சர்வதேச விமானங்களை இரத்மலானையில் நிறுத்திவைக்க ஏற்பாடு-
பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டில் பங்கேற்பதற்காக அரச தலைவர்கள் பயணிக்கும் வெளிநாட்டு விமானங்களை இரத்மலானை விமான நிலையத்திலும் நிறுத்தி வைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேவை ஏற்பட்டால் மாத்திரமே இரத்மலானை விமான நிலையத்தை பயன்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.
அழுத்தம் கொடுக்குமாறு மன்னிப்பு சபை கோரிக்கை–
இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அழுத்தம் கொடுக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்பு சபை பொதுநலவாய நாடுகளின் இராஜதந்திரிகளிடம் கோரியுள்ளது. லண்டனில் நேற்று நடைபெற்ற கூட்டத்திலேயே மேற்கண்டவாறு கோரப்பட்டுள்ளது. பொதுநலவாய நாடுகளின் தலைவர்களுக்கான ஆயத்தங்களை ஏற்பாடு செய்யும் முகமாக நடத்;தப்படும் கூட்டம் இன்றையதினமும் நடைபெறவுள்ளது. மனித உரிமை மீறல்களை கண்காணிக்கும் முகமாக புதிய ஏற்பாடு ஒன்றுக்கு பொதுநலவாய நாடுகள் இணக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்பு சபை மேலும் கோரிக்கை விடுத்துள்ளது.
வெளிவிவகார கொள்கை குற்றச்சாட்டுகளை பிரிட்டன் நிராகரித்தது–
இலங்கை தொடர்பான பிரித்தானிய வெளிவிவகார கொள்கை குறித்து முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை, பிரித்தானிய வெளிவிகார திணைக்களம் நிராகரித்துள்ளது. நேற்று முன்தினம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்த பிரித்தானிய நாடாளுமன்றத்தின் வெளிவிவகார பிரிவு, இலங்கை தொடர்பான பிரித்தானியாவின் வெளிநாட்டு கொள்கை தளம்பல் நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் இலங்கையில் தொடர்ந்து மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்ற போதும், அது குறித்து நடவடிக்கை எடுக்க பிரித்தானியா அச்சம் கொண்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது. எனினும் இதனை நிராகரித்துள்ள பிரித்தானியாவின் வெளிவிவகார திணைக்களம், இலங்கை தொடர்பான வெளிநாட்டு கொள்கை பலமானதா? இல்லையா? என்பது, எதிர்வரும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டின்போது தெரியவரும் என குறிப்பிட்டுள்ளது.