மன்னாரில் காணாமல் போனோர் விபரங்கள் சேகரிப்பு-

காணாமல் போனோரின் விபரங்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு வழங்கும் முகமாக மன்னார் பிஜைகள் குழு வட மாகாண முழுவதிலும் விபரங்களை சேகரித்து வருகிறது. இம்மாதம் 14ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இவ் வேலைத்திட்டம் எதிர்வரும் 20ம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதன்படி கடந்த 14ம் திகதி யாழ்ப்பாணத்திலும், 15ம் திகதி கிளிநோச்சியிலும், 16ம் திகதி முல்லைத்தீவிலும், 17ம் திகதி வவுனியாவிலும் காணாமல் போனவர்களின் விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதேவேளை நேற்றுக்காலை மன்னார் புனித செபஸ்ரியார் பேராலயத்தில் காணாமல் போனோரின் விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மன்னார் பிரஜைகள் குழுவின் உப தலைவர் அந்தோனி சகாயம் தலைமையில் நடைபெற்ற குறித்த பதிவுசெய்யும் நிகழ்வில் மன்னார் மாவட்ட தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் இணைப்பாளர் எஸ்.சுனோஸ் சோசை கலந்துகொண்டு விபரங்களை பதிவுசெய்துள்ளார். இதுவரை மன்னார் மாவட்டத்தில் 240 பதிவுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை காணாமல் போனவர்கள் தொடர்பாக 2600 பதிவுகள் செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பிரஜைகள் குழு உப தலைவர் அந்தோனி சகாயம் மேலும் தெரிவித்துள்ளார்.

அதிகாரம் கிடைக்கும் வரை போராடவேண்டும்: மாவை எம்.பி-

தமிழ் மக்கள் தேர்தலில் அளித்திருந்த ஆணைக்கு அமைய வடமாகாண சபைக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை அரசிடமிருந்து பெறுவதற்கு கூட்டமைப்பு போராட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். வலி.மேற்கு பிரதேச சபையின் கட்டிடத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இந்த திறப்பு விழா வலி மேற்கு பிரதேசசபைத் தலைவர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் தலைமையில் நேற்று நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வில் வட மாகாணசபை முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன், கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுரேஸ் பிரேமச்சந்திரன், சரவணபவன், சிறீதரன் மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்ட வட மாகாணசபை உறுப்பினர்களும் பங்குகொண்டிருந்தனர்.

சொத்து விபரங்களை சமர்ப்பிக்கத் தவறுவோருக்கு எதிராக வழக்கு-

நடைபெற்று முடிந்த மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர்களில் சொத்து விபரங்களை சமர்ப்பிக்கத் தவறுவோர்க்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படுமென தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் தோல்வியடைந்த வேட்பாளர்களுக்கு கடிதம்மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை சொத்து விபரங்களை சமர்ப்பிக்காதவர்கள் எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் அது தொடர்பிலான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது. மாகாண சபைகள் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் தேர்தலில் வெற்றியீட்டிய உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்துக்கொள்வதற்கு முன்னரும் தோல்வியடைந்த உறுப்பினர் தேர்தல் நிறைவடைந்த மூன்று மாதங்களுக்கு முன்னரும் தங்களுடைய சொத்து விபரங்களை சமர்பிக்கவேண்டும்.

மட்டக்களப்பில் துப்பாக்கிகள், கிளைமோர் மீட்பு-

மட்டக்களப்பில் ரீ.56 ரக துப்பாக்கிகள் 10, எஸ்.எம்.ஜி.ரக துப்பாக்கி ஒன்று, கிளைமோர் குண்டு ஒன்று என்பன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கரடியனாறு பொலிஸ் பிரிவில் உன்னிச்சை குளத்தின் காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இவை நேற்ற படையினரால் மீட்கப்பட்டுள்ளன. படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகலையடுத்தே இவை மீட்;கப்பட்டுள்ளதாகவும், இதேவேளை, மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ்பிரிவில் கிரான் பிரதேசத்தில் தனியார் காணியொன்றில் இருந்து கிளைமோர் குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது. கிரான் வைரவன் கோயில் வீதியிலுள்ள வீட்டு வளவிலிருந்தே இந்த கிளேமோர் குண்டை ஏறாவூர் பொலிசார் இன்றுகாலை மீட்டுள்ளனர். வீட்டிலுள்ளோர் வளவினை துப்பரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது மர்மப் பொருளொன்று தென்படுவதை கண்ட வீட்டார் இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தனர். இதனையடுத்தே பொலிசார் அதனை மீட்டுள்ளனர். இந்த வெடிபொருட்கள், துப்பாக்கி என்பன புலிகளால் முன்னர் மறைத்து வைக்கப்பட்டவையாக இருக்கலாம் என்று பொலீசார் கூறியுள்ளனர்.

இந்திய துணை ஜனாதிபதியின் விஜயத்திலும் நம்பிக்கையின்மை-

இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டுக்கு இந்தியாவை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் இந்திய துணை ஜனாதிபதி ஹமிட் அன்சாரி கலந்து கொள்வது தொடர்பில் இதுவரை உறுதி செய்யப்டவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தியா சார்பாக இந்திய துணை ஜனாதிபதி ஹமிட் அன்சாரி இம்முறை இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்வார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மாநாட்டில் கலந்து கொள்ளப்போவதில்லை என இந்திய ஊடகச் செய்திகள் தெரிவித்துள்ளன. எவ்வாறாயினும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷித் மாநாட்டில் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.