தமிழ் மக்களின் விடிவு நோக்கிய பயணத்தில் ஒன்றாக செயற்படுவோம்-புளொட் தலைவர் த.சித்தார்த்தன்-

யாழ். வலி.மேற்கு பிரதேச சபையின் கலாசார மண்டபம்  நேற்றுமுன்தினம் (18.10.2013) திறந்து வைக்கப்பட்டது. வலக்கம்பரை முத்துமாரி அம்மன் ஆலயத்திலிருந்து அனறுபகல் இடம்பெற்ற வழிபாடுகளைத் தொடர்ந்து, விருந்தினர்கள் திறப்புவிழா மண்டபத்துக்கு ஊர்வலமாக அழைத்துவரப்பட்டனர். இந்நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை.சேனாதிராஜா, எஸ்..சரவணபவன், சுரேஷ் பிரேமச்சந்திரன், சிறீதரன், வட மாகாண  அமைச்சர்களான த.குருகுலராஜா, பொ.ஐங்கரநேசன், பா.டெனீஸ்வரன், ப.சத்தியலிங்கம், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், பா.கஜதீபன் உள்ளிட்ட வடக்கு மாகாண சபை உறுப்பினர்களும், உள்ளுராட்சி சபைகளின் தலைவர்கள் உறுப்பினர்கள் என பெருமளவிலானோரும் கலந்துகொண்டிருந்தனர். சபைக் கட்டடத்தின் முன்னால் அமைக்கப்பட்ட தமிழ்தாய் சிலை திறந்து வைக்கப்பட்ட பின்னர் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. மதத் தலைவர்களின் ஆசியுரையைத் தொடர்ந்து வடக்கு முதல்வர் மற்றும் பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் உரையாற்றினர். இங்கு உரையாற்றிய புளொட் தலைவரும் வட மாகாண சபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், தமிழ் மக்களின் விடிவை நோக்கிய பயணத்தில் மாகாண சபை உறுப்பினர்கள் 30 பேரும் ஒன்றாகச் செயற்படுவோம் என்று தெரிவித்துள்ளார்.