப் பதவி வழங்குவது பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகள் கோட்பாடுகளை பாதுகாப்பது தொடர்பில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் என மனித உரிமை கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது. யுத்த குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட ஓர் நாட்டுக்கு தலைமைப்பதவி வழங்குவது பொதுநலவாய நாடுகள் அமைப்பின் நன்மதிப்பிற்கு குந்தகம் ஏற்படுத்தக் கூடுமென மனித உரிமைக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. உரிமை மீறல்களில் ஈடுபடும் நாட்டின் உறுப்புரிமையை இரத்து செய்யும் அதிகாரம் பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்கு காணப்படுவதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

முல்லைத்தீவில் இதுவரை 39,616 குடும்பங்கள் மீள்குடியமர்வு-

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2009ஆம் ஆண்டுமுதல் இவ்வாண்டு ஆகஸ்ட் 31ஆம் திகதிவரையான காலப்பகுதயில் 36ஆயிரத்து 616 குடுமப்ங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 26ஆயிரத்து 808பேர் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது, நண்பர்கள், உறவினர் வீடுகளிலும், வவுனியா முகாம்களிலும் இருந்தவர்களே இவ்வாறு மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். துணுக்காய் பிரதேசசெயலர் பிரிவில் 3,598 குடும்பங்களைச் சேர்ந்த 11ஆயிரத்து 258பேரும், மாந்தை கிழக்கு பிரதேசசெயலர் பிரிவில் 2,701 குடும்பங்களைச் சேர்ந்த 8ஆயிரத்து 620பேரும், ஓட்டுசுட்டான் பிரதேசசெயலர் பரிவில் 5,517 குடும்பங்களைச் சேர்ந்த 17ஆயிரத்து 998பேரும், கரைதுறைப்பற்று பிரதேசசெயலர் பிரிவில் 12,668குடும்பங்களைச் சேர்ந்த 40ஆயிரத்து 333பேரும், புதுக்குடியிருப்பு பிரதேசசெயலர் பிரிவில் 11,796குடும்பங்களைச் சேர்ந்த 37ஆயிரத்து 410பேரும், மணலாறு (வெலிஓயா) பிரதேசசெயலர் பிரிவில் 3,336குடும்பங்களைச் சேர்ந்த 11ஆயிரத்து 189பேரும் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மன்மோகனுக்கு பதிலாக அன்சாரி, குர்ஷித் பங்கேற்பு-

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பலத்த எதிர்ப்புகளைத் தொடர்ந்து, இலங்கையில் அடுத்தமாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் தெரிவிப்பதுடன், அவருக்கு பதிலாக துணை ஜனாதிபதி அன்சாரி, அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோர் பங்கேற்கவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இறுதியுத்தத்தின் மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கைமீது கண்டனங்;கள் தெரிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில் நவம்பர் 10ம் திகதி, இலங்கையில் பொதுநலவாய உறுப்பு நாடுகளின் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மன்மோன் சிங்குக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழகத்தில் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பொதுநலவாய மாநாட்டில் பிரதமர் பங்கேற்க கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையிலேயே பிரதமருக்குப் பதிலாக துணை ஜனாதிபதி மற்றும் அமைச்சர் குர்ஷித் ஆகியோர் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் சிறுவர் இல்லம் மூடப்பட்டது-

வவுனியா எடஓகஸ்கட பிரதேசத்தில் விஹாரையில் இயங்கி வந்த சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த 4 சிறுவர்கள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர். குறித்த சிறுவர் இல்லத்தில் சிறுவர்கள் பல்வேறு துஸ்பிரயோகத்திற்கு உள்ளாவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எடஓகஸ்கட சுதர்மாராம விஹாரையில் இந்த சிறுவர் இல்லம், விஹாராதிபதியின் பொறுப்பில் இயங்கி வந்தது. இந்நிலையில், கடந்த 9ஆம் திகதி சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் 1929 என்ற அவரச தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமையவே இந்த சிறுவர் இல்லம் மூடப்பட்டுள்ளது. குறித்த சிறுவர் இல்லத்தின் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுவர் ஒருவர் வவுனியா மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்;டிருந்தது. இந்த முறைப்பாட்டை சிறுவர் அதிகாரசபை உறுதிசெய்த நிலையில், நீதிமன்ற உத்தரவின்பேரில் அதிகாரசபை, சிறுவர்களை பொறுப்பேற்றுள்ளது.

காணாமற் போனோர் தொடர்பில் 3 தினங்களில் 1,500 பேர் பதிவு-

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் கடந்த மூன்று தினங்களாக காணாமற் போனோரைப் பதிவுசெய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. காணாமற்போன 1,500 பேர் பற்றிய விவரங்கள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன. முல்லைத்தீவில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பதிவு நடவடிக்கைளைக் குழப்பும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டதாக தெரியவருகின்றது. இந்தப் பதிவு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இன்று யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் என்று மன்னார் பிரஜைகள் குழுவினர் தெரிவித்துள்ளனர். 1990ஆம் ஆண்டிலிருந்து 2009ஆம் ஆண்டு வரையில் காணமல் போனவரகள் தொடர்பிலான விவரங்கள் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் திரட்டப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பயணம் மேற்கொள்ளும் மன்னார் பிரஜைகள் குழுவினர் காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை சகல இடங்களிலும் பதிவு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கமைய காணாமற்போனோரின் உறவுகள் பொலிஸ் பதிவு, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் செய்யப்பட்ட பதிவுகளின் பிரதிகள் உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு வருமாறு கேட்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட பதிவு நடவடிக்கைகளின்போது 750 பேர் வரையில் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். இதுவரை பதிவு செய்வதற்குத் தவறியவர்கள் இன்று திருமதி என்.கமலநாயகி, இல.16, கச்சேரி கிழக்கு ஒழுங்கை, யாழ்ப்பாணம் என்ற முகவரியில் பதிவு செய்ய முடியும். தொடர்பு கொள்வதாயின் 0212221037 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையில் 500பேர் பதிவுகள் செய்துள்ளனர். பதிவுசெய்யத் தவறியவர்கள் திருமதி யோகராசா கனகரஞ்சினி, இல.59 தொண்டமான் நகர, கிளிநொச்சி என்ற முகவரியில் பதிவுசெய்ய முடியும்.  தொடர்பு கொள்வதாயின் 07780887759 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றுப் முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பதிவு நடவடிக்கைகளில் 325 பேரே பதிவு செய்துள்ளனர். எஞ்சியவர்கள் பதிவு செய்வதற்கு வசதியாக, கள்ளப்பாடு வடக்கு பொதுநோக்கு மண்டபத்திலும், 10 ஆம் வட்டாரம், வற்றாப்பளை, புதுக்குடியிருப்பு (தற்போதைய மாகாணசபை உறுப்பினர் கனகசுந்தரசுவாமியின் வதிவிடம்)  பதிவுகள் இடம்பெறவுள்ளன. இன்று வவுனியா இறம்பைக்குளம். புனித அந்தோனியார் ஆலயத்தில் பதிவுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அத்துடன் நாளை மன்னார் மாவட்டத்தில் பதிவுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இப் பதிவுகள் தொடர்பில் மேலதிக தகவல்களைப் பெற விரும்புவோர மன்னார பிரஜைகள் குழுவின் செயலர சிந்தாத்துரை 0771139897 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.