காணாமல் போனோர்களின் விபரங்கள் வவுனியாவில் பதிவு-

காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்குத் தேவையான விபரங்களை பெறும் நோக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பான விபரம் திரட்டும் வேலைகள் வவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலய மண்டபத்தில் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு இந்த பதிவினை மேற்கொண்டுள்ளது. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகியவ மாவட்டங்களில் பதிவுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் வவுனியாவில் இப்பதிவு இடம்பெற்றுள்ளது. 1990 தொடக்கம் 2009 வரையான யுத்தத்தின் காரணமாகவும் கடத்தப்பட்டும் காணாமல் போனவர்களினுடைய விபரங்கள் கோரப்பட்டுள்ளன. இதில் காணாமல் போனவர்களது தற்போதைய குடும்பநிலை, எதிர்பார்க்கும் உதவி என பல விபரங்கள் கோரப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. 
 
அவுஸ்திரேலியாவிற்கு செல்லும் இலங்கை அகதிகளில் வீழ்ச்சி-

அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் இலங்கை அதிககளின் எண்ணிக்கை சடுதியாக குறைவடைந்திருப்பதாக அவுஸ்திரேலியாவின் குடிவரவுத்துறை அமைச்சர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார். கடந்த 14 நாட்களில் அவுஸ்திரேலியாவுக்கு மூன்று படகுகள் வந்துள்ளன. எனினும் அவற்றில் 6 இலங்கையர்கள் மாத்திரமே அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார். அவர்கள் தற்போது கிறிஸ்மஸ்தீவில் தங்க வைக்கப்பட்டுள்ளபோதும், அவர்கள் இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு வருகை தருவதற்கு போதிய காரணங்கள் எவையும் இல்லை என அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மலையகத்துக்கு விஜயம் செய்ய வேண்டுமென இளவரசரிடம் கோரிக்கை-

இலங்கை வரவுள்ள பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் மலையக பகுதிகளுக்கு விஜயம் செய்ய வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. சௌமிய இளைஞர் வேலைத்திட்டத்தின் தலைவர் எஸ்.பி.அந்தோனிமுத்து இதற்கான ஏற்பாட்டினை மேற்கொண்டுள்ளார். 150 வருடங்களுக்கு முன்னர் பிரித்தானிய அரசின் கட்டுப்பாட்டில் இலங்கையில் நடைபெற்ற காலனித்துவ ஆட்சியின் கீழ், மலையகத்தில் தேயிலை தொழிலாளர்கள் குடியேற்றப்பட்டனர். அந்த காலப்பகுதியில் அமைக்கப்பட்ட அதே லயன் அறைகளிலேயே தொடர்ந்தும் மலையக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இளவரசர் சார்ள்ஸின் முன்னோர் அமைத்துக் கொடுத்த தோட்டப்பகுதிகளை அவர் நேரில் பார்வையிட வேண்டும் என்று கோரி, எட்டியாந்தொட்டையைச் சேர்ந்த பொதுமக்களின் கையெழுத்து திரட்டை, பாதயாத்திரையாக சென்று கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்தில் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.