வைசர் அமரர். வி.சிவசுப்பிரமணியம் அவர்களின் நினைவுப் பேருரை-

untitled-1 untitled-11 z21ss3யாழ். சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் முன்னாள் அதிபர் வைசர் அமரர். வி.சிவசுப்பிரமணியம் அவர்களின் 17ஆவது நினைவுப் பேருரை கந்தையா உபாத்தியாயர் மண்டபத்தில் கல்லூரியின் அதிபர் இ.ஈஸ்வரதாசன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இதன்போது வட மாகாணக் கல்வி விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், வைசர் அமரர் வி.சிவசுப்பிரமணியம் அவர்களின் மகனும், வைத்தியக் கலாநிதியுமான சி.சிவானந்தராஜா, புளொட் தலைவரும், வட மகாhணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டு நினைவுரை ஆற்றியிருந்தனர்.

பொதுநலவாய நாடுகள் குறித்து சந்தேகம்-

அரசாங்கம் எதிர்பார்ப்பதை போல இம்முறை பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தமுடியும் என தாம் நம்பவில்லை என்று புதிய இடதுசாரிகளின் செயலாளர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இந்த மாநாநாட்டை புறக்கணித்தால், இந்த நிலைமை மேலும் தீவிரமடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் நிறைவடைந்த பின் அரசாங்கம் சர்வதேசத்துக்கு வழங்கிய உறுதி மொழிகளை நிறைவேற்றி இருந்தால், இந்நிலைமை ஏற்பட்டிருக்காது என்றும் அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும் இந்திய பிரதமர் இந்த மாநாட்டில் சமூகமளிக்காமை, இந்த மாநாட்டை பாதிக்காது என அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிவேக தபால் சேவை ஆரம்பம்-

புதிதாக அதிவேக தபால் சேவையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த சேவையை பயன்படுத்தி நாட்டின் எந்தவொரு பகுதிக்கும் 24 மணித்தியாலங்களுக்குள் பொருட்கள் மற்றும் கடிதங்களை அனுப்பிவைக்க முடியும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்காக புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய வேன்களை பயன்படுத்தவுள்ளதாக பிரதி தபால் மாஅதிபர் டபிள்யூ.ஏ.ஜி. விக்ரமசிங்க கூறியுள்ளார். புதிய அதிவேக தபால் சேவை நவம்பர் மாதம் முதலாம் திகதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதிவேக தபாலுக்காக ஏற்றுக்கொள்ளப்படும் பொருட்களின் எடை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால் மாஅதிபர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

புத்தளம் – மன்னார் வீதியில் வெள்ளம்-

கடும் மழையால் புத்தளம் – மன்னார் வீதியின் சில பகுதிகளில் பாரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது. புத்தளம் மன்னார் வீதியின் எழுவான்குளம் பகுதியில் சுமார் மூன்று அடி உயரத்திற்கு நீர் நிரம்பியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் புத்தளம் மாவட்ட உதவிப் பணிப்பாளர் கேர்ணல் ஆர்.ஏ.கே.ரணவீர தெரிவித்துள்ளார். இதனால் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். கடும் மழையை அடுத்து எழுவான்குளம் பகுதியின் வீதி நீரில் மூழ்கியுள்ளதாக மன்னார் மாவட்ட இடர் முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எம்.சி.எம்.ரியாஸ் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு பிரஜைகள் மீது தாக்குதல்-

அம்பாறை அறுகம்பை உல்ல பகுதியில் சிலர் மேற்கொண்ட தாக்குதலில் இரு வெளிநாட்டுப் பிரஜைகள் காயமடைந்துள்ளனர். இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறே இந்த தாக்குதலுக்கான காரணம் என தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். நேற்றிரவு நடத்தப்பட்ட இத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்குறுணிப் பிள்ளையாரின் அங்கிகள் திருட்டு-

யாழ். கல்வியங்காடு முக்குறுணிப் பிள்ளையார் கோவிலின் மூலஸ்தான விக்கிரகத்தின் அங்கிகள் நேற்று இரவு  திருடப்பட்டுள்ளன. மேற்படி ஆலயத்தின் கூரையைப் பிரித்துக்கொண்டு உள்நுழைந்த திருடர்கள், 2.5 இலட்சம் ரூபா பெறுமதியான அங்கிகளை திருடிச் சென்றுள்ளதாக மேற்படி ஆலயத்தின் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புதிய தொகுதிகளை உருவாக்குவதற்கு நடவடிக்கை-

உள்ளுராட்சி மன்ற எல்லை மீள்நிர்ணயிப்பு தொடர்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கை எதிர்வரும் சில நாட்களில் வெளியிடப்படவுள்ளது. எல்லை மீள் நிர்ணயிப்பு குழுவின் தலைவர் ஜயலத் ரவி திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றங்களின் எல்லைகளை மீள் நிர்ணயம் செய்யும்போது, புதிய 5000 தொகுதிகள் உருவாக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.